உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன்: தற்போதைய அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் பழனிசாமிக்கு, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மீது அப்படி என்ன வருத்தம், கோபம் என தெரியவில்லை; மிக கடுமையாக விமர்சிக்கிறார். அரசியலில் யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனாலும், பழனிசாமி, ஆர்.எஸ்.எஸ்., குரலாக மாறி இருப்பது வருத்தத்துக்குரியது. * டவுட் தனபாலு: கம்யூனிஸ்ட்களை திட்டினாலே, ஆர்.எஸ்.எஸ்., துாண்டுதலில் தான் விமர்சிக்கிறார்னு பொத்தாம் பொதுவா சொல்வதா...? பழனிசாமி விமர்சனத்துக்கு உங்களிடம் ஆக்கப்பூர்வமான விளக்கம் இல்லாமல் தான், ஆர்.எஸ்.எஸ்., மீது பழி போடுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது. *** தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதற்காக, 2021 சட்டசபை தேர்தலில், 511 வாக்குறுதிகளை தி.மு.க.,வினர் கொடுத்தனர். இவையன்றி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக தேர்தல் வாக்குறுதிகள் தந்தனர். இவற்றில், 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல், 2026 தேர்தலை சந்திக்க வெட்கமாக இல்லையா? ஆட்சிக்கு வருவதற்கு முன், 'தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம்' என்று கூறிவிட்டு, கடந்த நான்கரை ஆண்டுகளில், 5 லட்சம் கோடி ரூபாய்க்கு புதிய கடன்கள் வாங்கியது ஏன்? * டவுட் தனபாலு: 'மத்திய அரசு, எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துது... தமிழகத்துக்கு, சரியானபடி நிதி ஒதுக்கீடு செய்வதில்லை... அதனால் தான், கடன் வாங்கி நிர்வாகத்தை நடத்துறோம்'னு, வழக்கம் போல மத்திய பா.ஜ., அரசு மீது தி.மு.க., அரசு குற்றம் சாட்டும் என்பதில், 'டவுட்'டே இல்லை! ------ அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: வரும் தேர்தலுக்கு, விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. அதனால், தமிழகத்தில் நான்கு முனை போட்டி அமையும். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தன் கூட்டங்களுக்கு, தானே ஏற்பாடு செய்தவர்களை பார்த்து, வெற்றிக் கூட்டணி அமைந்து விட்டது என பேசுகிறார். அதாவது, த.வெ.க., கொடியோடு இருப்பவர்களை பார்த்து அப்படி பேசி, விஜயை மறைமுகமாக கூட்டணிக்கு அழைக்கிறார். * டவுட் தனபாலு: யார் யாரையோ கூட்டணிக்கு அழைக்கும் பழனிசாமி, நம்மை சேர்த்துக்க மாட்டேங்கிறாரேன்னு இவர் ஏங்குவது, 'டவுட்' இல்லாம தெரியுது... த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க காத்திருக்கும் இவர், 'விஜயும் அ.தி.மு.க., பக்கம் போயிட்டால் நாம நட்டாற்றில் நிற்கணுமே'ன்னு பயப்படுறாரோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை