உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன்: கடந்த ஆண்டு ஆகஸ்டில் தமிழக அரசின் வரி வருவாய், 96 ஆயிரத்து 567 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு ஆகஸ்டில், 1 லட்சத்து 9,104 கோடி ரூபாயாக, அதாவது 12 சதவீதம் உயர்ந்துள்ளது. ஊழல் இல்லாத வரி வருவாயை, முதல்வர் விஜய் வெற்றிகரமாக பெருக்கி உள்ளார். கடனும், 19 சதவீதம் குறைந்துள்ளது. டவுட் தனபாலு: பாராட்டப்பட வேண்டிய சாதனை தான் என்பதில், 'டவுட்'டே இல்லை... தமிழக அரசின் கடன் 19 சதவீதம் குறைஞ்சிருப்பதும் நல்ல விஷயம் தான்... உங்களது அஞ்சு வருஷ ஆட்சியில, கடன் சதவீதத்தை பூஜ்யமாக்கினா, அடுத்தடுத்து த.வெ.க., ஆட்சியே தொடரும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை! மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம்: 'சென்னை பட்டினப்பாக்கத்தி ல் புதிய தலைமை செயலகம் கட்டுவது குறித்து, முதல்வர் விஜய் இறுதி முடிவெடுக்கவில்லை' என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுவது ஏற்புடையதாக இல்லை. 'புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும்' என அரசாணையே வெளியாகி உள்ளது. அந்த அரசாணை, முதல்வர் விஜய்க்கு தெரியாமல் எப்படி வெளியாகி இருக்க முடியும்? 'இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை' என முதல்வரை சொல்ல சொல்லுங்கள். டவுட் தனபாலு: முதல்வர் வீட்டருகே தலைமை செயலகத்தை கட்டி, அவரது மனதை குளிர வைக்க, சில அதிகாரிகள் எடுத்த முயற்சி தான் இந்த திட்டம் என்பதில், 'டவுட்'டே இல்லை... விட்டா, 'பட்டினப்பாக்கத்தில் முதல்வர் விஜய் பொதுக்கூட்டம் போட்டு, அறிவிப்பு வெளியிடணும்'னு கூட கேட்பீங்களோ என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது! தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: சென்னையில் தலைமை செயலகம் கட்ட எத்தனையோ இடங்கள் உள்ளன. ஆனால், கடற்கரையை பார்த்தபடி முதல்வர் அலுவலகம் அமைய வேண்டுமென ஜோதிடர் சொன்னதற்காகவே, பட்டினப்பாக்கத்தை முதல்வர் விஜய் தேர்ந்தெடுத்துள்ளார். ஒருவரின் ஆசைக்காக, ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஏற்க முடியாது. பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுவதாக முதல்வர் அறிவிக்க வேண்டும்; இல்லாவிடில், மீனவர்களோடு இணைந்து, தி.மு.க., பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும். டவுட் தனபாலு: 'பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்கும் முடிவில் இருந்து, தமிழக அரசு பின்வாங்கப் போகுது' என்ற தகவல், உங்களது விசுவாச அதிகாரிகள் மூலம் உங்களுக்கு வந்திருக்கும்... 'நாங்க விடுத்த எச்சரிக்கைக்கு அரசு பணிஞ்சிடுச்சு'ன்னு காட்டிக்கிறதுக்காக, இப்படி அறிக்கை விடுறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
செப் 25, 2026 16:54

இருக்கும் அதிகாரிகள். இன்னும். திமுகவின். விசுவாசிகளாகவே. இருப்பதால். அரசின். நடவடிக்கை. ஒவ்வொன்றையும். Update செய்துவிடுகிறார்கள் சூழ்நிலையை தனக்கு. சாதமாகப். பயன்படுத்திக்கொண்டு. Credit ஐ. தனக்கு. வாங்கிக்கொண்டுள்ளது. திமுக