உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

சிவகங்கை லோக்சபா தொகுதி, காங்., - எம்.பி., கார்த்தி: தேர்தல் கருத்து கணிப்புகளை எல்லாம் நான், 'சீரியஸாகவே' எடுத்துக் கொள்வதில்லை; அவையெல்லாம், 'பிசினஸ்' ஆகிவிட்டன. எல்லா கட்சிகளும், எல்லா கூட்டணிகளும், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் தான் உள்ளன. ஓட்டு எண்ணிக்கைக்கு பின் பார்ப்போம்; மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. டவுட் தனபாலு: ஓட்டு எண்ணிக்கை முடிவுகளில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காம போயிட்டா, தி.மு.க.,வுக்கு உங்க கட்சி ஆதரவு அளிக்குமா... ஒரு வேளை, தொகுதி பங்கீட்டில் உங்க கட்சியை நோக அடிச்ச, தி.மு.க.,வை சமயம் பார்த்து பழி வாங்கிடுவீங்களா என்ற, 'டவுட்' வருதே! பத்திரிகை செய்தி: தேர்தலுக்கு முன், ஈரோட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ, 'சீட் கொடுப்பது கட்சி போடும் பிச்சை; கட்சியினர் சரியாக செயல்படா விட்டால் சவுக்கை சுழற்றுவேன்' என்று பேசியிருந்தார். இதனால், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, ம.தி.மு.க., மாநில இளைஞரணி துணை செயலர் சோமசுந்தரம், ஈரோடு தெற்கு மாவட்ட செயலர் கோபால் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தங்கள் கட்சி பதவிகளை ராஜினாமா செய்து, தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். டவுட் தனபாலு: துரையின் தந்தை வைகோ, 1994ல், ம.தி.மு.க.,வை துவங்கி, 32 வருஷங்களா தப்பு தப்பா முடிவுகள் எடுத்து, கட்சியை படிப்படியா தான், 'காலி' செய்தார்... தந்தை எட்டடி பாய்ந்தால், தனயன், 16 அடி பாய்வது மாதிரி, கொஞ்சம் நஞ்சம் இருக்கும் கட்சியை, துரை, 'காலி' பண்ணிடுவாரோ என்ற, 'டவுட்' தான் வருது! ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: அதிகமான கருத்து கணிப்புகள், தி.மு.க., ஆட்சி அமைக்கும் என்றே தெரிவிக்கின்றன. ஒரு கருத்து கணிப்பு, அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகவும், மற்றொரு கருத்து கணிப்பு, விஜயின், த.வெ.க.,வுக்கு சாதகமாகவும் அமைந்திருக்கின்றன. த.வெ.க.,வுக்கு மாணவர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் ஆதரவு அதிகம் உள்ளது. தமிழகத்தில், த.வெ.க., குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. டவுட் தனபாலு: தேர்தலுக்கு முதல் நாள் வரைக்கும், விஜயை கடுமையாக தாக்கி பேசியவர், இப்ப இப்படி சொல்றாரே... தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக, விஜய் உருவெடுத்துட்டா, அவருடனும் கூட்டணி வைக்க வேண்டிய சூழல் வரலாம்னு நினைச்சு, அடக்கி வாசிக்கிறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Raajan
மே 04, 2026 07:23

எல்லா சீட்டிலும் துண்டு போட்டு வைத்தால் தான் நல்லதுனு நினைக்கிறார்


D.Ambujavalli
மே 04, 2026 06:23

பணம், பரிசுகள், இலவசங்கள், வீட்டுக்கு வந்து வடை, சப்பாத்தி சுடுவது என்று எல்லாவித சலுகைகளையும் வாங்கிக்கொண்ட . பட்டிகளில் அடைக்கப்பட்டு அளிக்கும் தீர்ப்பு எந்த அளவு நியாயமானதாக இருக்கும் ?