உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

பத்திரிகை செய்தி: த.வெ.க., ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேச்சை நம்பி, அக்கட்சியில் சேர சென்னை வந்த சில பேர், அவர் மீது அதிருப்தியுடன் ஊர் திரும்பி உள்ளனர். இப்படி கசப்பான பல்வேறு நிகழ்வுகளை அடுத்து, கடுமையான புழுக்கத்தில் இருக்கும் செங்கோட்டையன், தேர்தலுக்கு முன், வேறு கட்சிக்கு செல்லும் யோசனைக்கு வந்திருப்பதாக தெரிகிறது. டவுட் தனபாலு: 'தேமே'ன்னு அ.தி.மு.க.,வில் இருந்தபடி, 'எடப்பாடி'யின், 'எட்டாம் பொருத்தமாக' வலம் வந்தவரை, வேண்டுமென்றே த.வெ.க.,வுக்கு இழுத்து, வெளிப்படையாக அவமானப்படுத்தி ஓரங்கட்ட யாரோ, பின்புலமாக செயல்படுகின்றனரோ என்ற, 'டவுட்'டை, த.வெ.க.,வில் யாராவது வாய் திறந் தால் தான், தீர்க்க முடியும்! பத்திரிகை செய்தி: தமிழக காங்கிரசில், அமைப்பு ரீதியாக, 71 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், ஆறு பெண்கள் உட்பட, 68 புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள், 'கோட்டா சிஸ்டத்தில்' மாவட்ட தலைவர் பதவியை கைப்பற்றும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தகுதி அடிப்படையில் அனைவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். டவுட் தனபாலு: இவ்வளவு பேர் காங்கிரசில் இருக்காங்களாங்கிறது முதல் சந்தேகம்; கோஷ்டி தலைவர்களின் ஆசி இல்லாமல், காங்கிரசில் மூச்சு கூட விட முடியாதேங்கிறது இன்னொரு சந்தேகம். வேட்பாளர்கள் யார்ங்கிறதை பார்த்தால், எல்லா உண்மையும் விளங்கிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை! பத்திரிகை செய்தி: தி.மு.க., மூத்த தலைவர் துரைமுருகனுக்கு காது கேட்கும் திறன் குறைந்துள்ளதாகவும், அவரது உடல் பலவீனமாக இருப்பதாகவும், அவர் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, வரும் சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிடாமல், ஒதுங்கிக் கொள்ள துரைமுருகன் முடிவு செய்துள்ளார். வேலுார் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலை தவிர்ப்பதற்காக, கதிர் ஆனந்த் மனைவிக்கு, சட்டசபை தேர்தலில் காட்பாடியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என, துரைமுருகன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். டவுட் தனபாலு: துரைமுருகன் உடல் பலவீனம் அடைந்து விட்டார் என்பதையும், அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்பதையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அவர் மகன் கதிர் ஆனந்தின் மனைவியை, காட்பாடி தொகுதியில் போட்டியிட வைப்பதெல்லாம், 'டூ மச்' என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

duruvasar
ஜன 21, 2026 16:44

டூ மச் இல்லை த்ரீ மச் . அப்பா குடியாத்தம் குமரா, எங்கய்யா போய்ட்டிங்க ?


Anantharaman Srinivasan
ஜன 21, 2026 15:46

துரைமுருகன் போட்டியிட முடியாவிட்டால் மருமகளுக்கு சீட் என்பது, சாப்பிட முடியாவிட்டாலும் சோற்றை வயிறுமேல் வைத்து கட்டிக்கொள்வதுபோலிருக்கு.


D.Ambujavalli
ஜன 21, 2026 06:37

பின்னே, துரைமுருகன் ஒய்வு பெற்றதும் வெளியிலிருந்தா போட்டியிடுவார்? கருணாநிதி, கனிமொழி, ஸ்டாலின், உதயநிதி என்று அவர்கள் மட்டும்தான் 'வாழையடி வாழையாக' பதவிக்கு வர வேண்டுமா? ராமதாஸ், அன்புமணி, அவர் மனைவி சவுமியா, மகள் என்று வம்சம் பூராவும் ஆள்வதுதானே அரசியல்


சமீபத்திய செய்தி