உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக போக்குவரத்து து றை அமைச்சர் சிவசங்கர்: தமிழகத்தின் பிரமாண்ட கட்சி ஒன்று, தங்களுடன் கூட்டணி சேர வருவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சொல்கிறார். அப்படியென்றால், அ.தி.மு.க.,வை விட பெரிய கட்சி என்று எதை சொல்கிறார் என, தெரியவில்லை. இப்படி, அ.தி.மு.க.,வையே கேவலப்படுத்தும் ஒரு தலைவர் தான், அக்கட்சிக்கு பொதுச் செயலராக இருக்கிறார். டவுட் தனபாலு: தமிழகத்தில் உறுப்பினர் எண்ணிக்கையிலும், ஓட்டு வங்கியிலும் அ.தி.மு.க., முதலிடத்திலும், தி.மு.க., இரண்டாம் இடத்திலும் இருப்பது உலகறிந்த உண்மை... இந்த ரெண்டு கட்சிகளை விட பிரமாண்டமான கட்சி என்றால், நடிகர் விஜய் துவங்கியுள்ள, தமிழக வெற்றிக் கழகத்தை தான் பழனிசாமி சொல்றாரா என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?  தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சர்ச்சை எதுவும் இல்லை. தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே புள்ளியில், தேசிய ஜனநாயக கூட்டணியாக இணைந்துள்ளோம். தி.மு.க.,வை அகற்ற வேண்டும் என்பதே நோக்கம். 2026 சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என்பதை அறிவித்து விட்டோம்; இதில், எந்த குழப்பமும் இல்லை. டவுட் தனபாலு: முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என்பதில் எந்த, 'டவுட்'டும் இல்லை... ஆனா, அவருக்கு பக்கத்துலயே துணை முதல்வர் மற்றும் சில அமைச்சர் நாற்காலி களும் உங்க கட்சிக்கு வேணும்னு நீங்க, 'துண்டு' போடுவது தான், எல்லா குழப்பத்துக்கும் துாண்டுகோலா இருக்கு என்பதிலும், 'டவுட்'டே இல்லை!  இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் முத்தரசன்: கடந்த, 2019 லோக்சபா தேர்தல் செலவுக்காக, தி.மு.க., அதனுடைய வங்கி கணக்கில் இருந்து, இந்திய கம்யூ. , கட்சியின் வங்கி கணக்குக்கு, 15 கோடி ரூபாய் அனுப்பியது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத் துக்கு, தி.மு.க.,வும், எங்களுடைய கட்சியும் கணக்கு கொடுத்து உள்ளது. இந்த விஷயத்தில் அ.தி.மு.க., விஷம பிரசாரத்தை தொடர்ந்தால், அ.தி.மு.க.,வின் பண அரசியல் குறித்து, நாங்களும் விமர்சிப்போம். டவுட் தனபாலு: கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், இரண்டு தொகுதியில் தான் நீங்க போட்டியிட்டீங்க... அப்ப இருந்த தேர்தல் கமிஷன் விதிப்படி, ஒரு லோக்சபா தொகுதிக்கு, 70 லட்சம் ரூபாய் தான் செலவு செய்யணும்... அப்படி பார்த்தா, 1.40 கோடி தான் தேவைப்படும்... ஆனா, தொகுதிக்கு, 7.50 கோடி வீதம், 15 கோடி ரூபாயை செலவழித்த நீங்க எப்படி ஏழை பங்காளனா இருக்க முடியும் என்ற, 'டவுட்' வருதே! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூலை 22, 2025 16:50

பா ஜ வேட்பாளர்களில் எத்தனை பேர் ஜெயித்து வரப்போகிறார்கள் என்று முதலில் பார்க்கலாம் அதன் பிறகுதானே கூட்டணி பேச்சு எழப்போகிறது மொத்தம் 150 சீட் அதிமுகவும், 4, 5 இடம் பா ஜ வும் பெற்றால் அமைச்சராகவா உட்கார முடியும்? எருமை மாடு சந்தையிலிருந்து வீட்டுக்கே வரவில்லை, அதற்குள் நெய் பிறந்த வீட்டுக்குத்தான் முதலில் என்று எதற்கு சர்ச்சை ?


கண்ணன்
ஜூலை 22, 2025 11:43

அது ஒன்றுமில்லை ஐயா காம்ரேடுகளுக்குக் கொடுத்த பணம் அவர்கள் பொலிட் பீரோவில் வைத்துப் பூட்டப்பட்டது. உறுப்பினர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டன. அதில் வரும் பணத்தில் உறுப்பினர்கள் டீ குடித்துக் கொடிபிடித்தனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை