டவுட் தனபாலு
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி எழுதுவதையே தொழிலாக கொண்ட வைரமுத்துவுக்கு, 'ஞானபீட விருது' வழங்குவதும், பிரதமர் மோடி மற்றும் ஹிந்து தேசிய கொள்கைகளை எதிர்த்து அவதுாறு பரப்பும் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கு, 'சாகித்ய அகாடமி விருது' வழங்கு வதும் கண்டனத்துக்கு உரியது. டவுட் தனபாலு: மத்திய பா.ஜ., அரசுக்கு ஆதரவானவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படுவதாக, எதிர்க்கட்சிகள் எல்லாம் குற்றஞ்சாட்டிட்டு இருந்தாங்க... அந்த விமர்சனங்கள் எல்லாம் தப்புன்னு காட்டுவதற்காகவே, மேற்கண்ட ரெண்டு பேருக்கும் விருதுகள் குடுத்திருப்பாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! பத்திரிகை செய்தி: சட்டசபை தேர்தலில், 5 கோடியில் இருந்து, 20 கோடி ரூபாய் வரை செலவு செய்தால் தான், வெற்றியை நெருங்க முடியும் என்பதால், அதற்கு தகுதியானவர்களுக்கு மட்டுமே 'சீட்' கொடுக்க த.வெ.க., தலைமை முடிவு செய்துள்ளது. 'தேர்தல் செலவுக்கு விஜயிடம் யாரும் பணம் எதிர்பார்க்க வேண்டாம். பணமிருந்தால் மட்டுமே சீட்' என்றதால், நிர்வாகிகள் பலரும் பின்வாங்கி விட்டனர். இதனால் , வேட்பாளர்கள் கிடைக்காமல், த.வெ.க., தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டவுட் தனபாலு: அது சரி... 1,000 ரூபாய் கொடுத்து, 'பிளாக்' கில் டிக்கெட் வாங்கி படம் பார்த்த ரசிகர்களால தான், விஜயால அரசியலுக்கு வர முடிஞ்சிருக்கு... அதே ரசிகனே, 10 - 20 கோடி ரூபாயை செலவழித்து, தேர்தலில் ஜெயித்து, தன்னை முதல்வராக்கணும்னு விஜய் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்ற 'டவுட்' வருதே! தமிழக பா.ஜ., தலைவர் நயி னார் நாகேந்திரன்: 'சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்' என கூறிவிட்டு பல மடங்கு உயர்த்தியது, தி.மு.க., அரசு; மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு நடத்தும் திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. மத்திய அரசு தமிழகத்திற்கு சாலைகள், பாலங்கள் அமைக்க, 14 லட்சம் கோடி ரூபாய் வழங்கியது . ஆனாலும், மத்திய அரசு எதையும் செய்யவில்லை என தி.மு.க., பொய் பிரசாரம் செய்கிறது. டவுட் தனபாலு: அது மட்டுமா... சொத்து வரி உயர்வுக்கு கூட, மத்திய அரசின் நெருக்கடி தான் காரணம்னு, நகராட்சி நிர்வாகத் துறையின் அமைச்சர் நேரு சொல்லியிருந்தாரே... அந்த வகையில், மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பதற்கும் மத்திய அரசு மீது பழி போட்டாலும் போடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!