உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்:

பா.ஜ.,வில் இருந்து விலகிய அண்ணாமலை தனி இயக்கம் ஆரம்பித்துள்ளார். அவருடன் ஒன்றிரண்டு பா.ஜ., பொறுப்பாளர்கள் சென்றுள்ளனர். அதாவது, 'பிரதமர் மோடி ஆசியுடன் தான், நாங்கள் தனி இயக்கம் ஆரம்பிக்கிறோம்' என்று அவர்களை, அண்ணாமலை மூளைச்சலவை செய்துள்ளார். பிரதமர் மோடியின் ஆசியோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆசியோ, தேசிய தலைவர்களின் ஆசியோ, எந்த இயக்கத்திற்கும் கிடையாது. பா.ஜ., தொண்டர்கள் யாரும், எதையும் நம்பி போக வேண்டாம்.

டவுட் தனபாலு:

'கட்சியை விட்டு போறேன்'னு சொன்ன அண்ணாமலையை, 'சரி போங்க'ன்னு சொல்லாம, உங்களது டில்லி தலைவர்கள் எல்லாம் கூப்பிட்டு வச்சு, மூணு நாளா ஆலோசனை நடத்தியது ஏன்...? அதனால, அண்ணாமலை சொல்றதை தான் எல்லாரும் நம்புவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! ---

விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்:

தி.மு.க., அரசின் ஊழல், 36 சதவீத கமிஷன் அரசியல், குடும்ப ஆதிக்கம், நிர்வாக தோல்வி மற்றும் அகந்தைக்கு எதிராகவே தமிழக மக்கள் ஓட்டு போட்டனர். கடந்த ஐந்தாண்டுகளில் நடந்தது வளர்ச்சி அரசியல் அல்ல; கமிஷன் மாடல் ஆட்சி. அதற்கான தண்டனையை தான், தேர்தலில் மக்கள் வழங்கியுள்ளனர்.

டவுட் தனபாலு:

'தி.மு.க., அஞ்சு வருஷங்களா நல்லாட்சி தரல'ன்னு இப்ப சொல்றீங்களே... தேர்தலுக்கு முன்னாடியே இது பத்தி கடுமையா பேசி, கூட்டணியில் இருந்து வெளியே வந்திருந்தால், 'டவுட்' இல்லாம உங்களை பாராட்டியிருக்கலாம்... அவங்க தயவில் ஐந்து சீட்கள்ல ஜெயிச்சுட்டு, கூட்டணியை முறிச்சதும் குற்றம் சாட்டுவது சரியா என்ற, 'டவுட்' வருதே! ------

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:

இப்போது, தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் தான், தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு முட்டு கொடுத்துள்ளனர். அவர்களின் தயவு உள்ள வரை தான், விஜய் ஆட்சி இருக்கும். த.வெ.க., ஆட்சி என்ற நாற்காலிக்கு, இரண்டு கால்கள் இரவல் கால்கள். அந்த இரண்டு கால்கள் எந்த நேரத்திலும் உடையும்; நாற்காலி கவிழும்.

டவுட் தனபாலு:

'தி.மு.க., கூட்டணி கட்சிகள் காலை வாரிட்டா ஆட்சி கவிழ்ந்துடும்'னு நீங்க சொல்றீங்க... தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், 'த.வெ.க., ஆட்சி மூணு மாதங்கள் கூட தாங்காது'ன்னு ஆரூடம் கணிக்கிறாரு... த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க, நீங்க ரெண்டு பேரும் கூட்டணி அமைக்க போறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAVINDRAN.G
ஜூன் 10, 2026 10:57

எடப்பாடி பழனிச்சாமி இருக்கும்வரை அதிமுக எப்போதும் ஜெயிக்காது


Anantharaman Srinivasan
ஜூன் 09, 2026 21:27

தவெக ஆட்சி ஐந்து வருடம் நிலைக்குமாயென்று யாராலும் இந்த தருணத்தில் ஆருடம் சொல்ல முடியாது. இடைத்தேர்தலுக்கு பின் நிலைமையை பார்ப்போம்.


உமாசங்கர்
ஜூன் 09, 2026 18:07

தவுட்டு தனபால் , அப்போ அந்த தலைவர்கள் அண்ணாமலை சொல்வதை கேக்கவில்லை போல இருக்கே , இல்லை அண்ணாமலை சொன்னதை தலைவர்கள் கேட்கவில்லையா ? யார் சொல்றதையும் யாரும் கேட்க மாட்டாங்க, இங்க வெற்றி பெற்றவர்கள் சொல்வது தான் கேட்பாங்க , இப்போ சொல்லுங்க தொண்டர்கள் யார் பக்கம் ?


Venkatesan
ஜூன் 09, 2026 16:20

எந்த கால்கள் கவுத்தாலும் ஆதீம்கா மீண்டும் வரவே வராது நீங்கள் உள்ள வரை.


கல்யாணராமன் சு.
ஜூன் 09, 2026 16:14

அண்ணாமலை ஒருவேளை டெல்லியிலே இருந்த அந்த மூணு நாளும் , மோடியையும் , அமித் ஷாவையும் "நீங்க ரெண்டு பெரும் எனக்கு ஆசி வழங்கியிருக்கீங்க " அப்படின்னு மூளை சலவை செஞ்சிருப்பாரோ ?


D.Ambujavalli
ஜூன் 09, 2026 07:35

கட்சி. மாறி வந்தவர்களைத். தக்க. வைக்க. பதவிகள். வழங்கியும், அவர்கள் அந்தக். காட்சிகளில். செய்த. ஊழல்களை. இங்கும். அரங்கேற்றும்போது. கண், காதுகளை . இறுக மூடிக்கொண்டிருந்தால் நல்லபடியாக. 5. வருஷத்தை. ஓட்டலாம் அதனால்தான் முதல்வர். மௌன. சாமியாராக. இருக்கிறாரோ? எங்கள். தயவால்தானே.உங்கள். ஆட்சி. அமைந்தது


புதிய வீடியோ