பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா பகுதியை, சேர்ந்த மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., படிக்க 'சீட்' கிடைத்தும், பணம் கட்ட வழியில்லாததால் படிக்க முடியாத நிலையில் உள்ளார். நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே தேவாலா, சாமியார் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பெருமாள் -கனகா தம்பதி. அதில், பெருமாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கட்டட வேலை செய்த போது தவறி விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து நடமாட முடியாத நிலையில் படுக்கையில் உள்ளார். இவர்களின், மூத்த மகள் மிருதுளா,20. தனியார் பள்ளியில் படித்த இவர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, கேரளா மாநிலம் பாலா என்ற இடத்தில் 'நீட் கோச்சிங்' பெற்று, நீட் தேர்வில், 427 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு மேல்மருவத்துார் தனியார் மெடிக்கல் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைத்துள்ளது. ஆனால், கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார். மாணவி மிருதுளா கூறுகையில், ''தேவாலா கிராமத்தில் குடியிருந்து, எனது தந்தைக்கு கிடைத்த உதவித்தொகை மற்றும் தாயாரின் கூலி வேலை மூலம் கிடைத்த பணத்தை வைத்து இதுவரை படித்தேன். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் மிகுந்த சிரமப்பட்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், தனியார் மருத்துவ கல்லுாரியில் கட்டணத்தை செலுத்தி சேர முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகிறேன். நாங்கள் வாழும் பகுதியில், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் வாழ்ந்து வரும் நிலையில், டாக்டராகி எங்கள் கிராமத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியம் உள்ளது. எனது தங்கை மெர்சிதாவையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும். எனவே, அரசு நிர்வாகம் எனது படிப்பிற்கு உதவி செய்ய வேண்டும்,'' என்றார். தொடர்பு எண்: 9655969861.