UPDATED : அக் 10, 2025 07:22 AM | ADDED : அக் 10, 2025 12:25 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில், திருட சென்ற வீட்டில் புழுக்கமாக இருந்ததால், 'ஏசி' போட்டு குளுகுளு காற்று வாங்கியபடி, வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் சுருட்டிய திருடன், சிறிது நேரம் துாக்கம் போட்டு விட்டு சென்ற தகவல் வெளியாகி உள்ளது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 55; விவசாயி. இவர், அக்., 7ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு, குடும்பத்துடன் வெளியூர் சென்றார். நேற்று காலை அவரது வீட்டின் முன்புற இரும்பு கேட் திறந்து கிடந்தது. அருகில் வசிப்பவர்கள் அளித்த தகவலில், செல்வராஜின் உறவினர்கள் சென்று பார்த்தனர். அப்போது, இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர், பீரோவில் இருந்த 1 சவரன் செயின், 10,000 ரூபாய் ரொக்கம், வெள்ளிக்கொலுசு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. கருவேப்பிலங்குறிச்சி போலீசார் திருட்டு நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி, தடயங்களை சேகரித்தனர். திருட்டு நடந்த வீடு முழுதும் குளுகுளுவென இருந்தது. அப்போது தான், பீரோ இருந்த அறையில் 'ஏசி' இயங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. திருட்டில் ஈடுபட்ட நபர், வீட்டிற்குள் சென்றதும் ஏசி போட்டுக் கொண்டு, கூலாக பொருட்களை எல்லாம் மூட்டை கட்டிய பின், சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு சென்றது தெரியவந்தது. விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, அந்த 'கூல்' ஆசாமியை தேடி வருகின்றனர்.