அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில், கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது, கஞ்சா விற்றதாக, 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 'தமிழகத்தில் கஞ்சா புழக்கமே இல்லை' என உறுதிப்படக் கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனுடன் அந்த பெண் எடுத்துள்ள புகைப்படமும், 'அவர் தி.மு.க., நிர்வாகி' என பரவும் தகவலும், தமிழகத்தில் தி.மு.க., தான் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. டவுட் தனபாலு: அமைச்சரிடம் கேட்டா, 'தினமும் என்னை, 100 பேர் பார்த்து படம் எடுத்துக்குவாங்க... அவங்க ஜாதகம் எல்லாம் எனக்கு தெரியுமா'ன்னு எதிர் கேள்வி கேட்பாரு... ஆனா, 'தமிழகத்தில் கஞ்சா புழக்கமே இல்லை'ன்னு அவர் சொன்னதுக்கு மாறா, கஞ்சா விற்ற பெண் கைதானதற்கு, அமைச் சரிடம் பதில் இருக்குமா என்பது, 'டவுட்'தான்! பத்திரிகை செய்தி: தமிழகத்தைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமாரோஸ், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இவர் ஏற்கனவே, பா.ஜ., இந்திய ஜனநாயக கட்சியில் இருந்துள்ளார். மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ், சமீபத்தில், லட்சிய ஜனநாயக கட்சியை புதுச்சேரியில் துவக்கினார். மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜயின் த.வெ.க.,வில் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச் செயலராக உள்ளார். டவுட் தனபாலு: 'குடும்பத்தினர் எல்லாம், ஆளுக்கொரு கட்சியில் இருக்கணும்... அப்பதான், நாளைக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நம்ம தொழில்களை இடையூறு இல்லாம நடத்த முடியும்' என திட்டமிட்டே, ஆளுக்கொரு கட்சியா பார்த்து சேர்ந்திருக்காங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! பத்திரிகை செய்தி: 'தே.மு.தி.க.,விற்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை உறுதி செய்வதோடு, 30 சட்டசபை தொகுதிகள் தர வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா நிபந்தனை விதித்துள்ளதால், கூட்டணியில் இணைவதில் இழுபறி நீடிக்கிறது. டவுட் தனபாலு: அது சரி... 30 சீட்கள் கேட்கிற அளவுக்கு தே.மு.தி.க., வளர்ந்திருக்கா அல்லது அ.தி.மு.க., பலவீனமாகிடுச்சா என்ற, 'டவுட்' தான் வருது... தி.மு.க., பக்கம் போய் பிரேமலதா இப்படி கேட்க முடியுமா என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!l