உள்ளூர் செய்திகள்

கரை சேர முடியாது!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோற்றவுடன், அதன் வெகுநாள் கூட்டாளியான காங்கிரஸ், தி.மு.க.,வை கைகழுவி, த.வெ.க.,வுக்கு ஆதரவு கரம் நீட்டி, இரண்டு அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளது. இதை தாங்க முடியாத தி.மு.க., தேசிய அரசியலில் காங்கிரசை தனிமைப்படுத்த, காங்கிரஸ் அல்லாத, 'இண்டி' கூட்டணி கட்சிகளை ஒன்றிணைத்து, மூன்றாவது அணி அமைக்க நினைத்தது.

இதற்காக, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, மே.வங்க திரிணமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி, தேசியவாத காங்., சுப்ரியா சூலே, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ் போன்றோரை சந்தித்து பேச்சு நடத்தினார். அவர்கள் நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டனராம். காரணம், தி.மு.க.,வின் ஹிந்து விரோத செயல்பாடுகளும், சனாதன எதிர்ப்பு பேச்சுகளும் தான்! ஹிந்து விரோத அரசியல் தமிழகத்திற்கு வெளியே எடுபடாது என்பதற்கு, மூன்றாவது அணியை உருவாக்குவதில், தி.மு.க., விற்கு கிடைத்த இந்த தோல்வியே சான்று! இதிலிருந்து, தமிழகத்திற்கு வெளியே, சனாதன தர்மத்தை, ஹிந்துக்களை அவமதித்து விட்டு, அவ்வளவு எளிதாக தேசிய அரசியலில் கோலோச்சி விட முடியாது என்பதை தி.மு.க., மறந்து விடக் கூடாது. இனியும் தன் பழைய நிலைப்பாட்டிலேயே இருந்தால், தி.மு.க., தமிழகத்தில் கூட கரை சேர முடியாது!

நடுநிலை தவறிய சங்கங்கள்!

க.சண்முகசுந்தரம், பொள்ளாச்சி, கோவை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: பொதுவாக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் எந்த ஒரு கட்சியையும் சாராமல் நடுநிலையுடன் நின்று, ஊழியர் நலனுக்காக போராட வேண்டும் என்பதே சங்கங்களின் அடிப்படை விதி. சங்கத் தலைவர்களும் தொலைநோக்கு பார்வையுடன் நேர்மையாகவும், பொது நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயங்காதவர்களாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தன. சங்க பிரதிநிதிகளை அழைத்து, எம்.ஜி.ஆர்., பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. போராட்டத் தலைவர்களில் முன்னணியில் இருந்து குரல் கொடுத்த, ஜெ.எஸ்.ராசு என்பவரை பார்த்து, 'நீங்கள் பள்ளிகளை மூடி வேலை நிறுத்தம் செய்வதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறதே...' என்று, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், எம்.ஜி.ஆர்., அதற்கு, 'எங்களுக்கு மாணவர்கள் நலன் தான் முக்கியம்; எங்கள் போராட்டம் முடிந்த பின் கூடுதல் நேரம் பாடங்களை நடத்தி, மாணவர்கள் நலன் காப்போம்' என்று பதிலளித்தார், ராசு. திகைத்துப் போன எம்.ஜி.ஆர்., உளவுத்துறை வாயிலாக ராசு குறித்து விசாரித்ததில், அவர் நேர்மையான, எளிமையான, குடியிருக்க சொந்த வீடு கூட இல்லாத, ஆசிரியர் சங்கத் தலைவர் என்பதை அறிந்து, ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று நடைமுறைப்படுத்தியதுடன், ராசுக்கு அவரது சொந்த ஊரான மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் குடியிருப்பில் இலவச வீடு ஒதுக் கவும் ஆணையிட்டார். காலப்போக்கில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களில் அரசியல் புகுந்த காரணத்தால், நடுநிலை தவறி, பெரும்பாலானோர் தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த கார ணத்தால், கோரிக்கைகள் வலுவிழக்க ஆரம்பித்தன. உதாரணத்திற்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அவரது ஆட்சியை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காகவே, சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்தன. இதனால், 'டெஸ்மா' போன்ற கடுமை யான சட்டங்கள் அரசு ஊழி யர்கள் மேல் பாய்ந்து, பெரும் துன்பத்திற்கு ஆளாயினர். இதற்கிடையே, பழைய ஓய்வூதிய சட்டம் வாபஸ் பெறப்பட்டதால், மீண்டும் போராட வேண்டிய சூழ்நிலை. ஆனால், 6வது மற்றும் 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி கணிசமாக சம்பளம் உயர்ந்ததால், போராட்ட குணம் ஊழியர்கள் மத்தியில் மறைந்து விட்டது. எனவே, மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தான், பழைய ஓய்வூதியத்தை பெற முடியும் என்று ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தனர். அதற்கேற்ப, தேர்தல் வேலைகளும் செய்தனர். எதிர்பார்த்த ஆட்சி மாற்றமும் வந்தது; ஸ்டாலின் முதல்வர் ஆனார். ஆனால், ஆட்சி முடியும் காலகட்டத்தில் பழைய ஓய்வூதியத்திற்கு பதில், பங்களிப்பு ஓய்வூதியம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்து விட்டு சென்று விட்டார். இதோ... ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய கோரிக்கை, கேட்பாரற்று கிடக்கிறது! சங்கங்கள், அரசியல் சார்பற்று நடுநிலையுடன் செயல்பட்டால் மட்டுமே உரிமைகளை போராடியாவது பெற முடியும் என்பதை, இனியாவது சங்கங்கள் மனதில் கொள்ள வேண்டும்!

தமிழக அரசு உத்தரவிடுமா?

மு.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், 2014 முதல் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், மாதந்தோறும், 497 ரூபாய் பிரீமியம் பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது, ஜூலை மாதம் முதல், 644 ரூபாயாக பிடிக்கப்பட்டு வருகிறது. 2026லிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இத்திட்டம் நீட் டிக்கப்பட்டுள்ளது. கேன்சர், டயாலிசிஸ் போன்ற சில மருத்துவ சிகிச்சைகள் தவிர, அறிவிக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும், மருத்துவ செலவில் குறிப்பிட்ட தொகை மட்டுமே காப்பீடாக அனுமதிக்கப்படும். இந்த ஐந்தாண்டுகளுக்கு மொத்தம், 7.5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு தொகை கிடைக்கும். குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும், 12 லட்சம் ரூபாய் வரை அனுமதிக்கப்படும். அதேநேரம், சில தனியார் மருத்துவமனைகள், இத்திட்டத்தின் அட்டையை உதாசீனப்படுத்துகின்றன. குறிப்பாக, அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனில், இத்திட்டத்தில் வரும் மருத்துவமனைகளில் செய்துகொண்டால் மட்டுமே, காப்பீட்டு தொகை கிடைக்கும். அதுவே, திட்டத்தில் வராத மருத்துவமனை என்றால், காப்பீட்டு தொகை இன்னும் குறைகிறது. அதேசமயம், மத்திய அரசின், 'ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா' திட்டத்தில், 70 வயதை கடந்த அனைவருக்கும், வருமான வரம்பின்றி ஆண்டிற்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை, அத்திட்டத்தின் பட்டியலில் உள்ள மருத்துவமனைகளில் அனைத்து விதமான சிகிச்சைகளும் இலவசமாகவே அளிக்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசின் ஓய்வூதியர் புதிய சுகாதார காப்பீட்டு, திட்டத்தில், மாதம் தோறும், 644 ரூபாய் செலுத்தியும் அறுவை சிகிச்சை செய்யும் நோய்களுக்கு மட்டுமே, அதுவும் குறிப்பிட்ட சதவீதமே காப்பீடாக கிடைக்கிறது. எனவே, தமிழக ஓய்வூதிய புதிய சுகாதார திட்டத்தில் உள்ள, 70 வயதை தாண்டியவர்களை விருப்பத்தின் அடிப்படையில் இத்திட்டத்திலிருந்து விடுவிக்கவும், மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தில் சேரவும் அனுமதித்து, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை