உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய பா.ஜ., அரசு, 2019ம் ஆண்டு முதல், தற்போது வரை, தமிழக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, தலா, 6,000 ரூபாய் வீதம், 12,764 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கியுள்ளது. மேலும், வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த, ஆறு ஆண்டுகளில் தமிழக கிராமங்களில், 1 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கி சாதனை புரிந்துள்ளது. டவுட் தனபாலு: நீங்க சொல்றது உண்மை தான்... ஆனா, பல கிராமங்கள்ல இந்த உதவித்தொகையும், வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பையும், தி.மு.க., அரசு தான் தந்திருக்குன்னு நிறைய பேர் நினைச்சிட்டு இருக்காங்க... அதெல்லாம், பிரதமர் மோடி தந்தது என விளம்பரப்படுத்துவதில், நீங்க, 'வீக்'கா இருக்கீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! பத்திரிகை செய்தி: தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், '2026 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வலுவாக உள்ள, 39 சட்டசபை தொகுதிகளை, எங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். ஆட்சியில் பங்கு தர வேண்டும்' ஆகிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக, காங்., கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டவுட் தனபாலு: கடந்த, 2011ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது, மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரசார், தி.மு.க.,வை மிரட்டி, 63 சீட்களை வாங்கினாங்க... அப்ப கூட, ஆட்சியில் பங்கு கேட்காதவங்க, இப்ப ஏன் கேட்கிறாங்க... தங்களது கோரிக்கைகளை ஏற்க, தி.மு.க., மறுத்துட்டா, நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு மாற வசதியா இருக்கும்னு நினைக்கிறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! பா.ம.க., தலைவர் அன்புமணி: சமீபத்திய மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு, ஏக்கருக்கு, 8,000 ரூபாய் இழப்பீடு வழங்குவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. சம்பா, தாளடி பயிர்களை வளர்த்தெடுப்பதற்கே, ஏக்கருக்கு, 30,000 ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், இந்த நிவாரணம் போதுமானதல்ல; இதனால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். டவுட் தனபாலு: கொஞ்சம் பொறுங்க... 'மழையால் விவசாய பயிர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி' என்ற, 'ஜாக்பாட்' அறிவிப்பை, தி.மு.க., அரசு தேர்தல் சமயத்தில் வெளியிட்டு, விவசாயிகள் அதிருப்தியை போக்கினாலும் போக்கிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை