உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

காங்., தமிழக முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை:

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வர் என்ற அடிப்படையில் தான், த.வெ.க.,வுடன் கூட்டணி வைக்கப்பட்டது. ஆனால், கூட்டணி அமைத்த பின், 'வருங்கால பிரதமர் விஜய்' என அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் பேசுகின்றனர். இவர்களின் பேச்சில் உள்நோக்கம் உள்ளது. ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்பதே, காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்பு. இந்த நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டதற்கு, கட்சிக்குள் நடக்கும் சதிகளே காரணம். தமிழகத்தில் இரண்டு அமைச்சர் பதவி பெற்றதால் மாற்றம் வராது; ராகுல் பிரதமரானால் தான் மாற்றம் வரும்.

டவுட் தனபாலு:

ராகுல் பிரதமரானால் தான் மாற்றம் வரும்னா, அதற்கு முன் தமிழக அமைச்சரவையில் கிடைத்த இரண்டு அமைச்சர் பதவிகள், மாற்றத்துக்காக இல்லையா என்ற, 'டவுட்' வருதே! -----

பா.ம.க., தலைவர் அன்புமணி:

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை, இலங்கை அரசு உடைத்து கடலில் மூழ்கடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கைதான மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னும், அவர்களின் படகுகளை உடைத்து வாழ்வாதாரத்தை அழிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்களை வங்கக்கடலில் இருந்தே அகற்றுவது தான் இலங்கையின் திட்டம். இதை, மத்திய - -மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக, மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் அழுத்தம் தர வேண்டும்.

டவுட் தனபாலு:

அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் தர வேண்டிய பிரச்னையில், புதிதாக வந்தவருக்கு மட்டும் 'ஹோம் வொர்க்' கொடுப்பது ஏன்னு, 'டவுட்' வருதே! -----

தி.மு.க., சட்டப்பிரிவு இணை செயலர் பரந்தாமன்:

'ஆல மரமாக இருந்த தி.மு.க., இப்போது முருங்கை மரமாகி விட்டது' என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். வேதாளத்திற்கு முருங்கை மரம் ஏறத்தான் தெரியும்; ஆனால், தி.மு.க.,வுக்கு ஆல மரம் குறித்த எண்ணமே இருக்கும். 75 ஆண்டு கால தி.மு.க.வை 'பேக்' பண்ணிவிட்டதாகக் கூறும் த.வெ.க.,வுக்கு, மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளரே இல்லாமல், அ.தி.மு.க.,விலிருந்து வேட்பாளரை விலைக்கு வாங்கியுள்ளனர். அங்கு, தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்டு நான் பெறும் வெற்றி, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

டவுட் தனபாலு:

நீங்களும் தான் மாற்றுக்கட்சியில இருந்து ஆட்களை இழுக்குறீங்க... அப்புறம் த.வெ.க., பண்ணா மட்டும் உங்களுக்கு ஏன் இவ்ளோ கோபம் வருதுன்னு, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !