உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / அரசு புரிந்து கொள்ளுமா?

அரசு புரிந்து கொள்ளுமா?

எஸ்.பி.குமார், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால், நஷ்டம் தமிழகத்திற்கு தானே ஒழிய மத்திய அரசுக்கு இல்லை.கடந்த வாரம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளைத் திறக்க, மாநில அரசின் அனுமதியை ரத்து செய்தது மத்திய அரசு.இந்நிலையில், ஏற்கனவே சி.பி.எஸ்.இ., பள்ளிகளை நடத்தும் குழுமங்கள் தங்கள் கிளைகளை திறந்து கொள்ள, மத்திய அரசு உத்தரவு பெற வேண்டிய அவசியம் இனி இல்லை என்ற ஆணையும் வந்து விட்டது. இதன் விளைவாக வரும் ஆண்டுகளில், புற்றிலிருந்து புறப்படும் ஈசல்கள் போல், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் முளைக்கும்; அங்கு, கட்டாயம் ஹிந்தி மொழி கற்பிக்கப்படும்.இதனால், 'நீட்' தேர்வில், அரசு பள்ளி மாணவர்களுக்கான கூடுதல் மதிப்பெண் வேண்டுமானால் கிடைக்காமல் போகலாம்; ஆனால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள், 'நீட்' தேர்விலும் வெற்றி பெற்று, பெரும்பாலான மருத்துவ சீட்களை நிரப்புவர். வெள்ளத்தைத் தடுத்தால் அது, தானே வேறு பாதையை தேடிக்கொண்டு பாயத்தான் செய்யும். அதுபோன்று, மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் தடை செய்தால், தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, அத்திட்டத்தை செயல்படுத்தவே செய்வர். பாறையுடன் மோதினால் உடைவது நம் மண்டை தானே ஒழிய, பாறை அல்ல. எனவே, மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டுமே தவிர, யார் பலசாலி என்பதை முடிவு செய்யும் களம் அல்ல அரசு இயந்திரம்! இதை, திராவிட மாடல் அரசு புரிந்துகொள்ள வேண்டும்!

கிராமங்களை ஒதுக்காதீர்கள்!

அ.அப்பர்சுந்தரம், மயிலாடு துறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக, 2,642 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, நியமன ஆணைகளை வழங்கியுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.இந்நிலையில், கிராமப் புறங்களுக்கு பணிமாறுதல் களில் செல்லும் டாக்டர்கள் சிலர், ஒருசில வாரங்களிலேயே மீண்டும் நகர்ப்புறங்களுக்கு மாறுதல் கேட்பதாக வரும் தகவல்கள் கவலை கொள்ள வைக்கின்றன.மருத்துவராக பொறுப்பேற்கும் ஒவ்வொருவரும் திறந்த மனதோடு, கிராமப்புறங்களில் பணியாற்றும்போதுதான், மனித குலம் முழுமையான மருத்துவ சேவையை பெற முடியும். அத்துடன், கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் பணியாற்றும் போது, நீரிழிவு, புற்றுநோய், ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு நோய்களை துவக்கத்திலேயே கண்டறிந்து, கட்டுப்படுத்தலாம்!மருத்துவ தொழில் என்பது பணம் சம்பாதிப்பதற் கானது அல்ல; அது மனித குலத்தை ஜீவிக்க செய்யும் உயர்ந்த சேவை. சிகிச்சை அளிக்கும் டாக்டரை மனித வடிவில் வந்த கடவுளாகத் தான் நோயாளி பார்க்கிறார்.நகர்ப்புறத்தில் பணி செய்தால், டாக்டர்களுக்கான பொருளாதார வசதிகள் மேம் படும். ஆனால், கிராமப்புறத்தில் சேவை செய்தால், அவர்களது வாழ்க்கை உயிர்ப்புடன் இருப்பதுடன், அவர்கள் மனிதருள் புனிதர் ஆகின்றனர்! தமிழகத்தில், மயிலாடு துறை போன்ற எத்தனையோ பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளன. கிராம மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அங்கு தான், டாக்டர்களின் தேவை அதிகமாக உள்ளது.எனவே, டாக்டர்களே... கிராமங்களை ஒதுக்காதீர்கள்... எளிய மக்களாகியநாங்கள், உங்களை இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறோம்!

'உருட்டல்'களை நிறுத்துங்கள்!

ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தகுதி உள்ளவருக்கே நிலை யான வாழ்க்கை' என்பது போல், போட்டிகள் நிறைந்த களமாக மாறிக்கொண்டிருக்கிறது, உலகம். இந்நிலையில், தமிழக மாணவர்களை மாற்று மொழி படிக்கவிடாமல், 'ஹிந்தியை விரட்டுவோம், மோடியை துரத்துவோம், மொழிப்போருக்கான போராட்டக் களமாக தமிழகம் மாறும்; சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம்' என்றெல்லாம் வீரவசனம் பேசும் அரசியல்வாதிகளால், நம் மாநிலத்தை, என்றுமே உலக அரங்கில் நிலைநாட்டவே முடியாது.ஹிந்தி படித்தால் தமிழ் மழுங்கிவிடுமாம்... மற்ற மாநிலங்களில் படிக்கின்றனரே... அங்கெல்லாம் அவர்கள் மொழி அழிந்து விட்டதா என்ன! தமிழக மக்கள் தொகையில், 5 முதல் 7 சதவீதம் பேர் தெலுங்கும், 2-3 சதவீதம் பேர் கன்னடம், 1-2 சதவீதம் பேர் மலையாளம் பேசுகின்றனர்; இவர்களால் தமிழ் அழிந்துவிட்டதா? இந்தியாவின் பிற மாநிலங்களில், 50 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர்; அவர்கள் அந்த மாநிலங்களின் மொழியை அழித்துவிட்டனரா? ஈ.வெ.ரா., உருவாக்கிய திராவிட இனத்தைச் சேர்ந்த மலையாளிகளும், தெலுங்கர்களும், கன்னடர்களும் ஹிந்தி படிக்கும்போது, திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு மட்டும் ஏன் ஹிந்தி கசக்கிறது? துணை முதல்வர் உதயநிதி உண்மையிலேயே கொள்கை பிடிப்பு கொண்டவராக இருந்தால், தன் சகோதரியும், கட்சியினரும் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தியை துாக்கி எறிந்துவிட்டு மோடியை எதிர்க்கப் புறப்படட்டும்!இது, 1967 அல்ல... தி.மு.க., வின் உருட்டல்களை நம்ப!

கண்ணியம் காப்பது அவசியம்!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர், ஆளும் தி.மு.க.,விற்கு ஆதரவாக, மத்திய அரசு, கவர்னருக்கு எதிரான கருத்துகளை சமீபகாலமாக தெரிவித்து வருகின்றனர். ஆளுங்கட்சியும் இவர்களை பல கமிட்டிகளின் தலைவர்களாக நியமித்து, அவர்களின் சேவையை பயன்படுத்தி வருகிறது. இவர்களின் பரிந்துரைகள், ஆளுங்கட்சியின் கொள்கையோடு பெரும்பாலும் ஒத்துப்போவதாகவே உள்ளன. சமீபத்தில் ஒரு நீதிபதி அளித்த பரிந்துரை கூட கண்டனத்திற்கு உள்ளானது; விமர்சனம் செய்யப்பட்டது.நீதிபதி பதவி என்பது மிகவும் உயரிய, பொறுப்பான அதிகாரம். இப்பதவிக்கு வருவோர் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், ஜாதி, மத பேதமின்றி நியாயத்தின் பக்கம் மட்டுமே முடிவு எடுக்க வேண்டும்.அப்படி செயல்பட்டால் மட்டுமே அப்பதவிக்கும், அதில் அமர்ந்து நீதி பரிபாலனம் செய்யும் நீதிபதிக்கு, மக்களிடம் மரியாதையும், நம்பிக்கையும் ஏற்படும்.அந்த தார்மீக நிலையில் இருந்து பிறழும்போது, அந்த நீதிபதிகளின் முந்தைய தீர்ப்புகள், கமிட்டி தலைவர்களாக இருந்து அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் மீது கண்டிப் பாக சந்தேகம் எழும்.எனவே, ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசியல் சர்ச்சை களில் சிக்கிக் கொள்ளாமல், கண்ணியம் காப்பது அவசியம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மார் 04, 2025 06:35

மாநிலத்தில் பச்சைக்குழந்தை முதல் பாதுகாப்பின்றி பாலியல் கொடுமை, போதைப்பழக்கத்தின் உச்சநிலை எல்லாவற்றையும் அமுக்க ஹிந்தி எதிர்ப்புக்கு குரல் இந்த மடைமாற்றம் திராவிட மாடலுக்கே உரிய குணமாயிற்றே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை