அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: மோசடி வழக்கில், தி.மு.க., அரசு என்னை சிறையில் அடைத்தபோது, அ.தி.மு.க.,விற்கு எதிராக பிரமாண பத்திரத்தில் கையெழுத்து போட சொல்லி என்னை மிரட்டினர். 'செத்தாலும் சாவேனே தவிர, அ.தி.மு.க.,வை காட்டிக் கொடுக்க மாட்டேன்' என்று கூறிவிட்டேன். சிவகாசி தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுவேன்; நிச்சயம் வெற்றி பெறுவேன். டவுட் தனபாலு: 'ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அடிபணியாம இருந்தேன்'னு பெருமை அடிச்சுக்கிற அதே நேரத்துல, 'சிவகாசி தொகுதி மறுபடியும் எனக்கு தான்... நம்ம கட்சியினருக்கு அந்த தொகுதி மீது கண் இருந்தால், இப்பவே விலகிடுங்க' என்ற எச்சரிக்கையையும் சேர்த்தே விடுக்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!  தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயசூரியன், தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக, கால் வைக்கும் இடங்களில் எல்லாம், கையில் கிடைக்கும் துறைகளில் எல்லாம் ஊழல் செய்து விட்டு, தேர்தல் நெருங்கும் காலத்தில் ஒன்றும் தெரியாதது போல், மக்களை சென்று நலம் விசாரித்தால், இதுதான் நடக்கும். டவுட் தனபாலு: இவர் சொல்வது நுாற்றுக்கு நுாறு சரி... நாலரை வருஷமா தொகுதி பக்கமே எட்டி பார்க்காத எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சங்கராபுரம் தொகுதி சம்பவம் சரியான பாடம் என்பதில், 'டவுட்'டே இல்லை!  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்: தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே, அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போல, பொய்யாக தி.மு.க., மார்தட்டி கொண்டு இருக்கிறது. சோழ பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்னரே அளித்திருந்தால், பா.ஜ., இதை கையில் எடுத்திருக்காது. ஆனால், 'பிரதமர் வருகை; தமிழகத்திற்கு பெருமை' என்று வாஞ்சையோடு சொல்லி சிலாகித்து கொள்கிறது தி.மு.க., அரசு. டவுட் தனபாலு: அதானே... ஊருக்கு ஊர் கருணாநிதிக்கு சிலை வைத்து திறப்பதில் ஆர்வம் காட்டிய அரசு, சோழ பேரரசர்களுக்கு சிலை எடுக்கணும்னு யோசிக்கலையே... அவங்க செய்யாத சாதனையை, குஜராத்தில் பிறந்த பிரதமர் மோடி செய்ய முன்வந்திருப்பது, 'டவுட்'டே இல்லாம பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்!