உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / திண்டாடும் கேரளா!

திண்டாடும் கேரளா!

வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: --கல்வி, வேலைவாய்ப்பு, -சமூக அந்தஸ்து என இந்திய மாநிலங்களுக்கே முன்னுதாரணமாக இருந்த கேரளா, தற்போது, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் மானியக்கடன், 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் வருவாய், 75 சதவீதம், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், பென்ஷன் மற்றும் மாநில அரசின் கடனுக்கான வட்டிக்கே போய்விடுகிறது. இதனால், உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி இல்லை. இந்நிலைக்கு என்ன காரணம்?அதிகாரப் பரவல் என்பதை கொள்கையாகக் கொண்ட கம்யூ., அரசு, அதிகாரிகளிடம் அதிகாரத்தை குவித்துள்ளது. ஆனால், அதிகாரவர்க்கமோ பெரிதாகவும், செயல்திறனோ குறைவாகவும் உள்ளது. கர்நாடக அரசு, ஒரு லட்சம் மக்களுக்கு நியமித்துள்ள அரசு ஊழியர்களைவிட, 86 சதவீதத்திற்கும் மேல் கேரளாவில் பணியாற்றுகின்றனர். உதாரணத்திற்கு, கர்நாடகாவில், 1,425 ஹெக்டருக்கு ஒரு வேளாண் அதிகாரி என்றால், கேரளாவில், 141 ஹெக்டேருக்கு ஒரு வேளாண் அதிகாரி. அதேபோன்று, கர்நாடகாவில் கிளார்க், டைப்பிஸ்ட், டிரைவர் போன்ற பணிகளை, 225 அரசு பணியாளர்கள் செய்தால், அதே வேலையை கேரளாவில், 1,784 பேர் செய்கின்றனர். இதனால், 2011ல் இருந்த பென்ஷன்தாரர்கள், 2023ல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளனர். மாநிலத்தின் வருவாயை விட, அரசு அதிகம் செலவிடுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், 42,179 நடுத்தர, சிறு, குறு தொழில்கள் முடங்கி விட்டன. 1 லட்சத்து, 3,764 பேர் வேலை இழந்துள்ளனர். 2021 - 23 ஆண்டுகளில், 40,000 கோடி ரூபாய், வட்டி கட்டியுள்ளது. நடைமுறைக்கு சாத்தியமான சித்தாந்தம் தான் தற்போது கேரளாவிற்கு தேவை. பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தத்தை தீவிரப்படுத்தினால் மட்டுமே கேரளா தன் கடன் சுமை மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியும்.தேர்தல் வெற்றியை விட மாநிலத்தின் பொருளாதாரமே முக்கியம் என்பதை கேரளா மட்டுமல்ல; தமிழகமும் புரிந்துகொள்ள வேண்டும்!  

ஆபத்தானவர் 'அப்பா!'

எஸ்.சுந்தரவதனம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்த ஆட்சியாளர்கள் தாக்கல் செய்யும் முழுமையான கடைசி பட்ஜெட் இது தான்; நாங்கள் பெறும் உரிமைகளும், சலுகைகளும் போராடி பெற்றவை. எங்கள் உணர்வை புரிந்து, தமிழக அரசு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே எங்கள் உரிமைகளை நிறைவேற்றுவதாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவி தமிழ்ச்செல்வி மற்றும் பொதுச்செயலர் ஜெயராஜ ராஜேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கழகம் என்பது பனங்காட்டு நரி; இதுபோன்ற மிரட்டல்களுக்கோ, பூச்சாண்டிகளுக்கோ ஒரு போதும் பயப்படாது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அரசு அலுவலர் சங்கம் போராட்டம் நடத்தியது. ஒரே இரவில், இரண்டு லட்சம் அரசு அலுவலர்களை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, அவர்கள் வசித்து வந்த அரசு குடியிருப்புகளையும் காலி செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்ததை மறந்துவிட்டனர் போலும்!அம்மாவின் நடவடிக்கையே, அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைத்தது என்றால், 'அப்பா' ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தால்... அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, போலீஸ் வேனில் ஏற்றப்பட்டபோது, கால்சராயை கறையாக்கிக் கொண்ட காட்சியை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள்.அத்துடன், உடன்பிறப்புகளின் உடல் வலிமை குறித்து விளக்க தேவையில்லை. அதை அரசு அலுவலர்களும், ஆசிரியர்களுமே நன்றாக அறிவர்!போராட நீங்கள் தயார் என்றால், அப்போராட்டத்தை பொடிப்பொடியாக நொறுக்கித்தள்ளும் வித்தை தெரிந்தவர்கள் தி.மு.க.,வினர் என்பதை மறந்துவிட வேண்டாம்!  

வாய்ச்சொல் வீரம் வேண்டாம்!

முனைவர் வி.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் தமிழகத்தில் திணிக்கிறது என, தீவிரமாக எதிர்த்து வருகிறது தமிழக அரசு. 'தமிழுக்கு ஒரு தீங்கு என்றால், வேல் போல் பாய்வோம்' என்று வீராவேசம் காட்டியுள்ளார் முதல்வர்.அவர் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும்... பன்னெடுங்காலமாக தமிழும், வடமொழியும் ஒன்றோடு ஒன்று கை கோர்த்து தான் வந்துள்ளன. நாம் எல்லாரும் கொண்டாடும் திருக்குறள் கூட சுத்தத் தமிழால் எழுதப்பட்டது அல்ல; முதல் குறளில் இடம்பெற்று ள்ள, 'ஆதி பகவன்' என்பது உட்பட பல வடமொழிச் சொற்கள் நீக்கமற நிறைந்துள்ளன. சங்க இலக்கியத்திலும், அதன்பின் வந்த கம்பராமாயணம், திருப்புகழ் உள்ளிட்ட பல நுால்களும் மணிப்பிரவாள நடையில்தான் உள்ளன.இன்னும் சொல்லப்போனால், இந்நுால்களில் தமிழ்தான் திணிக்கப்பட்டுள்ளதோ என்று கூறும் அளவுக்கு வடமொழி சொற்களின் ஆதிக்கம் அதிகம். அதேபோன்று, அருணகிரிநாதரின், 'திருப்புகழ்' பாடல் ஒன்று... 'சரண கமலாலயத்தை அரை நிமிட நேரமட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத' என்று துவங்கி, 80 சதவீதம் சமஸ்கிருதச் சொற்களே நிரம்பியுள்ளன. ஆனாலும், அதை தமிழ் பாடலாகத்தான் பார்க்கிறோம். காரணம், அப்போதெல்லாம் மொழியில் பேதம் பார்க்கப்படவில்லை. ஆகவே, தமிழும், வடமொழியும் இணைந்து வளர்ந்தது. ஆனால், 'தமிழ் எங்கள் பேச்சு; தமிழ் எங்கள் மூச்சு' என்று கூறிக்கொண்டு வந்த திராவிட கட்சிகளால்தான், இன்று தமிழ் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது; தமிழில் எழுதப் படிக்கத் தெரியாத இளைய சமுதாயம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது! செந்தமிழின் பெருமை கூறுவதாக போற்றப்படும், 'கந்தரலங்காரம்' எனும் நுாலின், 52வது பாடலான, 'சிகாராத்ரி கூறிட்ட' என்று துவங்கும் பாடலில், ஒரு சொல் கூட தமிழ் இல்லை என்பதுதான் வேடிக்கை. அவ்வளவு ஏன்... இன்று நடைமுறையில் இருக்கும் விசனம், வசனம், வெஞ்சனம், முகம், புஸ்தகம், சர்க்கரை, பாதம் என்று பல வடமொழிச் சொற்கள், தமிழ் சொற்களாக வலம் வருவது காலத்தின் கட்டாயம்!நிதி என்ற வடமொழிச் சொல்லின் அடையாளத்தையே அழித்து சங்கநிதி, பதுமநிதி தவிர மற்ற எல்லா நிதியையும், தன் குடும்ப உறவுகளின் பெயர்களாக வைத்திக்கும் முதல்வர், தமிழுக்கு வக்காலத்து வாங்குவதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது!சூட்டிக் கொண்ட பெயரில், செய்யும் தொழிலில், பேசும் பேச்சில் தமிழ் இல்லை; ஆனால், தமிழைக் காக்க வேல் போல் பாய்வராம்!வாய்ச்சொல் வீரம் வேண்டாம் முதல்வரே!  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ