உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / மற்றவரை குறை சொல்லலாமா?

மற்றவரை குறை சொல்லலாமா?

என்.வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பா.ஜ.,வுடன் கூட்டணி சேரலாமா?' என்று கேட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு, 'உங்களைச் சிறை வைத்த காங்கிரஸ் கட்சியுடன் நீங்கள் கூட்டணி வைக்கலாமா?' என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பதில் கேள்வி கேட்டுள்ளார்.அத்துடன், 'அன்று கருணாநிதி பா.ஜ., வுடன் கூட்டணி வைத்தபோது இனித்தது; இப்போது நாங்கள் கூட்டணி வைத்தால் கசக்கிறதோ' என்று கிண்டல் செய்துள்ளார்.சட்டசபையில் இருவரும் காரசாரமாக பேசிக் கொள்வதைப் பார்க்கும் போது, 'சபாஷ்! சரியான போட்டி' என்றே சொல்லத் தோன்றுகிறது.ஜனசங்கம் என்ற பெயரில் இயங்கி வந்த பா.ஜ., மற்ற கட்சிகளுடன் இணைந்து, ஜனதா கட்சியாக உருவானது.இதை உருவாக்கியவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். இக்கட்சியுடன் பார்லிமென்ட் தேர்தலில் கூட்டணி வைத்து, ஐந்து இடங்களில் வெற்றி பெற்றார், கருணாநிதி. அதையடுத்து வந்த சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர்., வெற்றி பெறவே, காங்., உடன் கூட்டணி வைத்து, எம்.ஜி.ஆர்., ஆட்சியை கலைக்க உறுதுணையாக இருந்தார், கருணாநிதி. இந்திராவின் மறைவிற்கு பின், தன் மருமகன் முரசொலிமாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதற்காக, 'பண்டார கட்சி' என்று கேலி செய்த, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தார். அதேபோன்று, இந்திராவை மதுரையில் ரத்தம் சிந்தச் செய்த தி.மு.க.,வுடன் இன்றுவரை கூட்டணி வைத்துள்ளனர், கதர் சட்டைப் பேர்வழிகள்.ஜெயலலிதா இருந்த போது, 'இனிமேல் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க மாட்டேன்' என்று சொன்னார். அவர் மறைவுக்குப் பின், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தார், பழனிசாமி. கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வுடன் கூட்டணி வைத்ததால் தான் ஆட்சியை பறிகொடுத்ததாக கூறி, 'இனிமேல் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை' என்றார். இப்போது, அமித் ஷா முன்னிலையில் மீண்டும் கூட்டணி வைத்துள்ளார். எனவே, 'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர பகைவனும் இல்லை' என்பது தான் நிதர்சனமான உண்மை!அதனால், பழனிசாமியை குறை சொல்லும் முன், தான் வந்த வழியை ஸ்டாலின் திரும்பிப் பார்க்கட்டும்!

மரணத்திலும் அரசியல் செய்வீர்களா?

ஆர்.கோவிந்தராஜ், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று, அமித் ஷா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே இதற்கு காரணம்' என்று கூறியுள்ளார், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்.'எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யாமல், அவியலா செய்வர்' என்று கேட்ட தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வழியில், திருமாவளவனின் இந்த பேச்சு, மிக கேவலமான அரசியல் பேச்சாகவே உள்ளது.எதில் அரசியல் செய்ய வேண்டும் என்ற நாகரிகம் தெரிய வேண்டாமா... அதுசரி... தமிழர்கள், தமிழ் ஈழம் என்று வாய்பந்தல் போட்டபடி, தமிழர்களை கொன்று குவித்த வெற்றி களிப்பில் ராஜபக்சே கொடுத்த விருந்தில் பங்கேற்று, பரிசு வாங்கி வந்தவர் தானே திருமா...இவரிடம் மனிதாபிமானத்தையும், நாட்டுப்பற்றையும் எதிர்பார்க்க முடியுமா?கடந்த 1998ல் கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில், 58 அப்பாவி தமிழர்கள் இறந்தனர். அந்த பயங்கரவாத செயலுக்கு மூளையாக செயல்பட்ட பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து, முதலைக் கண்ணீர் வடித்த திருமாவிடம் நாட்டுப்பற்றை எதிர்பார்க்க முடியுமா? அதேபோன்று, 2022, அக்., 22ல் கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது, அதை திராவிட மாடல் அரசு, சிலிண்டர் வெடிப்பு என்று சொல்ல, அதற்கு ஒத்து ஊதியவருக்கு, நாட்டின் பாதுகாப்பு குறித்து என்ன கவலை இருக்கப் போகிறது? கோழைகளை போல் மறைந்து வந்து, மக்களை குருவியைப் போல் சுட்டுக் கொன்று, நம் நாட்டிற்கு சவால் விட்டுச் சென்றுள்ளனர்... கட்சி பேதங்களை மறந்து, நாட்டிற்கும், அரசுக்கும் துணையாக இருக்க வேண்டிய பார்லிமென்ட் உறுப்பினரான திருமா, 'எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்' என்ற ரீதியில், இதிலும் அரசியல் செய்கிறார்.காமராஜர் போன்று மக்களுக்காக அரசியல் செய்தால், தர்மம், நியாயம் தெரியும்; தேர்தல் அரசியல் நடத்தும் அரசியல் வியாபாரியான திருமாவளவனுக்கு மரணத்தில் கூட அரசியல் செய்து, ஓட்டு வாங்கும் எண்ணம் தானே வரும்!

உயிர்களை விட பகட்டு முக்கியமா?

ஆர்.அகிலன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சாலைகளில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது' என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த தீர்ப்பு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. நாளொரு போஸ்டரும், பொழுதொரு பிளக்ஸுமாக முளைத்து, பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் பீதியடைய செய்கின்றன. நடுரோட்டிலும், பாதை ஓரங்களிலும் அரசியல் கட்சிகள் நட்டு வைத்திருக்கும் கொடி கம்பங்களை, கடந்த 15ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்கனவே ஓர் உத்தரவு பிறப்பித்திருந்தது.ஆனால், அரசியல் கட்சிகள் இதைக் கண்டுகொள்ளவோ, பொருட்படுத்தவோ இல்லை. வழக்கம்போல், கொடி கம்பங்களும், பேனர்களும் பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் பயமுறுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில், இதுவரை தொழிற்சாலை உரிமையாளர்களை மிரட்டி, அத்தொழிற்கூடங்களுக்கு, 'மூடுவிழா' நடத்திக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது நீதிமன்றத்தையே மிரட்டத் துவங்கிஉள்ளது.பெரம்பலுார் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் ரமேஷ், கலெக்டர் கிரேஸ்பச்சாவிடம், 'கட்சிக்கொடி கம்பங்களை அகற்றுவது, ஜனநாயகத்துக்கு விரோதமானது. அதனால், எங்கள் கட்சிக்கொடி கம்பங்களை அகற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கட்சிக்கொடி கம்பங்களை அகற்ற முடியாது' என, மனு கொடுத்துள்ளார். கொடி கம்பங்களுக்கும், ஜனநாயகத்துக்கும் என்ன சம்பந்தம்?இதுவரை, அரசியல் கட்சியினர் சாலைகளில் வைத்திருந்த பிளக்ஸ் போர்டுகளால், பல உயிர்கள் பறிபோயுள்ளன.சமீபத்தில், ஆவடியில் உதயநிதியை வரவேற்க, கழகம் நிறுத்தி வைத்திருந்த, 50 அடி உயர கொடி கம்பம் சரிந்து அவ்வழியே சென்ற ஆட்டோவின் மீது விழுந்தது. நல்லவேளை... உயிர் பலி இல்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர், கொடி கம்பங்களை அகற்ற முடியாது என, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மனு செய்திருக்கிறார். எவர் இறந்தால், முடமானால் என்ன... இவர்களுக்கு அரசியல் பகட்டு வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஏப் 27, 2025 23:16

கொடி கம்பங்ளை அகற்ற உயர்நீதிமன்றம் கொடுத்த காலக்கெடு முடிந்த பின்னும் கொடிகம்பங்கள் அகற்றப்படாத நிலையில் நீதிமன்றமே தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கை கையிலெடுக்க வே ண்டும்.


veeramani
ஏப் 27, 2025 10:11

முதலில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் ரமேஷ் ஐ கைதுசெய்யவேண்டும். ஒரு நக்ஸ்லைட் போல் நீதிமன்றத்திற்கே சவால் இடும் இந்த நபரை திஹார் அனுப்பவேண்டும். மேலும் இந்த அரசியல்கட்சியை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும்


சமீபத்திய செய்தி