டவுட் தனபாலு
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: பிரதமர் மோடியை, டில்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தமிழகத்தின் பிரதிநிதியாக, அவரிடம் சில கோரிக்கைகளை வைத்தேன்; அவற்றுள் முக்கியமானது கீழடி. தமிழனின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை, உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு, பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினேன். டவுட் தனபாலு: சமீபத்துல தான், ராஜ்யசபா எம்.பி.,யாகி டில்லி போயிருக்கீங்க... உடனே, பிரதமரை தனியாக சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம் தான்... அதே நேரம், தமிழகத்துல இருக்கும் உங்க கூட்டணி தலைமையான, தி.மு.க., இதை எப்படி எடுத்துக்குமோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா? நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ளார். இது எவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு கொண்டு செல்லும் என்பதை உணர வேண்டும். நம் நாட்டுக்கான முடிவை டிரம்ப் எடுக்கிறார்; ரஷ்யாவிடம் நாம் பொருள் வாங்கக்கூடாது என்கிறார். என் நாடு என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை சொல்ல டிரம்ப் யார்? டவுட் தனபாலு: நியாயமான கேள்வி தான்... அமெரிக்காவின், 'பெரியண்ணன்' நாட்டாமையால் பாதிக்கப்பட்ட நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, 'அமெரிக்க பொருட்களை புறக்கணிப்போம்' என்ற போராட்டத்தில் இறங்கினால் தான், அந்த நாடும், அதன் அதிபரும் வழிக்கு வருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தி.மு.க.,வில் ஸ்டாலின் தலைவர், உதயநிதி இளைஞரணி செயலர், கனிமொழி மகளிரணி செயலர் என, மூன்று பெரிய பதவிகளையும் அந்த குடும்பத்தினரே வைத்துள்ளனர். கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு குடும்பமே ஆதிக்கம் செலுத்துகிறது. டவுட் தனபாலு: இதை, அந்த கட்சியில் உள்ளவர்கள் அல்லவா தட்டி கேட்கணும்... தி.மு.க., அரசின் நிர்வாகத் தோல்விகளை விமர்சிக்கத் தான் உங்களுக்கு உரிமை இருக்கே தவிர, அவங்களது உள்கட்சி விவகாரங்களை பேச உரிமை இல்லை... பதிலுக்கு அவங்களும் உங்க கட்சி பிரச்னை யில தலையிட்டா ஏத்துக்குவீங்களா என்ற, 'டவுட்' வருதே!