உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம்: பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிராக, மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு, காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 'மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்.,சையும் சித்தாந்த ரீதியாக, சம அளவில் எதிர்த்து போராடுகிறேன்' என பேசியிருப்பது, அவரது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. டவுட் தனபாலு: ராகுல், இந்த கருத்தை கேரளாவில் பேசியிருக்கார்... அங்க, காங்கிரசுக்கு பிரதான எதிரியே உங்க கட்சி தான்... ஆனா, தமிழகம் வந்தால் அதே ராகுல், தி.மு.க., - மா.கம்யூ., கூட்டணியை ஆதரித்து தான் பேசுவார்... அவர் தெளிவா தான் இருக்கார்... நீங்கதான் தப்பா புரிஞ்சுக்கிறீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!  பா.ம.க., தலைமை நிலைய செயலர் அன்பழகன்: சமீப காலமாக, பா.ம.க.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் மயிலம் சிவகுமார், மேட்டூர் சதாசிவம், தர்மபுரி வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்து வரும் செயலுக்காக, நான்கு பேரும் கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிக மாக நீக்கம் செய்யப்படுகின்றனர். டவுட் தனபாலு: இந்த நாலு பேரும், அன்புமணியுடன் தான் வலம் வர்றாங்க... அன்புமணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காம, அவங்க ஆதரவாளர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது என்ன நியாயம்... 'எய்தவர் இருக்க அம்பை நோவானேன்' என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் இதுதான் என்பதில், 'டவுட்'டே இல்லை!  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தேர்தல் முடிவில் கிடைக்கும், எம்.எல்.ஏ., சீட்களை வைத்துதான், கூட்டணி ஆட்சியை தீர்மானிக்க முடியும். அப்போதுதான் அந்த கருத்துக்கு வலிமை கிடைக்கும். ஐந்து அல்லது ஆறு சீட்களை, நாம் தமிழர் கட்சி ஜெயித்தால், என்ன நடக்கும் என்பதை இப்போதே சொல்ல முடியாது. ராணுவ ரகசியங்களை போல், கட்சிக்கும் சில ரகசியங்கள் இருக்கின்றன. அதை வெளியிட அவகாசம் தேவை. என் பயணம், பாதை மாறிவிட்டது. அதனால், விஜயை சந்திக்க வேண்டும் என்ற அவசியம் எழவில்லை. டவுட் தனபாலு: 'தமிழகத்தின், 234 தொகுதியிலும் தனித்து போட்டி... 50 சதவீதம் சீட்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும்' என்று முழங்கிய நீங்க, இப்ப திடீர்னு, 'பயணம் பாதை மாறிடுச்சு'ன்னு சொல்றதும், அதையும் முதல்வர் ஸ்டாலினை சந்திச்சுட்டு வெளியில வந்து சொல்றதும் ஏகப்பட்ட, 'டவுட்'களை கிளப்புதே! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஜூலை 23, 2025 16:59

என்ன, விஜய் பக்கம் சாய்ந்தால் ஒன்றும் தேறாது என்ற தெளிவு வந்துவிட்டது போலிருக்கே


Muralidharan raghavan
ஜூலை 23, 2025 12:25

கம்யூனிஸ்ட் தோழரே உங்கள் கூட்டணியில் உள்ள முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்றவைகள் மதச்சார்பற்ற கட்சிகளா?


கண்ணன்
ஜூலை 23, 2025 10:58

முறையான பள்ளிப்படிப்பை உடைய எவரும் புரிந்து கொள்ளும் செய்திகளைக் கூடப் புரிந்து கொள்ள முடியாதோர் நிறைந்த ஒரு கூட்டத்தை சீனா வளர்த்து வருகிறது