உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர்: கடந்த ஆண்டு டிச., 3ம் தேதி, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் ஐவர் குழு சார்பில், கூட்டணி நிலைப்பாடு, தொகுதி பங்கீடு பேச்சு குறித்து விவாதித்தோம். அப்போது, காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளை, முதல்வரிடம் தெரிவித்தோம். தி.மு.க., சார்பில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன், ஐவர் குழுவை அழைத்து பேசுவோம் என, எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரு மாதங்கள் கடந்தும், எங்களுடன் தி.மு.க., தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த அழைக்காதது, வருத்தம் அளிக்கிறது. டவுட் தனபாலு: தி.மு.க.,வோடு பொழுதுக்கும் சண்டை இழுத்துக்கிட்டே இருக்கிற உங்க கட்சியின் மாணிக்கம் தாக்கூர், திருச்சி வேலுச்சாமி போன்றோருக்கு, காங்கிரஸ் டில்லி தலைமை வாய்ப்பூட்டு போட்டும், அவங்க அடங்குற மாதிரி தெரியலையே... இந்த சூழல்ல அறிவாலயத்துல இருந்து இப்போதைக்கு உங்களுக்கு அழைப்பு வருமாங்கிறது 'டவுட்' தான்! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: அ.தி.மு.க., நமக்கானது என உணர்ந்து, தினகரன் எத்தனையோ கசப்பான அனுபவங்களை மறந்து, அ.தி.மு.க.,வை வலுப்படுத்த ஒன்று சேர்ந்திருப்பதை, மற்றவர்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியில் காத்திருக்கும் மற்ற தலைவர்களுக்கும், அ.தி.மு.க., வாசல் திறந்தே உள்ளது. டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை தான் மறைமுகமா அழைக்கிறீங்கன்னு தெரியுது... பன்னீருக்கு எந்த சூழலிலும் கட்சியில் இடமில்லைன்னு பழனிசாமி முழங்கினாரே... இப்ப நீங்க அவர் ஒப்புதலோடு இப்படி சொல்றீங்களா, இல்ல ஆர்வ கோளாறுல அழைக்கறீங்களா என்ற, 'டவுட்' வருதே! நடிகர் விஜயின் த.வெ.க., மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை தி.மு.க., - அ.தி.மு.க., மறந்துவிட்டன. அண்ணாதுரை பெயரில் கட்சி நடத்தும், அ.தி.மு.க.,வினர், அவரை முழுமையாக மறந்து விட்டனர்; அது எனக்கு பிடிக்கவில்லை. அதனாலேயே அக்கட்சியில் இருந்து வெளியேறினேன். டவுட் தனபாலு: அப்படி போடுங்க... அ.தி.மு.க.,வில் பிரிந்து போன எல்லாரையும் கட்சியில சேர்க்கணும்னு பழனிசாமிக்கு கெடு விதிச்சதால, கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டீங்க... கடைசியில உங்கள கழற்றி விட்டுட்டு, தினகரன், பன்னீர் ஆதரவாளர்கள்னு மற்ற எல்லாரும், அ.தி.மு.க.,வோடு ஐக்கியமாகிட்டாங்கன்னு, இப்ப அண்ணாதுரை பக்கம் வண்டியை திருப்பிட்டீங்க என்பதில் 'டவுட்'டே இல்லை! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

duruvasar
ஜன 29, 2026 10:00

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான அழகிரியாவது அறிவாலயம் வாசலில்தான் காவல் காத்துக்கொண்டிருந்தார் செல்லபெரும்தொகை அறிவாலயம் உள்ளேயே எடுபிடி வேலைகள் செய்துகொண்டிருக்கிறார் அப்படியிருந்தும் இன்னும் ஏன் அறிவாலயம் அழைக்கவில்லை என்ற டவுட்டு எழவேயில்லையா ?


D.Ambujavalli
ஜன 29, 2026 06:28

த வெ .க என்ற புது கட்சி காட்டும் carrot மயக்கத்தில், காங்கிரஸ் நாசூக்காக கழன்றுகொள்ளும் எண்ணத்தில் இருக்கிறது போலும் மேலே, ராகுலுடன் பேச கனிமொழி கிளம்பி இருக்கிறார் இங்கு கூச்சலிடுபவர்களை அடக்கப்போகிறதா, இல்லை அவர்கள் வழியில் விஜய் பக்கம் சாயப்போகிறதா பார்க்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை