பொய்யாக்கிய பெருமைக்குரியவர்!
என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கூட்டணிக்காக அ.தி.மு.க., எவரையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை' என்று ஜம்பமாகப் பேசியுள்ளார், அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி.இன்று அ.தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள, எந்தக் கட்சியும் தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம்!எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டன என்பதை மறுக்க முடியாது.அதற்கு காரணம், அவர்கள் இருவருக்கும் மக்களிடம் அளப்பரிய புகழும், செல்வாக்கும் இருந்தன.எம்.ஜி.ஆர்., தான் போட்டியிட்ட எந்த தொகுதியிலும் தோற்றுப் போனதாக சரித்திரம் இல்லை.'என்னை நம்பிக் கெட்டவர்களைவிட, நம்பாமல் கெட்டவர்களே அதிகம்' என்று அவர் சொன்னது உண்டு. ஒரே சமயத்தில் தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் அ.தி.மு.க., ஆட்சியை அமைத்த பெருமை எம்.ஜி.ஆரை மட்டுமே சேரும்!அதேபோன்று, எந்தக் கட்சியுடனும் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ளாமல், தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்த வரலாறும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு!பழனிசாமியோ வெற்றிக்குப் பதிலாக, தொடர் தோல்விகளையே பெற்றுள்ளார்.தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று வீராப்பு காட்டுவதில் இவரை மிஞ்ச எவராலும் முடியாது. எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க., இன்று புகழ் இழந்து போனதற்கு, பழனிசாமியின் நடவடிக்கைகளே காரணம் என்றால் மிகையாகாது.'என் கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே தெரியவில்லை' என்று சொன்னார் ஜெயலலிதா.அன்று அவர் கம்பீரமாக சொன்னதை, இன்று பொய்யாக்கி விட்ட பெருமையும் பழனிசாமியையே சேரும்! எத்தனை காலம் தான் ஏமாற்றுவர்?
எஸ்.சுந்தாஸா,
கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வினர்
காலம் காலமாக தங்களுக்கென்று சில மசாலாக்களை வைத்து உள்ளனர். அவற்றை தமிழக
மக்களின் கண்களில் துாவி, உண்மைக்கு புறம்பான விஷயங்களை பரப்பி, வெற்றி
பெற்று வருகின்றனர். மத்திய அரசு நிதி கொடுக்காமல் வஞ்சிக்கிறது,
ஹிந்தி திணிப்பு, பெரியார் தான் அனைவரும் படிப்பதற்கு காரணம், தி.மு.க.,
ஆட்சியில் தான் தமிழகம் முன்னேறியது, தமிழை வளர்ப்பது தி.மு.க., மட்டுமே,
திராவிட நாகரிகமே உலகத்தின் முதல் நாகரிகம் போன்றவை இன்றளவும் சொல்லப்படும்
பொய் பிரசாரங்கள். மத்தியில் அதிகாரத்தில் பங்கு வகித்தபோது, இவை
குறித்து பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. சொல்லப்போனால் நீர்வளத்துறை, கல்வி
போன்றவை அவர்களின் விருப்பப் பட்டியலில் கூட இருந்ததில்லை.காமராஜர்
அமைச்சரவையில் ஆர்.வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியன் போன்ற திறமையானவர்கள்
பலர் இருந்ததால் தான், தமிழகத்தில் கல்வி, உள்கட்டமைப்பு, விவசாயம்,
தொழிற்சாலைகள் போன்றவை பன்மடங்கு பெருகின. சுதந்திர போராட்ட
சமயத்தில், கள்ளுண்ணாமைக்காக லாந்தர் விளக்கு உட்பட பல வகை விழிப்புணர்வு
பிரசாரம் செய்தார், ராஜாஜி. சொந்த செலவில் கள்ளுண்ணாமைக்கு என்றே,
'விமோசனம்' என்ற பத்திரிகையையும் நடத்தினார். அவர் கொட்டும்
மழையில் வீடு தேடி சென்று மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என கோரிக்கை
விடுத்தும், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக அரசின் வருமானத்தைக்
காரணம் காட்டி, 1971ல் கள்ளுக்கடைகளை திறந்தார். அன்றிலிருந்து இன்று வரை,
'டாஸ்மாக்' வருமானத்தையே நம்பியுள்ளது, தமிழக அரசு. தமிழ்
மொழியின் முக்கிய ஆவணங்களை மீட்டு, அவற்றை பதிப்பித்து, தமிழுக்கு
புத்துயிர் ஊட்டியவர், உ.வே.சாமிநாத அய்யர். இன்றளவும் தமிழின்
மொழிபெயர்ப்பு, இணைய வடிவம் போன்றவற்றை எடுத்து செல்வது வெளிநாடுவாழ்
தமிழர்கள்!ஆனால், ஹிந்தி பிரசார சபா காந்திஜியால் துவக்கப்பட்ட
பொழுது, ஈரோட்டில் இடம் தந்து, ஹிந்திக்கு ஆதரவு அளித்தவர்களில்
முதன்மையானவர், ஈ.வெ.ராமசாமி!தமிழகத்தின் வரலாறு இப்படி இருக்க,
உண்மைக்கு புறம்பான கதைகளை கூறி தமிழர்களை ஏமாற்றி வருகிறது, தி.மு.க.,
அதையும் நம்புவதற்கு இங்கு ஒரு கூட்டம் உள்ளதால், பொய் விலை போகிறது!ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுவோர் இருப்பர் தானே? சிரிப்பு போலீசான விஜய்!
கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: த.வெ.க., தலைவர் நடிகர் ஜோசப் விஜய், இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று ரமலான் நோன்பு திறக்கும் காட்சிகள் சினிமாவையே மிஞ்சி விட்டன.வெள்ளை கைலி, வெள்ளை குல்லா அணிந்து, ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வருவது போல் வந்தார்.இந்த மாதிரிதான் வரவேண்டும் என்று இஸ்லாமிய குருமார்கள் அல்லது இமாம் எவராவது சொன்னரா என்ன? அவர்களது ஓட்டுகளை வாங்க, இஸ்லாமியர் போன்று வேடம் இட்டு நோன்பு திறந்து வைத்து, ரமலான் வாழ்த்தும் சொல்லி விட்டார்.அடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகை வரும்... அவர் கிறிஸ்துவர் என்பதால், வாழ்த்து சொல்வதில் பிரச்னை இருக்காது!ஆனால், நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல், 'புலி வேஷம் போட்டா உறுமணும், நாய் வேஷம் போட்டா குரைக்கணும், பூனை வேஷம் போட்டா மியாவ்னு கத்தணும், யானை வேஷம் போட்டா பிச்சை எடுக்கணும்' என சொல்லும் போதே, 'யானைக்கு வேற நல்ல குணம் கிடையாதா'ன்னு கேட்பார். அதுபோன்று அடுத்தடுத்து, கிருஷ்ண ஜெயந்தி, ராம் ஜெயந்தி, பிள்ளையார் சதுர்த்தி, நரசிம்ம ஜெயந்தி, ஹனுமன் ஜெயந்தி என்று நிறைய ஹிந்து பண்டிகைகள் வர உள்ளதே...ஹிந்துக்களின் ஓட்டுகளை வாங்க, அந்தந்த வேடம் இட்டு, விஜய் வாழ்த்து சொல்வாரா? சித்திரை மாதம் மாரியம்மன் திருவிழாக்கள் வரும்... அங்கே சென்று தீச்சட்டி துாக்கி ஓட்டுகள் சேகரிப்பாரா? தனக்கென்று கொள்கைகள் இல்லை; தன் சிந்தனையில் இருந்து பேசுவதும் இல்லை; தனக்கென்று ஓர் அரசியல் பாணியும் இல்லை. விஜய் எதற்கு அரசியலுக்கு வந்தார்?இவரது அரசியல் கொள்கைகள், திராவிட கழகத்தின் ஜெராக்ஸ் காப்பி போல் உள்ளன. அவர்கள் செய்ததைத் தான் விஜய் செய்கிறார்.இதற்கு, பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே... சினிமாவை விட்டு அரசியலுக்கு எதற்கு வர வேண்டும்? சொம்புக்குள் தலையை விட்ட பூனை போல், அரசியல் சுழலுக்குள் மாட்டிக்கொண்ட விஜயை பார்த்தால், சிரிப்பு போலீஸ் ஞாபகம் தான் வருகிறது!