மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
18-Nov-2025
ம.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மல்லை சத்யா: செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும், 250 கோடி ரூபாய்க்கு வைகோ குடும்பத்திற்கு சொத்து இருக்கிறது. அவரது உறவினர்கள் நடத்தும் மதுபான ஆலைகளில், கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. மிகப்பெரிய நட்சத்திர விடுதியை சில ஆண்டுகளுக்கு முன் வாங்கினார். தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில், மிகப்பெரிய அரண்மனை போன்ற வீட்டை கட்டி, ரகசியமாக புதுமனை புகுவிழா நடத்தியுள்ளார். டவுட் தனபாலு: நீங்க சொல்ற மாதிரியே, 250 கோடி ரூபாய்க்கு வைகோவுக்கு சொத்துகள் இருந்தாலும், அதை வாங்குறப்ப எல்லாம் நீங்க கமுக்கமா இருந்தது ஏன்...? உங்களை கட்சி யில் இருந்து நீக்கியதும், அதை பகிரங் கப்படுத்தும் உங்களது நேர்மை மீது தான், 'டவுட்' வருது! ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: தமிழகத்தில், தற்போது மதுவை விட கஞ்சா, போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் இவற்றை தயக்கமோ, அச்சமோ இன்றி பயன்படுத்துகின்றனர். போதை பொருள் பயன்படுத்துவதாலேயே, இளம்பெண்கள் மீது பாலியல் தாக்குதல்கள் அதிகம் நடக்கின்றன. இவற்றில் இருந்து இளைஞர்கள், மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வுக்காகவே சமத்துவ நடைபயணம் செல்லவுள்ளேன். டவுட் தனபாலு: சிவன் - பார்வதியை சுத்தி வந்து ஞானப்பழத்தை வாங்கிய பிள்ளையார் மாதிரி, நீங்க தங்கியிருக்கும் சென்னை அண்ணாநகர்ல இருந்து, முதல்வரின் ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு பொடிநடையா போய், 'போதை பொருட்களை கட்டுப்படுத்துங்க'ன்னு கோரிக்கை வச்சு பிரச்னையை தீர்க்கலாமே... அதை விட்டுட்டு, முருகன் மாதிரி ஊரையே சுத்தி வரணுமா என்ற, 'டவுட்'தான் வருது! தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு: தி.மு.க., 1949ல் துவங்கி, 1957ல் தான் தேர்தலை எதிர்கொண்டது. அதுவரை மக்களின் மனதை அறிந்து, மக்களுக்காக போராடி, மக்கள் விரும்பிய பின் தான் தேர்தலை சந்தித்தது. ஆனால் சிலர் கட்சி துவங்கி, உடனே தேர்தலை சந்தித்து, ஆட்சிக்கு வர நினைக்கின்றனர்; அதெல்லாம் இங்கு நடக்காது. டவுட் தனபாலு: நீங்க சொல்ற காலத்தில் எல்லாம் மொபைல் போன்களோ, சமூக ஊடகங்களோ கிடையாதே... உங்களது கொள்கைகள் எல்லாம் மக்களிடம் மெதுவாகத்தான் போய் சேர்ந்தன... இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலத்துல, உங்களது, 'பிளாக் அண்ட் ஒயிட்' கால உதாரணம் எல்லாம் செல்லுபடியாகுமா என்பது, 'டவுட்'தான்!
18-Nov-2025