15 கிலோ வெடிமருந்து வச்சுருக்கேன் உருட்டி வீசினேன்... ஊரே காலியாயிரும்... மதுரையில் அலப்பறை கொடுக்கும் இளைஞர்கள்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரை: ''குவாரிக்கு வச்சுருக்கிற 15 கிலோ வெடிமருந்த வச்சுருக்கேன். உருட்டி உருட்டி வீசினேன்... ஊரே காலியாயிரும்...' என மதுரையில் இளைஞர்கள் சிலர் அணுகுண்டு பட்டாசுகளை மாலையாக கோர்த்து அதில் பெட்ரோல் ஊற்றி வெடிக்க செய்தது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும். மதுரை நகரில் தீபாவளி பண்டிகையின்போது இளைஞர் ஒருவர் நுாற்றுக்கணக்கான அணுகுண்டு பட்டாசுகளை ஒரே நேரத்தில் மாலை போல கட்டி தனது கழுத்தில் மாலை போல அணிந்து கொண்டார். பின்னர் அந்த அணுகுண்டு பட்டாசில் தனது டூவீலரில் இருந்து பெட்ரோலை பாட்டிலில் நிரப்பி அதனை அணுகுண்டு பட்டாசு மீது ஊற்றி 'இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு. பெட்ரோல் களவாணி பையளுகடா. அணுகுண்டு பையளுகடா...' என கூறியபடி வைகையாற்று படிகட்டில் அணுகுண்டு பட்டாசு மாலையை துாக்கி வீசி வெடித்து கொண்டாடினார். தவிர, அணுகுண்டு பட்டாசு மாலையை கையில் வைத்தபடி 'குவாரிக்கு வச்சுருக்கிற 15 கிலோ வெடிமருந்த வச்சுருக்கேன். உருட்டி உருட்டி வீசினேன்... ஊரே காலியாயிரும்...' என்ற வசனத்தோடு ஆரப்பாளையம் ரவுண்டானாவில் உள்ள 'நம்ம மதுரை' போர்டு மீது வீசுவது போல் 'இன்ஸ்டா'வில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதுபோன்ற வீடியோவை பார்த்தவர்களுக்கு பொது இடங்களில் எளிதாக பெட்ரோல் குண்டு வீசலாம்' என்ற மனநிலையை உருவாக்கலாம் என்பதால் சம்பந்தப்பட்ட இளைஞர் யார், அவர் பின்னணி குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும். மேலும், 'என்னோட பேர கேளு, புழல் ஜெயிலில...' என்ற பாடல் வரிகளோடு தமுக்கம் ரோட்டில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேஸ் போன்று அதிவேகமாக சென்று அவுட்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் பஸ்களை மறித்து அலப்பறை கொடுத்ததை இன்ஸ்டாவில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இவர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் விசாரிக்க வேண்டும்.