உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்: நீங்கள் என்னை அடித்தால், நான் உடனே மராத்தியில் பேச முடியுமா? அத்தகைய வெறுப்பு பரவினால், மஹாராஷ்டிராவிற்கு முதலீடுகள் வராது. வெறுப்புணர்வை தவிருங்கள். எனக்கு ஹிந்தி தெரியாதது, பெரிய தடையாக உள்ளது. பல மொழிகளை கற்பதுடன், தாய்மொழியால் பெருமைப்பட வேண்டும். டவுட் தனபாலு: தாய்மொழி மீது பற்று இருக்கலாம்... ஆனா, அது வெறியாகி விடக் கூடாது... தமிழக ஆளுங்கட்சியினர் தான், 'மும்மொழி கொள்கை எல்லாம் வேண்டாம்... இருமொழி கொள்கையே போதும்'னு வறட்டு பிடிவாதம் பிடிக்கிறாங்க... பல மொழிகள் கற்காத வரைக்கும், நாம கிணற்று தவளையாகவே தான் இருக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: கடந்த, 2001ல் இருந்து, ஓரிரு பொது தேர்தல்கள் தவிர, தி.மு.க.,வுடன் தான் வி.சி., கட்சி பயணிக்கிறது; மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து, மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது. தி.மு.க.,வால் வளர்ச்சி அடைந்திருக்கிறதே தவிர, வீழ்ச்சி அடையவில்லை. ஆனால், 'வி.சி., கட்சியை, தி.மு.க., விழுங்கி விடும்' என, பழனிசாமி திரித்து பேசுவது ஏன் என்று தெரியவில்லை! டவுட் தனபாலு: அடடா... கம்பெனி ரகசியத்தை வெளியில சொல்லிட்டீங்களே... நாளைக்கு தொகுதி பங்கீடு பேச்சு நடக்கிறப்ப, 'எங்களால் தானே உங்க கட்சிக்கு அங்கீகாரம் எல்லாம் கிடைச்சிருக்கு... அதனால, குடுக்கிறதை வாங்கிக்குங்க'ன்னு, தி.மு.க., தரப்பு கொக்கி போட்டா உங்க நிலைமை என்னாகும்னு, 'டவுட்' வருதே!  அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: உதயநிதி எத்தனை போராட்டங்களில் பங்கேற்றார்? 'உதயநிதியின் மகன் இன்பநிதி வந்தாலும் ஏற்பேன்' என்கிறார் அமைச்சர் நேரு. தி.மு.க.,வினர் எவ்வளவு தரம் தாழ்ந்து போய் விட்டனர் என பாருங்கள். 1989ல், நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோதே, அமைச்சராக இருந்தவர் நேரு. அங்கு அவருக்கே இது தான் நிலைமை. உழைத்தவர்களுக்கு, தி.மு.க.,வில் பதவி கிடைக்காது. டவுட் தனபாலு: அட, நீங்க வேற... 1971ல் இருந்து எட்டு முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட, கருணாநிதி காலத்து மூத்த தலைவரான துரைமுருகனே, 'இன்பநிதி அரசிலும் பணியாற்றுவேன்'னு, 'துண்டு' போட்டுட்டு இருக்கிறப்ப, 1989ல் அமைச்சரான நேரு எல்லாம் எம்மாத்திரம் என்பதில், 'டவுட்டே இல்லை! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 26, 2025 17:06

வயது, அனுபவம் எதற்கும் மதிப்பில்லாமல், தங்கள் கண்முன்பே ஒருவித அரசியல் அனுபவமோ மக்கள் நலன் பற்றிய சிந்தனையோ இன்றி, முதல்வரின் வாரிசு என்ற ஒரே தகுதியில் உட்கார்ந்துகொண்டு பாட்டன் வயதானவரையும் அதிகாரம் செய்யும் விதி வாய்த்த வயிற்றிச்சல்தான் இந்த ‘இன்பநிதியின் கொள்ளுப்பேரன் கீழும் வேலை செய்வேன்’ என்ற பேச்சு அப்படிப்பேசினால் தான் ‘அந்தப்புரம்’ மனம் குளிரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை