உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

என்.ஆர்.காங்., கட்சி தலைவரான, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: பா.ஜ.,வுக்கும், எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை. அரசு நிர்வாகத்தில் அடிக்கடி சிறு பிரச்னைகள் ஏற்படுவது இயற்கை தான். அந்த வகையில், இப்போதும் ஒருசில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன; அவற்றை பேசி சரி செய்துள்ளோம். 'பா.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறினால், என்.ஆர்.காங்., சிக்கல்களை சந்திக்க நேரிடும்' என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகிறார். அப்படி எந்த சிக்கலும் எங்களுக்கு ஏற்படாது. டவுட் தனபாலு: யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் முக்கால்வாசி அதிகாரம், மத்திய அரசிடம் தான் இருக்கு... பா.ஜ.,வுடன் நீங்க கூட்டணி வச்சதுல இருந்தே, முழு அதிகாரமும் அந்த கட்சி வசமே போயிடுச்சுன்னு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுறாங்க... ஒரு மேயருக்கு இருக்கிற அதிகாரத்தையாவது, பா.ஜ.,வினர் உங்களுக்கு தர்றாங்களா என்ற, 'டவுட்' தான் வருது!பத்திரிகை செய்தி: சில நாட்களுக்கு முன், திண்டிவனம் அருகே ஓமந்துாரில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நடத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில், அன்புமணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார். இரண்டே நாளில், அவர் அணி மாறியது பரபரப்பாக பேசப்படுகிறது.டவுட் தனபாலு: ஏ.கே.மூர்த்தி, பல வருஷங்களா பா.ம.க.,வில் இருக்காரு... மத்திய இணை அமைச்சராகவும் இருந்திருக்காரு... அப்படிப்பட்டவர் அணி மாறிட்டாரா அல்லது அங்க நடக்கிறதை இங்கயும், இங்க நடக்கிறதை அங்கயும் கண்டறியும் உளவாளியா மாறிட்டாரா என்ற, 'டவுட்'தான் வருது!அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தமிழகத்தில், குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என ஆள வந்துவிட்டனர். அந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 'டாஸ்மாக்'கில் பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூலித்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க., ஆட்சி. தினமும், 1.50 கோடி பாட்டில்கள் விற்பதன் மூலம், ஆண்டுக்கு, 5,400 கோடி ரூபாய் கொள்ளையடிக்கின்றனர். அது ஒரு குடும்பத்துக்கே செல்கிறது. டவுட் தனபாலு: 'டாஸ்மாக்'கில் அடிமட்ட ஊழியர் துவங்கி, உச்சபட்ச அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வரைக்கும் ஊழல் செய்வது, நாலு வருஷம் முதல்வரா இருந்த உங்களுக்கு நல்லாவே தெரியும்... 'இப்படி ஊழலில் ஊறி திளைக்கும் டாஸ்மாக்கை, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இழுத்து மூடுவேன்'னு சொல்ற துணிவு உங்களுக்கு இருக்கா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஜூலை 13, 2025 17:14

வெகு எச்சரிக்கையுடன் டாஸ்மாக் வருமானம் குடும்பத்துக்கு- போகிறது என்று மட்டும் சொல்கிறாரே தவிர அந்த சனியினால் எத்தனை குடும்பம் அழிந்து, வன்முறை, கொலைகள் நிகழ்கிறது நாங்கள் வந்து அதை ஒருவழியாக மூடிவிடுவோம் என்றெல்லாம் 'கனிமொழி கூறிவிட்டு, பல்டி அடித்தது போல் இல்லாமல்' பட்டும் படாமல் பேசும் சாமர்த்தியம் சபாஷ்


Anantharaman Srinivasan
ஜூலை 13, 2025 15:24

எடப்பாடி நான் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மார்க்கை மூடுவேன் என்று கூட சொல்லவேண்டாம். அட்லீஸ்ட் அந்த Extra பத்து ரூபாய் வசூலிப்பபதை நிறுத்துவேன் என்றாவது சொல்லலாமே. ஒருவேளை அந்த Extra 5400 கோடிக்கு ஆசைபடுகிறாறோ.?


Anantharaman Srinivasan
ஜூலை 13, 2025 15:16

ஏ கே மூர்த்தி அங்க நடக்கிறதை இங்கயும், இங்க நடக்கிறதை அங்கயும் சொல்லி ஓற்றன் வேலை செய்தால் ஒருநாள் தர்மயடி கிடைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை