மேலும் செய்திகள்
கர்ப்பிணியரை மிரட்டி வீடியோ எடுத்த அதிகாரிகள்!
01-Apr-2026
மீரட்: உத்தர பிரதேசத்தில் தன் மகளுக்கு குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதை, ஓய்வுபெற்ற நீதிபதி மேளதாளத்துடன் கொண்டாடிய சம்பவம் அரங்கேறி உள்ளது. உ.பி.,யின் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஞானேந்திர குமார் ஷர்மா; ஓய்வுபெற்ற நீதிபதி. இவரது ஒரே மகள் பிரணிதா வசிஷ்டா. இவர், மனோதத்துவம் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தற்போது, மீரட்டில் உள்ள ஜுடிசியல் அகாடமியின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், ராணுவ அதிகாரி ஒருவருக்கும் 2018 டிச., 19ல் திருமணம் நடந்தது. எனினும், சில நாட்களிலேயே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால், பிரணிதா மன உளைச்சலுக்கு ஆளானார். இதற்கிடையே, பிரணிதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது; ஆனாலும் சண்டை ஓயவில்லை. அதிருப்தி அடைந்த பிரணிதா, விவாகரத்து கோரி மீரட் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம். பிரணிதாவுக்கு விவாகரத்து வழங்கி சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புக்கு பின், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பிரணிதாவை, அவரது தந்தை ஞானேந்திர குமார் ஷர்மா மற்றும் உறவினர்கள் மேளதாளம் முழங்க ஆடிப் பாடி உற்சாகமாக வரவேற்றனர். பிரணிதாவின் தந்தை ஷர்மா கூறுகையில், ''திருமண வாழ்வில் மகள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அறிந்து கொண்டேன். அந்த சூழலில் இருந்து அவரை விடுவிக்க முடிவு செய்தேன். சமூக எதிர்பார்ப்பை விட மகளின் மகிழ்ச்சியும், கண்ணியமும் முக்கியம்,'' என்றார். பிரணிதா கூறுகையில், ''திருமண வாழ்வில் மனதளவில் பலவீனமடைந்தேன். என் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க உதவிய குடும்பத்தினருக்கு நன்றி,'' என்றார்.
01-Apr-2026