உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / எழுத்தாளர் வீட்டில் திருட்டு மனம் மாறிய திருடன்

எழுத்தாளர் வீட்டில் திருட்டு மனம் மாறிய திருடன்

மும்பை, மஹாராஷ்டிராவில், வீடு புகுந்து திருடிய திருடன், அது மறைந்த மராத்தி எழுத்தாளரின் வீடு என்பது தெரிந்ததும் திருடிய பொருட்களை மீண்டும் வைத்துவிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.மஹாராஷ்டிராவில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலையை தன் எழுத்தின் வாயிலாக பிரதிபலித்தவர் நாராயண் சர்வே, 83. பிரபல மராத்தி எழுத்தாளரான இவர், கடந்த 2010ல் மறைந்தார். மஹாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டத்தின் நேரல் பகுதியில் நாராயண் சர்வே வசித்த வீட்டில், தற்போது அவரது மகள் சுஜாதா தன் கணவருடன் வசித்து வருகிறார்.இவர்கள் இருவரும், பால்கர் மாவட்டத்தின் விரார் நகரில் வசிக்கும் மகன் வீட்டிற்கு சமீபத்தில் சென்றனர். இதனால், கடந்த 10 நாட்களாக வீடு பூட்டி கிடந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் கொள்ளையடிக்க புகுந்தார். வீட்டில் இருந்த எல்.இ.டி., டிவி உட்பட விலை உயர்ந்தப் பொருட்களை அள்ளிச் சென்றார். மிச்சம் மீதி வைத்துச் சென்ற பொருட்களை திருட மறுநாள் வந்தார். அப்போது, வீட்டின் சுவரில் எழுத்தாளர் நாராயண் சர்வேயின் புகைப்படம் இருப்பதை கண்டார்.ஏழைகளின் கஷ்டங்களை எழுதியவர் வீட்டிலேயே திருடி விட்டோமே என வருந்தியவர், கொள்ளையடித்த பொருட்களை மீண்டும் அதே வீட்டில் வைத்துவிட்டு சென்றார். அத்துடன், 'மிகப்பெரிய எழுத்தாளரின் வீட்டில் கொள்ளையடித்ததற்கு என்னை மன்னிக்கவும்' என, குறிப்பு எழுதி வைத்துவிட்டுச் சென்றார்.சுஜாதா மற்றும் அவரது கணவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தபோது, இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், கொள்ளையடித்த பொருட்களில் பதிவான கைரேகைகளை வைத்து, திருட வந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SRENIVAAS
ஜூலை 23, 2024 18:16

திருடன் மனதையும் மாற்றிய எழுத்தாளர் வாழ்க ???


Rangarajan
ஜூலை 18, 2024 05:46

எழுத்தின் மதிப்புத்தெரிந்த திருடன் போல் பெரிய விஷயம். செய்வது திருட்டுத்தொழில் என்றாலும் அதிலும் நேர்மை.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ