உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா: தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த பின், தே.மு.தி.க.,வை பலர் குறை சொல்கின்றனர். குறை சொல்லாத வாயும், குரைக்காத நாயும் உலகத்திலேயே கிடையாது. குறை சொல்வோர் சொல்லிக் கொண்டே இருப்பர். குரைக்கும் நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கும். எங்கள் வேலையை பார்த்துக் கொண்டு, நாங்கள் போய் கொண்டிருக்கிறோம். டவுட் தனபாலு: அரசியலுக்கு வந்துட்டா, எல்லா விமர்சனங்களையும் எதிர்கொண்டு தான் ஆகணும்... அதுக்காக, விமர்சிப்பவர்களை நாய்கள்னு தரக்குறைவா நீங்க திட்டுவதை, உங்க கூட்டணி தலைமையான தி.மு.க.,வே ஏத்துக்குமா என்பது, 'டவுட்' தான்! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒழிய, அவர்களுக்கு அரசியல் அதிகார பகிர்வை தருவது மட்டுமே நிலைத்த தீர்வாக அமையும். ஆனால், இன்றைக்கு தி.மு.க., அரசு, மாதம், 1,000 ரூபாய் தருவதை மகளிர் உரிமைத்தொகை என்கிறது. அதாவது, ஒரு நாளுக்கு அரசு வழங்கும் வெறும், 33 ரூபாய் தான் மகளிருக்கான உரிமையா? மகளிருக்கான உரிமை என்பது அரசு வழங்கும் அற்பத் தொகையில் இல்லை; சம அதிகாரம் அளிப்பதில் உள்ளது. டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... இன்றைய விலைவாசிக்கு, 33 ரூபாயில் ஒரு கிலோ அரிசி கூட வாங்க முடியாது... ஒரு நாளைக்கு, 1,000 ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தால், மகளிர் உரிமைத் தொகை எல்லாம் அவசியமே இல்லை என்பதில், 'டவுட்'டே இல்லை! அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டனும், முதல்வர் உட்பட எந்த பதவியையும் பெற முடியும். தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பதவிகளை பெற முடியும். கருணாநிதி உயிரோடு இருந்த வரை, ஸ்டாலினை அவர் நம்பவில்லை. கட்சி தலைமை, முதல்வர் பதவி என, எதையும் ஸ்டாலினுக்கு தரவில்லை; செயல் தலைவர், துணை முதல்வர் என்றே பதவிகளை வழங்கினார். கருணாநிதியே நம்பாத ஒரு நபர் தான் ஸ்டாலின். இதை உலகம் அறியும். டவுட் தனபாலு: நீங்க, அ.தி.மு.க.,வில், 1989ல் முதல் முறையா எம்.எல்.ஏ., ஆகிட்டீங்க... ஆனா, ஜெ.,வுக்கு ஒரு இக்கட்டான சூழல் வந்து பதவி விலக நேர்ந்தப்ப, உங்களை தேர்வு செய்யாம, 2001ல் முதல் முறை எம்.எல்.ஏ., ஆன பன்னீர்செல்வத்தை தானே முதல்வர் பதவிக்கு தேர்வு செஞ்சாங்க... இதனால, ஜெ., உங்களை நம்பலையா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை