உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ:

எங்கள் கட்சியில் ஊருக்கு 10 பேராவது இருக்கின்றனர். கிளைகள் கூட இல்லாத கட்சிக்கு எட்டு இடங்கள்; காணாமல் போகும் நிலையில் இருந்த கட்சிக்கு, 10 இடங்களுடன் ராஜ்யசபா சீட் என தி.மு.க., கூட்டணியில் கொடுத்தனர். எங்கள் சுயமரியாதை, தன்மானத்தை இழந்து ஒன்பது ஆண்டுகள் பயணித்தோம். தற்போது முதல்வர் விஜயிடம் நான், 50 கோடி ரூபாய் வாங்கி விட்டதாக பேசுகின்றனர்.

டவுட் தனபாலு:

கடந்த 2016ல், கம்யூ., - வி.சி.க., - தே.மு.தி.க.,வை எல்லாம் சேர்த்து மக்கள் நலக் கூட்டணியை நீங்க உருவாக்கியப்ப, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் 1,500 கோடி ரூபாய் வாங்கிட்டீங்கன்னு குற்றம்சாட்டினாங்க... பத்தே வருஷத்துல உங்க மதிப்பை 50 கோடி ரூபாயா குறைச்சுட்டாங்களே என்ற வருத்தம் உங்களுக்கு இல்லையா என்ற 'டவுட்'தான் வருது! -----

வி.சி.க., தலைவர் திருமாவளவன்:

'அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்' என, த.வெ.க., அரசு தெரிவித்துள்ளது. அந்த தங்க மோதிரம், சில மாதங்களிலேயே குழந்தைக்கு பொருந்தாமல் போகும். எனவே, தங்க மோதிரம் வழங்குவதற்கான 755 கோடி ரூபாயில், அரசு மருத்துவமனைகளில் உயரிய வசதிகளுடன் கூடிய பிரசவ வார்டுகளை உருவாக்க வேண்டும் .

டவுட் தனபாலு:

தி.மு.க., கூட்டணியில் இருந்தப்ப, அவங்க எந்த இலவச திட்டம் அறிவிச்சாலும், 'ஆஹா, ஓஹோ'ன்னு விழுந்தடிச்சிட்டு பாராட்டுவீங்களே... இப்ப மட்டும் மாற்று கருத்து சொல்றீங்க... முதல்வர் விஜயிடம் நீங்க வச்ச பல கோரிக்கைகள் நிறைவேறாமல் இருப்பதால், ஆளுங்கட்சியை குறை சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! -------

தமிழக துணை சபாநாயகர் ரவிசங்கர்:

-சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதை அனைவரும் பாராட்டுகின்றனர். 'சட்டசபையில் முதல்வர் நடிகராகவும், சபாநாயகர், துணை சபாநாயகர் இயக்குநர்களாகவும் காணப்பட்டனர்' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சொல்கிறார். ஆனால், அதைக் கூட எழுதி வைத்த பேப்பரை பார்த்து தான் படித்தார்.

டவுட் தனபாலு:

முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் எல்லாம் துண்டு சீட்டு கலாசாரமே கிடையாது... அரசியல், ஆட்சி நிர்வாகம் பற்றி எப்ப, எதை கேட்டாலும் பட்டுன்னு பதில் தருவாங்க... இன்றைய இளம் அரசியல் தலைவர்களுக்கு அந்த அளவுக்கு சிந்திக்கவோ, செயல்படவோ தெரியலை என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 28, 2026 19:25

சட்ட. மன்றத்திலும், பொதுக்கூட்டங்களில். முக்கியமான. தரவுகளைத்திரட்டி, பலமுறை home work செய்தபிறகே. மடைதிறந்த. காட்டாறு. போல. பேச்சு. பிரவாகமாக. எடுக்கும். அழகில். மயங்கி மக்கள். நேரம். சென்றது. தெரியாமல். ரசித்த. காலமெல்லாம். போய்விட்டது நாலு வார்த்தை. பேசவே. பத்துமுறை. துண்டுச்சீட்டு, A4 தாள். பார்த்துக்கூட. வரிக்கு. 8. தவறுகள், தமிழை. படுகொலை. செய்தல். என்றிருக்கையில், மக்களும், விட்டால். போதும். என்று ஓட்டம். பிடிக்கிறார்கள்