உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக காங்., மூத்த தலைவர் தனுஷ்கோடி ஆதித்தன்: தமிழகத்தில் காங்கிரஸ் கடந்த, 1977, 1989 சட்டசபை தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு, அதிக இடங்களை வென்று, தன் பலத்தை நிரூபித்துள்ளது. அதனால், வரும் காலங்களில், தி.மு.க.,-விடம் அதிக தொகுதிகளை பெற வேண்டும். அது மட்டுமல்ல, ஆட்சியில் பங்கு கேட்டும் வலியுறுத்த வேண்டும். டவுட் தனபாலு: கடந்த, 1977, 1989களில் இருந்த காங்., வேறு... அப்ப, மூப்பனார், குமரி அனந்தன் போன்ற மக்கள் செல்வாக்குள்ள தலைவர்கள் இருந்தாங்க... இப்ப, சட்டை காலர் அழுக்காகிடுமோன்னு அரசியல் பண்ற தலைவர்கள் இருக்கும் வரை, ஆட்சியில் பங்கு எல்லாம் ஆகுற காரியமா என்ற, 'டவுட்' தான் வருது!  தமிழக துணை முதல்வர் உதயநிதி: கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டம் எவ்வளவு காலதாமதமாக துவங்கியது என்பதை போலீசார் விளக்கியுள்ளனர். மரத்தில் ஏற வேண்டாம்; மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என, பல கோரிக்கைகளை போலீசார் வைத்துள்ளனர். ஆனாலும், கூட்டத்தினர் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறிப்பிட்ட இயக்கத்தின் தலைவர், இரண்டாம் கட்ட தலைவர்களுடைய பொறுப்பாகும். டவுட் தனபாலு: தலைவரின் ஒற்றை வார்த்தையில் ஒட்டுமொத்த கூட்டமும், 'கப்சிப்' ஆவது எல்லாம் உங்களை போன்ற பெரிய கட்சிகளில் தான் சாத்தியம்... சினிமாவை பார்த்து விசில் அடிக்கிற, இன்னும் சொல்லப் போனா, ஓட்டு போடும் வயதை கூட எட்டாத ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள கட்சி தலைவரிடம் அதை எல்லாம் எதிர்பார்க்கலாமா என்ற 'டவுட்'தான் வருது!  அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: கடந்த ஐந்து மாதங்களில், கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய, தி.மு.க., அரசு மேலும் கடன் வாங்கி, தமிழகத்தை, 'கடன்கார மாநிலம்' என்ற படுகுழியில் தள்ளியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் கடந்த ஆகஸ்ட் வரை, 37,082 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. தமிழகத்தை திவாலாக்கும் கடைசி படியில் நிற்க வைத்தது தான், முதல்வர் ஸ்டாலினின் சாதனை. டவுட் தனபாலு: தி.மு.க., 2011ல் ஆட்சியை விட்டு இறங்கும் போது, தமிழக அரசின் கடன், 1.14 லட்சம் கோடி ரூபாய்... 2011 - 2021 வரை 10 ஆண்டுகள் நடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 3.74 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மொத்த கடனை, 4.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்திய நீங்க, தமிழக அரசை குறை கூறலாமா என்ற, 'டவுட்' வருதே! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை