உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ஆற்றில் முதலையை பிடிக்க கோழியை கட்டி வைத்த வனத்துறை: நெட்டிசன்கள் கிண்டல்

ஆற்றில் முதலையை பிடிக்க கோழியை கட்டி வைத்த வனத்துறை: நெட்டிசன்கள் கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் முதலையைப் பிடிக்க, ஆற்றின் மையப் பகுதியில், உயிருடன் உள்ள கோழியை கட்டி வைத்து, முதலையின் வருகைக்காக வனத்துறையினர் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வனத்துறையினரின் இந்த நடவடிக்கையை, 'நெட்டிசன்'கள் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே, கோதையாற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். ஆற்றில் உள்ள முதலைகளின் எண்ணிக்கையை கண்டறிந்து, அவற்றை பாதுகாப்பாக அகற்ற, மாவட்ட வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் முதற்கட்ட நடவடிக்கையை துவக்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, 'ட்ரோன்' வாயிலாக, ஆற்றில் உள்ள முதலைகளின் நடமாட்டத்தை, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், ஆற்றின் மையப் பகுதியில் உள்ள உறைகிணற் றின் மீது, உயிருடன் உள்ள கோழியை கட்டி வைத்து, ஆற்றின் நான்கு பகுதிகளிலும் கேமராக்களை பொருத்தி, முதலையை பிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், வனத்துறையின் செயல்பாடுகளை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'பொதுவாக ஆறு உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதியில் முதலைகள் புகுந்தால், அவற்றை கூண்டு அல்லது வலை அமைத்து பிடிப்பது வழக்கம்; சில சமயங்களில் மயக்க ஊசி செலுத்தி, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். 'ஆனால், கன்னியாகுமரியில் உயிருடன் உள்ள கோழியை, ஆற்றின் மையப் பகுதியில் கட்டி வைத்து, முதலை வரும் வரை அதிகாரிகள் நாள் முழுதும் காத்திருப்பது வேடிக்கையாக உள்ளது' என்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நீரில் உள்ள முதலையின் உடல் பருமன் மற்றும் எடையை கண்டறிய, இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதை சிலர் தவறாக புரிந்து கொண்டு, சமூக வலைதளங்களில் தவ றான கருத்துகளை பரப்பி வருகின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ