உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி: மிதமிஞ்சிய ஊழல், மது, போதை, சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், தினமும் கொலை மற்றும் கொள்ளை என, செயல்பாடற்ற அரசு நிர்வாகத்தின் மீது கோபம் கொண்ட இளைஞர்களும், தமிழக மக்களும், ஒரு தீர்க்கமான அரசியல் தீர்ப்பை வழங்கியுள்ளனர். நல்லாட்சி அமைக்க கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை, விஜய் நன்கு பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன். டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... நீங்க சொன்ன இந்த முக்கிய பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் விஜய் ஆட்சியில் தீர்வு கிடைச்சாலே, அது அவருக்கு பெரிய வெற்றிதான்... அதனால, அடுத்தடுத்த தேர்தல்களிலும், அவருக்கு வெற்றி கிடைக்கும் என்பதிலும், 'டவுட்' இல்லை! பத்திரிகை செய்தி: முதன் முதலாக தேர்தல் களம் கண்ட விஜய், அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர், விஜய்க்கு நெருக்கமானவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். விஜய் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் மொபைல் போன் எண்களை, செய்தியாளர்களிடம் கேட்டு வாங்கியுள்ளனர். விஜய் அரசில், முக்கிய பதவிகளை பிடிப்பதற்கு, காய் நகர்த்தி வருகின்றனர். டவுட் தனபாலு: அது சரி... யார் முதல்வராக இருந்தாலும், ஆட்சியை நடத்த போறது அதிகாரிகள் தான்... நிர்வாகத்தில் குளறுபடிகள் நடந்தால், அதிகாரிகளை யாரும் குறை சொல்ல மாட்டாங்க... 'விஜய் ஆட்சி சரியில்ல'ன்னு தான் விமர்சிப்பாங்க... அதனால இந்த மாதிரி, 'காக்கா' அதிகாரிகளிடம் இருந்து விலகி இருப்பதே விஜய்க்கு நல்லது என்பதில், 'டவுட்'டே இல்லை! அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தலைவர் சசிகலா: இந்த தேர்தலில், எனது பிரதான கோரிக்கையை மக்கள் அங்கீகரித்துள்ளனர். அதாவது, எதிரிகளும், துரோகிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர். தி.மு.க., மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தமிழக வரலாற்றிலேயே, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள, த.வெ.க., தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள். டவுட் தனபாலு: தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் வீழ்த்தப்பட்டும், அவங்களுக்கு எதிராக களம் கண்ட உங்க கட்சியினர் ஒருத்தர் கூட ஜெயிக்கலையே... ஆனாலும், காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக, விஜய்க்கு கிடைச்ச வெற்றியே என்னால்தான்னு சொல்றது சரியா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAVINDRAN.G
மே 06, 2026 12:27

இந்த தேர்தல் நமக்கு முக்கியமான சில பாடங்களை எடுத்துள்ளது 1. பணம் கொடுத்தால் ஓட்டு வாங்கி ஜெயித்து கொள்ளையடிக்கலாம் என்ற எண்ணம் பொய்த்தது. 2. பணம் வாங்கிக்கொண்டு மக்கள் அவர்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். 3. ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் ஜெயிக்கலாம் என்று த வெ க சிறப்பாக செய்துள்ளது. மேலும் பல அறியாத முகங்களை பணம் வாங்கிட்டு சீட்டு கொடுக்கவில்லை. ஆட்டோ டிரைவர் ராயபுரம் தொகுதி உதாரணம். 4. அராஜகம் ஊழல் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போதைப்பொருள் கலாசார அரசு முடிவு கட்டப்பட்டது. குறிப்பாக முதலமைச்சர் தோல்வி மக்களின் கடுமையான எதிர்ப்பை உணர்த்தியது. 5. கருத்து கணிப்பு தேர்தலுக்கு பின் கருத்து கணிப்பு இதெல்லாம் பணம் கொடுத்து பரப்பப்பட்டவை என்று தோலுரித்து காட்டியது இனிமேல் கருத்து கணிப்புன்னு எவனாவது பேசுவான்? ஒருத்தர் அரசியலே பேசமாட்டேன் என்று சவடால் விட்டாரே. இப்போ மூஞ்சியை எங்க போய் வச்சிக்குவார்? கருத்து கணிப்பை தடை செய்யணும் தேவைஇல்லாமா மக்களை குழப்பக்கூடாது. குழப்பினாலும் மக்கள் தெளிவா இருப்பாங்க. 6. ஒரு கட்சியை ரெண்டு திராவிட கட்சிகளும் சேர்ந்து எதிர்த்தும் ஒன்னும் ஜெயிக்க முடியல .மக்கள் சக்தி ஒன்று திரண்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை நன்கு புரியினைத்துள்ளது.


KR india
மே 06, 2026 06:57

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். கருத்துக் கணிப்புகள் பொய்க்கலாம் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தொலைக்காட்சி பேட்டியில், இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால், நான் இனிமேல் அரசியலே பேசமாட்டேன் என்றெல்லாம், அவசியமில்லாத சவடால்களை உதிக்கக் கூடாது என்ற பாலபாடத்தை, அரசியல் விமர்சகர் ஒருவருக்கு உணர்த்தியுள்ளது. அரசியல் வெற்றியை, தவறாக கணித்தது தவறல்ல ஆனால், த.வெ.க வெற்றி பெற்றால், இனிமேல் அரசியலே பேச மாட்டேன் என்று கூறிவிட்டு, அவ்வாறு கூறியதற்கு வருத்தம்கூட தெரிவிக்காமல், மீண்டும் அரசியல் பேசலாமா அண்ணா ? புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை