உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

நாம் தமிழர் கட்சி ஒருங் கிணைப்பாளர் சீமான்: 'டாஸ்மாக்' மதுபானங்களை பத்திரமாக பாதுகாக்க, பெரிய பெரிய கட்டடம் கட்டி, அதற்கு குளிரூட்டி, காவலர்களை போட்டு தி.மு.க., அரசு பாதுகாக்கிறது. ஆனால், உழைக்கும் விவசாயிகள், உயிரை கொடுத்து விளைவிக்கும் நெல்லை, தெருவில் கொட்டி மழையில் நனையவிடும் அவலம் உள்ளது. மக்களின் உயிரை பறிக்கும் சாராயத்தை பாதுகாக்கும் அரசு, உயிரை பாதுகாக்கும் உணவான நெல்லை பாதுகாக்கவில்லை. டவுட் தனபாலு: நெல்லும், சாராயமும் ஒன்றாகிடுமா...? 'நெல்மணிகள் பாழா போயிடுச்சே'ன்னு விரக்தி அடையும் சில விவசாயிகளுக்கு, 'டாஸ்மாக்' மதுபானங்கள் தானே ஆறுதலா இருக்கு... அதனால தான், அதுக்கு முக்கியத்துவம் தந்து பாதுகாக்கிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! lll தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர்: ஓட்டு திருட்டுக்கு எதிராக, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, கையெழுத்து இயக்கம் நடத்தி, அதை ஜனாதிபதிக்கு அனுப்ப காங்கிரஸ் திட்டமிட்டது. அத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இதுவரை, 76.06 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. 1 கோடி இலக்கை அடைவோம் என எதிர்பார்க்கிறோம். பொது மக்களும், இளைஞர்களும் தானாக முன்வந்து கையெழுத்திட்டு ஆதங்கத்தை பதிவு செய்தனர். டவுட் தனபாலு: எல்லா கட்சிகளும், பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டங்களை நடத்திட்டு இருக்காங்க... நீங்க, ஓட்டு திருட்டுக்கு எதிரா கையெழுத்து வாங்க செலவிடும் நேரத்தில், கட்சி வளர்ச்சி பணியில் அக்கறை காட்டினா, தி.மு.க.,விடம் நாலு சீட்களை கூடுதலா கேட்டு வாங்கலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை! lll அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாகவும், தனி நீதிமன்றம் வாயிலாக அவற்றை விசாரித்து தண்டனை கொடுப்பேன் எனவும், கோடநாடு கொலை வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், அதற்கும் விரைவில் நல்ல தகவல் வரும் என்றும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். தி.மு.க., ஆட்சிக்கு வந்து நாலரை ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் அளித்த வாக்குறுதி என்ன ஆனது? டவுட் தனபாலு: முதல்வர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதை இவர் குற்றம் சாட்டுவது மாதிரி தெரியலையே... இவரை கட்சியில் சேர்க்க மறுக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, 'கோர்த்து விடும்' கோபம் தான் இதில் அப்பட்டமா தெரியுது என்பதில், 'டவுட்'டே இல்லை! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
அக் 29, 2025 18:38

திராவிட மாடல் ஆட்சியில் அமர்ந்த போது சும்மா மிரட்ட சொன்ன, கொடநாடு விசாரணையெல்லாம் எப்போதோ, புழக்கடை ஒப்பந்தத்தில் settle ஆகிவிட்டதே இப்போதுதான் கண் விழித்து ‘என்ன, காந்தியை சுட்டுட்டாங்களா?’ என்று இவர் ஆரம்பிக்கிறாரே


கண்ணன்
அக் 29, 2025 13:02

இவர் ஒருவரே இரு கைகளிலும் மாற்றி மாற்றி ஒரு கோடி என்ன, நூறு கோடி கையெழுத்துக்களையும் போட்டு விடலாமே!


முக்கிய வீடியோ