உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைமை அமைப்பு செயலர் செங்கோட்டையன்: நாளை, தமிழகத்தை ஆளப்போவது, 'புரட்சி தளபதி' விஜய் தான்; இதை யாராலும் மாற்ற முடியாது. அவர் ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் வருமானத்தை வேண்டாம் என கூறி விட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளார். இதை அன்று, புரட்சி தலைவர், எம்.ஜி.ஆரிடம் பார்த்தேன்; இன்று, புரட்சி தளபதி விஜயிடம் பார்க்கிறேன். நம் எதிர்காலம் பிரகாசமாக மாற போகிறது. 234 தொகுதிகளிலும், விஜய் யாரை சுட்டிக்காட்டுகிறாரோ அவர் தான், எம்.எல்.ஏ.,வாக வருவார். டவுட் தனபாலு: அடடா... எம்.ஜி.ஆர்., - ஜெ.,யையும் இப்படி தான் ஏகத்துக்கும் புகழ்ந்தீங்க... அதுக்கான முழு தகுதியும், திறமையும் கொண்டவங்க அவங்க... ஆனா, 'எம்.ஜி.ஆர்., மாதிரியே விஜயும் இருக்கார்'னு நீங்க சொல்றதை, உங்க கூடவே, த.வெ.க.,வுக்கு வந்த, எம்.ஜி.ஆர்., தொண்டர்கள் ஏத்துக்குவாங்களா என்பது, 'டவுட்' தான்! அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: கடந்த, 1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி வைத்திருந்தது. எனவே, கூட்டணி என்பது, அந்தந்த அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில் அமைக்கப் படுகிறது. மதச்சார்பின்மை என்ற, அ.தி.மு.க.,வின் கொள்கை நிரந்தரமானது என்பதை, சிறுபான்மையினர் புரிந்து கொள்ள வேண்டும். டவுட் தனபாலு: இதன் வாயிலாக, நீங்க என்ன சொல்ல வர்றீங்க... 'வர்ற, 2026 சட்டசபை தேர்தல் முடிஞ்சதும், பா.ஜ.,வை மறுபடியும் கூட்டணியில் இருந்து கழற்றி விட்டுடுவோம்... அதனால, சிறுபான்மையினர் தயங்காம, எங்களுக்கு ஓட்டு போடலாம்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! தமிழக துணை முதல்வர் உதயநிதி: 'அரசு நடத்துகிறீர்களா அல்லது கண்காட்சி நடத்துகிறீர்களா' என, தி.மு.க.,வை நோக்கி, தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி, அவரிடமே பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க வேண்டும்... விஜயை முதலில் பேச விடுங்கள். டவுட் தனபாலு: அது சரி... விஜய், உங்க ஆட்சியை திட்ட, திட்ட, உங்களுக்கான எதிர்ப்பு ஓட்டுகள் அவருக்கு அதிகமா விழும்... ஏற்கனவே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உங்க எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்கிறதால, நீங்க சுலபமா ஜெயிச்சிடலாம்னு கணக்கு போட்டு தான், 'விஜய் நல்லா பேசட்டும்'னு சொல்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
டிச 22, 2025 17:40

தன் எதிர்காலம் பிரகாசமாக மாற விஜயுடன் சேர்ந்த செங்கோட்டையன் MGR ரையும் ஜெயலலிதா வையும் விஜய் ரேஞ்சுக்கு தாழ்த்தி விட்டார்.