டவுட் தனபாலு
கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி: கரூர் நகர காங்., மகளிர் அணியை சேர்ந்த கவிதாவை தி.மு.க.,வில் சேர்த்துள்ளனர். கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். தி.மு.க., மாவட்ட செயலரான செந்தில் பாலாஜி, காங்., கட்சியை பொதுவெளியில் அவமதிப்பதை, நாங்கள் எப்படி புரிந்து கொள்வது? கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள், இனி நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். டவுட் தனபாலு: உங்க கட்சியை பிடிக்காம ஒரு பெண்மணி வெளியேறி போறப்ப, அவங்களை சேர்த்துக்கிறதுல என்ன தப்பு... உங்களுக்கு கூட்டணி தர்மம் பற்றி எல்லாம் கவலையில்லை... உங்களுக்கும், செந்தில் பாலாஜிக்கும் இருக்கும் பழைய பகையை மனசுல வச்சுக்கிட்டு தான் இப்ப கொந்தளிக்கிறீங்க என்பதில், 'டவுட்' டே இல்லை! அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பர் களும் இல்லை என்று சொல்வர். ஆனால், துரோகியை நண்பராக ஏற்றுக்கொள்வது அரசியலில் இல்லை. ஆட்சியை காப்பாற்றி தந்த எங்களுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி துரோகம் செய்து விட்டார். முதல்வர் வேட்பாளராக யார் இருக்கக் கூடாது என்பதில், நாங்கள் உறுதியாக உள்ளோம். அமித் ஷா அறிவிக்கும் முதல்வர் வேட்பாளரை, நாங்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், தே.ஜ., கூட்டணியை ஆதரிப்போம். டவுட் தனபாலு: 'பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர்' என, ஏற்கனவே அமித் ஷா அறிவிச்சுட்டாரே... புதுசா ஒருத்தரை அறிவிக்க அமித் ஷா முன்வருவாரா என்பது, 'டவுட்' தான்... அப்படியே அவர் முன்வந்தாலும், அது சசிகலாவா, பன்னீர்செல்வமா, செங்கோட்டையனா அல்லது நீங்களா என ஏகப்பட்ட, 'டவுட்'கள் எழுதே! நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில், பத்திரிகையாளர்கள் தீர்ப்பை எழுதக்கூடாது; வழக்கு வந்த பின் பேசுவோம்; அதெல்லாம் ஒரு சமூக குப்பை. அந்த சமூக குப்பையை கிளறக்கூடாது. இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு என்கிட்ட வந்து கேள்வி கேட்பதற்கு, முதலில் வெட்கப்பட வேண்டும். டவுட் தனபாலு: நீங்க பொது வாழ்க்கையில் இருக்கீங்க... உங்க மீது ஒரு நடிகை பாலியல் புகார் கொடுத்திருக்காங்க என்றால், அது பற்றி கேள்விகள் வரத்தான் செய்யும்... அதுக்கு விளக்கம் அளிக்க தெரியாம, 'இப்படி எல்லாம் கேட்க கூடாது'ன்னு சொல்றதுக்கு நீங்கதான் வெட்கப்படணும் என்பதில், 'டவுட்' டே இல்லை!