உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அரக்கோணம் தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன்: புதுச்சேரி எப்போதும் தி.மு.க.,வின் கோட்டை தான். புதுச்சேரியில், நாங்கள் தான் பெரிய கட்சி என யாரும் கூற முடியாது. அதை சொல்லும் தகுதி, ஸ்டாலின் மற்றும் ராகுலுக்கு மட்டுமே உள்ளது. புதுச்சேரியில் தற்போதைய என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் மக்கள் துன்பப்படுகின்றனர். மாநில அந்தஸ்து கூட பெற முடியவில்லை. ஒரு தொழிற்சாலை கூட, புதுச்சேரிக்கு வரவில்லை. * டவுட் தனபாலு: புதுச்சேரியில் பல வருஷங்களா காங்., ஆட்சிதான் நடந்துச்சு... மத்தியிலும், பல ஆண்டுகள் காங்., ஆட்சி இருந்துச்சே... அப்ப எல்லாம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்கி தர எந்த நடவடிக்கையும் எடுக்காம இருந்துட்டு, இப்ப இருக்கும் அரசை குற்றம் சாட்டுவது சரியா என்ற, 'டவுட்' வருதே! *** விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்: நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த வேண்டிய தேர்தல் கமிஷன், சமரசம் செய்யப்பட்டு, பா.ஜ.,வின் ஓர் அமைப்பை போல செயல்பட்டு வருகிறது. பீஹாரில் நியாயமாக தேர்தல் நடந்தால், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி நிச்சயம் வெல்லும் என்பது அனைவருக்கும் தெரியும். * டவுட் தனபாலு: பீஹாரில் தேர்தல் தேதிகளை அறிவிச்சுட்டாங்க... அங்க, ஆளும் கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணியை உங்க அணி வீழ்த்துவது கடினம் என்றே தகவல்கள் வருகின்றன... அதனால, தோல்விக்கான காரணங்களை இப்பவே தேடுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! ------- பா.ம.க., தலைவர் அன்புமணி: அரசியல் கட்சிகள் ஜனநாயக கடமை ஆற்ற, அவர்கள் தான் மக்களை தேடிச் செல்ல வேண்டும்; கட்சிகளை தேடி மக்கள் வரக்கூடாது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்தக்கூடாது என்பதுதான் நீதிமன்றம் சொல்லும் நிபந்தனை. தனியார் இடங்களில் நடத்தலாம் என்கின்றனர். அப்படியொரு இடம், ஊருக்கு வெளியில் தான் கிடைக்கும். அங்கு மக்கள் எப்படி வருவர்? * டவுட் தனபாலு: நாம் தமிழர் கட்சி சீமான், பனை மரங்கள் சூழ்ந்த காடுகள், கரடுமுரடான மலைகள், கடல்ல எல்லாம் கூட்டங்கள் நடத்துறாரே... அவரை தேடி கட்சியினரும், மக்களும் வரத்தானே செய்றாங்க... அவரை மாதிரி நீங்களும் வித்தியாசமா எதையாவது செய்தால், மக்கள் தேடி வருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ