உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி, மதுரை மேற்கு தொகுதியில் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில், ரேஷன் அரிசியை பொதுமக்களுக்கு சட்ட விரோதமாக வழங்கி உள்ளனர். பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய ரேஷன் அரிசியை எடுத்து அவர்களுக்கே வழங்கியதாக, அந்த தொகுதி த.வெ.க., - - எம்.எல்.ஏ., தங்கபாண்டி மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். டவுட் தனபாலு: அது சரி... இதே, திராவிட கட்சியினரா இருந்தா, அரிசி கடைகளுக்கு போய் மிரட்டி, உருட்டி அரிசி பைகளை அள்ளிட்டு வந்து மக்களுக்கு குடுத்திருப்பாங்க... த.வெ.க.,வினருக்கு அந்த அனுபவம் இல்லாததால, ரேஷன் அரிசியை துாக்கி கொடுத்துட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! பா.ம.க., தலைவர் அன்புமணி: அந்தமான் நிக்கோபார் தீவுகளில், 'நிக்கோபார் வளர்ச்சி திட்டம்' கொண்டு வரப்பட்டு உள்ளது. 'அந்த திட்டத்தை செயல்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்' எனக் கூறி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அதை எதிர்க்கிறார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட வேண்டும் என, கர்நாடக காங்., அரசு துடிக்கிறது. அதற்காக, 12,500 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கவும் திட்டமிட்டுள்ளது. அந்தமானுக்கு ஒரு நீதி; கர்நாடகாவிற்கு ஒரு நீதியா? டவுட் தனபாலு: கர்நாடகாவில் மேகதாது அணை திட்டத்தை கைவிட்டால், அடுத்த சட்டசபை தேர்தலில் அங்கு காங்கிரசால் ஜெயிக்க முடியுமா என்பது, 'டவுட்'தான்... தேர்தல் ஆதாயத்துக்கு முன்னாடி, சுற்றுச்சூழல் எக்கேடு கெட்டா எனக்கென்ன என்று ராகுல் நினைச்சிட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது! இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன்: முதலாளித்துவ சமூகத்தை மாற்றவும், ஜனநாயக சக்திகளின் உரிமைகளுக்காகவும், நாட்டின் வளர்ச்சி மற்றும் தமிழக முன்னேற்றத்திற்காகவும் போராடுவதே எங்கள் நிலைப்பாடு. எங்களால் ஜனநாயக சக்திகளுடன் இணைந்தும் களமாட முடியும்; தனித்தும் களமாட முடியும். டவுட் தனபாலு: 'தனித்து போட்டியிட முடியும்'னு பெருமை பேசுறீங்களே... வர்ற உள்ளாட்சி தேர்தலில், தமிழகம் முழுக்க உங்க கட்சி சார்பில் தனித்து போட்டியிடும் துணிச்சல் உங்களுக்கு இருக்குதா...? அப்படி போட்டியிட்டு உங்க பலம் அம்பலமாகிட்டா, அடுத்தடுத்த தேர்தல்களில் உங்க கட்சியை கூட்டணியில் சேர்க்க யாராவது முன்வருவாங்களா என்பது, 'டவுட்'தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பேசும் தமிழன்
ஜூலை 02, 2026 08:13

என்னாது... சுற்று சூழலுக்கு ஆதரவாகவு எதிர்க்கிறாரா.... அமெரிக்கா... ஜார்ஜ் சோரஸ் கும்பல் சொல்லி கொடுப்பதை இங்கே வந்து வாந்தி எடுத்து விட்டு போகிறார்.... அவ்வளவு தான்.... அவருக்கு அந்தளவுக்கு அறிவு கிடையாது.


புதிய வீடியோ