ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: விஜய் கட்சி, இன்னொரு மக்கள் நீதி மய்யம் ஆகும். தி.மு.க.,வினர் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நடிகரை கொண்டு வருவர். அவ்வாறு, பா.ஜ., - அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுகள் போய்விடக் கூடாது என்பதற்காக, த.வெ.க., உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.க., உருவாக்கிய ம.நீ.ம., கட்சி தலைவர் கமல், தற்போது ராஜ்யசபா எம்.பி., ஆகி விட்டார். அதுபோல், நடிகர் விஜயும் குறிப்பிட்ட ஓட்டு சதவீதத்தை பெற்று, தி.மு.க.,வில் ஐக்கியமாகி விடுவார். டவுட் தனபாலு: கடந்த, 2016ல் தி.மு.க.,வை எதிர்கொள்ள மக்கள் நலக்கட்டணியை ஜெ., உருவாக்கி, அ.தி.மு.க.,வை ஜெயிக்க வச்சாங்கன்னு இன்றைக்கும் சொல்றாங்க... நீங்க சொல்றதை பார்த்தால், அதே பாணியை, 2026 சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க.,வும் தத்து எடுத்திருக்கோ என்ற, 'டவுட்' தான் வருது! பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: பா.ம.க.,வின் புதிய தலைவராக, மே 30ம் தேதி நான் பொறுப்பேற்றேன். பா.ம.க.,வின் தலைமை அலுவலகம் சென்னையில் இருந்ததை மாற்றி, தைலாபுரம் தோட்டத்திலேயே இயங்க வைத்திருக்கிறேன். தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் எந்த விஷயமாக இருந்தாலும், தொண்டர்கள், நிர்வாகிகள் தைலாபுரத்துக்குத்தான் வர வேண்டும். பா.ம.க.,வுக்கு வேறு எங்கும் தலைமை அலுவலகம் கிடையாது. டவுட் தனபாலு: 'எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை'ன்னு பிரபல நிறுவனங்களின் விளம்பரங்கள் போல சொல்றீங்களே... நீங்க இப்படி சொந்த மகனிடமே வீம்பு பார்த்துட்டு இருந்தா, தைலாபுரத்துக்கு தொண்டர்கள் வருவாங்க... நிர்வாகிகள் வருவாங்க... ஆனா, உங்களிடம் கூட்டணி பேச எந்த கட்சியாவது வருமா என்பது, 'டவுட்'தான்! அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ஸ்டாலின் குடும்ப ஆட்சிக்கு, அ.தி.மு.க., சார்பில் விரைவில் முடிவுரை எழுதப்படும். கட்சியாக இருந்தாலும், ஆட்சியாக இருந்தாலும், ஸ்டாலின் குடும்பத்தினர் தான் பதவியில் இருப்பர். விரைவில் அந்நிலை மாறும். அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். ஆனால், தனி பெரும்பான்மை பெற்று, அ.தி.மு.க., தனித்தே ஆட்சி அமைக்கும். டவுட் தனபாலு: 'அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்' என்பதை, தி.மு.க.,வுக்கு சொல்றீங்கன்னு தெரியுது... அடுத்த வரியா, 'தனித்தே ஆட்சி அமைக்கும்'னு போகும் இடங்களில் எல்லாம் கிளிப்பிள்ளை மாதிரி சொல்றீங்களே... அது மட்டும், உங்க கூட்டணி கட்சியான பா.ஜ.,வுக்கு தர்ற எச்சரிக்கை என்பது, 'டவுட்'டே இல்லாம புரியுது!