உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி: எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தி.மு.க., எதிர்ப்பதற்கு காரணமே, திருட்டு ஓட்டுகள் போடுவதற்கு தான். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் மட்டும், 40,000 போலி வாக்காளர்கள் உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு பணம் கொடுத்தால், மக்கள் ஓட்டளித்து விடுவர் என்றும் தி.மு.க., கனவு காண்கிறது; மக்கள் ஒன்றும் ஏமாந்தவர்கள் இல்லை. டவுட் தனபாலு: அதானே... 'நாங்களும், 2021 சட்டசபை தேர்தல் நேரத்துல, ரேஷன் கார்டுக்கு தலா, 2,500 ரூபாய் பொங்கல் பரிசு கொடுத்தும் ஆட்சிக்கு வர முடியலை... அதே கதை தான் தி.மு.க.,வுக்கும் நடக்கும்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! lll அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: நாட்டில் என்னவெல்லாமோ நடக்கிறது. ஆனால், எதை பற்றியும் கவலைப்படாமல், தேசத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். நாட்டை குறித்த கவலை இருந்தால், அவர் ஜாலியாக சுற்றுப்பயணம் செல்வாரா? அவருக்கு மட்டுமல்ல... காங்கிரசில் இருக்கும் எந்த தலைவருக்கும் நாட்டை பற்றிய கவலை துளியும் கிடையாது. நாட்டிலேயே வீணாய் போன கட்சி என்றால், அது காங்கிரஸ் தான். அக்கட்சியை தேவையே இல்லாமல், தி.மு.க., துாக்கி பிடித்து கொண்டிருக்கிறது. டவுட் தனபாலு: ஏற்கனவே காங்., கட்சி அடி மேல அடி வாங்கி, நொந்து போய் கிடக்குது... தமிழகத்துல தி.மு.க., மட்டும் தான் அந்த கட்சிக்கு, 'ஆக்சிஜன்' கொடுத்துட்டு இருக்கு... வர்ற சட்டசபை தேர்தல்ல, காங்., கட்சிக்கான சீட்களை குறைக்க, தி.மு.க.,வுக்கு நீங்களே யோசனை சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! lll நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்: பீஹார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததில் எனக்கு மகிழ்ச்சி தான். தமிழகத்தில் காமராஜர் மறைவுக்கு பின், காங்கிரஸ் கட்சி அழிந்து விட்டது. தற்போது இருப்பது ஒரு கம்பெனி. திராவிட கட்சிகளின் தோள்களில் ஏறி தான், காங்கிரசும், பா.ஜ.,வும் வசதியாக பயணம் செய்கின்றன. டவுட் தனபாலு: உங்களை மாதிரி தனித்து நிற்க, தைரியம் இல்லாம தானே, திராவிட கட்சிகளின் தோளில் ஏறி சவாரி செய்றாங்க... ஒருவேளை ரோஷப்பட்டு தனித்து நிற்க முடிவெடுத்தாலும், ரெண்டு தேர்தலுக்கு பிறகு தமிழகத்துல காங்., கட்சி காணாம போயிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை