உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: யார் எப்படி விமர்சித்தாலும், அதை பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 173 இடங்களில் போட்டியிட்டது. தற்போது, 'நாங்களும் தொகுதிகளை வெகுவாக குறைக்கிறோம். நீங்களும் விட்டு கொடுங்கள்' என, தி.மு.க., தரப்பில் கேட்டுள்ளனர். வலியும் இருக்கிறது; வலிமையும் இருக்கிறது. விரைவில் சுமுகமாக பேச்சு முடியும். * டவுட் தனபாலு: 'இரட்டை இலக்கத்தில், அதாவது, 10 தொகுதிகளுக்கு மேல தந்தால் தான் ஆச்சு'ன்னு ஒத்தக்கால்ல நின்னீங்களே... கடைசியில, பேசி பேசி உங்களை வழிக்கு கொண்டு வந்துட்டாங்களா... உங்க கட்சி வலிமை அடைஞ்சுடக் கூடாது என்ற தி.மு.க.,வின் பெரியண்ணன் மனோபாவம் உங்களுக்கு புரியலையா என்ற, 'டவுட்' தான் வருது! பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு: காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கூட, சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களை கேட்டு மத்திய அரசுக்கு கோரிக்கைகளை அனுப்பி வைக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் இருந்து, சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களை கேட்டு, எந்த கோரிக்கைகளையும் தி.மு.க., அரசு அனுப்பியதில்லை. * டவுட் தனபாலு: கோரிக்கைகளை அனுப்பினா மட்டும் நிதியை ஒதுக்கிடுவீங்களா... கல்வி, வெள்ள நிவாரணம்னு தமிழக அரசு கேட்ட எந்த நிதியுதவியையும் தராம இருந்துட்டு, இப்ப கேட்காதது தான் குற்றம்னு சொல்லி, நல்லாவே அரசியல் பண்றீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது! பத்திரிகை செய்தி: 'அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற கட்சியை துவக்கியுள்ள சசிகலாவும், பா.ம.க., நிறுவனர் ராமதாசும் கூட்டணி அமைத்துள்ளனர். பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு, அக்கட்சியின் மாம்பழம் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. இதனால், வரும் தேர்தலில் பா.ம.க.,வின் பெயர், கொடி, மாம்பழம் சின்னத்தை ராமதாஸ் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சசிகலா கட்சியின் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட, ராமதாஸ் அணியினர் முடிவு செய்துள்ளனர். * டவுட் தனபாலு: அடடா... ஒரு காலத்தில், தமிழக அரசியலையே ஆட்டிப் படைச்ச ராமதாஸ் நிலை இப்படி ஆகிடுச்சே... தென்னந்தோப்பு சின்னத்துல நிற்கும் ராமதாஸ் அணி வேட்பாளர்களுக்கான செலவை எல்லாம் சசிகலாவே ஏத்துக்கிறதா சொல்லிட்டாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி