தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய், ஒரு கட்சியை துவக்கி விட்டு, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார். அவரை பொறுத்தவரை அரசியலில் என்ன வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும். அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது தெரியாமல் பேசுகிறார். சினிமா நடிகர் தானே; அப்படித் தான் இருப்பார். டவுட் தனபாலு: அது சரி... 2021 சட்டசபை தேர்தலில், நீங்க கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிட்டீங்களா...? வாக்குறுதிகள் தந்துட்டு, அதை நிறைவேற்றாமலும் இருந்துட்டு, சால்ஜாப்பு சொல்லும் உங்களுக்கு, விஜயை விமர்சிக்க தார்மீக உரிமை இருக்கா என்ற, 'டவுட்' வருதே! lll பா.ம.க., தலைவர் அன்புமணி: காவிரி டெல்டா மாவட்டங்களில், 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயிர்களின் அளவு குறித்து, அரசு முரணான தகவல்களை வெளியிட்டு வருவதால், விவசாயிகளை ஏமாற்ற தி.மு.க., அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்றால், விவசாயிகள் கடனாளிகளாக மாறிவிடுவர். டவுட் தனபாலு: தேர்தல் வர்றதால, 'பயிர் கடன்கள் தள்ளுபடி, கூட்டுறவு சங்கங்களில் நகை கடன்கள் தள்ளுபடி' போன்ற அதிரடி அறிவிப்புகள் அடுத்தடுத்து அணிவகுத்து வரும் பாருங்க... எல்லாத்துக்கும் மேலா, தேர்தலில் ஆளுங்கட்சியினர் அள்ளிவிடும் பண பட்டுவாடா மூலம், விவசாயிகள் கடன்களை 'ஈசி'யா அடைச்சிடலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை! lll பத்திரிகை செய்தி: பா.ம.க.,வில் நடந்த மோதலுக்கு பின், மகன் அன்புமணியை கட்சியை விட்டு நீக்கிய நிறுவனர் ராமதாஸ், தன் மகள் ஸ்ரீ காந்திக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தார். மேலும், ஸ்ரீ காந்தியின் மூன்றாவது மகன் முகுந்தனுக்கு, மாநில இளைஞர் சங்க தலைவர் பதவியை அளித்தார். பின், முகுந்தன் அந்த பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, ஸ்ரீ காந்தியின் மூத்த மகனான டாக்டர் சுகந்தனுக்கு பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் பதவியை ராமதாஸ் வழங்கியுள்ளார். டவுட் தனபாலு: 'என் வாரிசுகள் அரசியலுக்கு வந்தால், முச்சந்தியில் நிறுத்தி என்னை சவுக்கால் அடியுங்க' என்று சொன்ன ராமதாஸ் இப்படி மாறிட்டாரே... தமிழகத்தில் குடும்ப மற்றும் வாரிசு அரசியலில், தி.மு.க.,வுக்கு நாங்களும் சளைத்தவங்க இல்லை என்பதை ராமதாஸ், 'டவுட்'டே இல்லாம நி ரூபிச்சிட்டு இருக்காரு! lll