உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு: தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆள் பிடித்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. பழனிசாமி இப்போது தான் தேர்தல் பணியை துவக்கியுள்ளார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., சார்பில் தேர்தல் பணியை ஏற்கனவே துவக்கி விட்டார். தமிழக மக்களுக்கு நற்பணிகளை நான்காண்டுகளாக செய்து முடித்திருக்கிறோம். அதனால், வரும் தேர்தலிலும் நாங்களே வெற்றி பெறுவோம்.டவுட் தனபாலு: நீங்க செய்த நற்பணிகளை தான் மக்கள் பார்த்துட்டு இருக்காங்களே... கிருஷ்ணகிரி, ஓசூர் பக்கத்துல, 13 வயது சிறுவன் கடத்தி கொல்லப்பட்ட வழக்குல, புகார் தந்த பெற்றோரை ஏளனம் செய்தது, திருப்புவனத்துல கோவில் காவலாளியை போலீசாரே அடித்து கொலை பண்ணியது எல்லாம் நற்பணிகள் கணக்குல சேருமான்னு, 'டவுட்' வருதே!வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், 'பா.ஜ.,வும், தி.மு.க.,வும் தான் எங்களின் கொள்கை எதிரிகள்' என கூறி இருக்கிறார். அ.தி.மு.க.,வை அவர் விமர்சித்தாலும், அ.தி.மு.க., மீது தன் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்தவில்லை. கொள்கை எதிரிகள் பட்டியலில், அ.தி.மு.க.,வுக்கு இடம் உண்டா, இல்லையா என்பதை தெளிவுபடுத்தாதது ஏன்? டவுட் தனபாலு: அதாவது, 'பா.ஜ., மட்டும் அங்கில்லை என்றால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்ல'ன்னு நீங்க ஏற்கனவே சொல்லி இருக்கீங்களே... அ.தி.மு.க.,வை விஜய் சீண்டாமல் தவிர்ப்பதை பார்த்தால், அவரது கருத்தும் அதுதான் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுதே!ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ: நான் அரசியலுக்கு வந்தது விபத்து தான். ஆனால், நோக்கத்தை நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டேன். ம.தி.மு.க., துவங்கி, 31 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கட்சிக்கான சுய மரியாதை, அங்கீகாரத்தை பெற்றே தீர வேண்டும். அதற்கு, சட்டசபை தேர்தலில், அதிக 'சீட்' வாங்கி வெற்றி பெற்றே ஆக வேண்டும். டவுட் தனபாலு: அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு எல்லாம் அங்கீகாரம் பெற்று தரவா தி.மு.க.,வினர் கட்சி நடத்துறாங்க... 'கூடுதல் சீட்கள் வேணும்'னு நீங்க அடம் பிடிச்சா, 'தனியா போய், 234 தொகுதிகள்லயும் நில்லுங்க'ன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூலை 08, 2025 17:12

வெற்றியோ, தோல்வியோ, 31 ஆண்டு மூத்த கட்சியான நீங்கள் சும்மா 10/ 20 தொகுதியிலாவது தனித்து நின்று, ஓரிரு இடங்களை பிடித்துக் காட்டி இருக்கிறார்களா? திராவிடக் கட்சிகளின் மீது சவாரி செய்ய நினைத்தால் அவர்கள் கொடுத்ததை வாங்கிக்கொள்ள வேண்டும் கைவிரித்து விட்டாலும், வெற்றிகரமாக வாபஸ் வாங்க வேண்டும்


sugumar s
ஜூலை 08, 2025 12:44

if dmk tells vaiko to con alone, do they have 234 people in their party? there may be hardly few supports of 100s only for them and that too their employees and viswaasis