உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ஓட்டு போட்ட பாவத்திற்கு, சென்னைவாசிகள் வீட்டுக்கு ஒரு படகு

ஓட்டு போட்ட பாவத்திற்கு, சென்னைவாசிகள் வீட்டுக்கு ஒரு படகு

கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு' என்பது போல், 2023ல் மழை பாதிப்புக்கு முன், 'எவ்வளவு மழை பெய்தாலும், இனி சென்னை மாநகரில் ஒரு சொட்டு தண்ணீர் தேங்காது' என்று, முதல்வர் ஸ்டாலின் உட்பட தி.மு.க., அமைச்சர்கள் மார்தட்டிக் கொண்டனர். ஆனால், அந்த ஆண்டு பெய்த மழையில் சென்னை மாநகரே தத்தளித்தது. அடுத்து, 2024லும், '1,500 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்வாய் பணிகள், 95 சதவீதமும், 2,500 கோடி ரூபாயில் கொசஸ்தலை ஆறு ஒருங்கிணைந்த வடிகால்வாய் பணிகள், 80 சதவீதமும் முடிந்துள்ளன. 20 செ.மீ., மழை பெய்தாலும் கவலை இல்லை' என்று, நகராட்சி துறை அமைச்சர் நேரு கூறினார். நடந்தது என்ன... வடகிழக்கு பருவமழையின் போது, சென்னையில் தண்ணீர் தேங்காத இடமே இல்லை. மோட்டார் வாயிலாக மழைநீரை மாநகராட்சி அகற்றியது. இப்போது, 'எவ்வளவு உட்கட்டமைப்பு பணிகளை செய்தாலும், திடீரென பெய்யும் மழையால் சென்னையில் தண்ணீர் தேங்கத்தான் செய்யும்' என்கிறார் அமைச்சர் நேரு. ஒரு நகரில் மழைநீர் தேங்காத அளவு கட்டுமான பணிகளை செய்யும் திறன் இல்லாமல், 'தண்ணீர் தேங்கத்தான் செய்யும்' என்று சொல்வதற்கு ஓர் அமைச்சரும், அதற்கென்று ஒரு துறையும் தேவையா? இதில், இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மையான மாநிலம் என்ற பெருமை வேறு! இப்படி திறமையற்ற அரசை தேர்ந்தெடுத்த மக்கள், அதற்கான தண்டனையாக ஆண்டுதோறும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, மின்சாரம், தண்ணீர், பால் பாக்கெட் மற்றும் உணவுக்கு அரசிடம் கையேந்திக் கொண்டு, வீடுகளுக்குள் மழைநீர் புகுவதால் கொசு, பாம்பு, பல்லி, தேள் கடியில் உயிர் வாழ்வதை தவிர வேறு வழியில்லை! மழைநீர் வடிகால்வாய் பணிக்காக, 5,032 கோடி என்ன, 50,000 கோடி ரூபாய் கொடுத்தால் கூட, திராவிட மாடல் ஆட்சியில், மக்களை பாதுகாக்கும் பணிகள் நடக்காது. அப்பணத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைத்து, சிலாகிக்கத் தான் முடியும். ஓட்டு போட்ட பாவத்திற்கு, சென்னைவாசிகள் வீட்டுக்கு ஒரு படகை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது!

அரசு கவனத்தில் கொள்ளுமா?

ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வாயிலாக, கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, 'பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டம்' நடைமுறைக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. இத்தனைக்கும் அத்திட்டத்தை செயல்படுத்த அபரிமிதமான மானியத்தை அளிக்கிறது, மத்திய அரசு. 1 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் சோலார் பேனல்கள் அமைக்க, 30,000 ரூபாயும், 2 கிலோ வாட்டுக்கு 60,000, 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் அமைப்பதற்கு, 78,000 ரூபாயும் மானியமாக வழங்குகிறது மத்திய அரசு! நம் வீட்டுத் தேவைக்குப் போக, அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் வாரியமே எடுத்துக் கொண்டு அதற்கான தொகையை நமக்கு வழங்கி விடும். இப்படி சோலார் பேனல்கள் அமைப்பதில் லாபம் இருந்தும் மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். நான் ஐரோப்பாவில் இருந்த போது, சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன். அங்கெல்லாம் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் என்று அனைத்து கூரைகளிலும் சோலார் பேனல்கள் உள்ளன. ஜெர்மனியின் சில இடங்களில் முழுக் கூரையும் பேனல்களால் அமைத்திருந்தனர். மேலும், திறந்தவெளியிலும், ஸ்டாண்டுகள் மீதும் பேனல்கள் அமைத்திருந்தனர். இத்தனைக்கும் அவை குளிர்பிரதேசங்கள்; ஒரு சில மாதங்களே வெயிலைப் பார்க்க முடியும். நம்மூரைப்போல், 35, 40 டிகிரி எல்லாம் இருக்காது. நம் நாட்டிலோ, வெயிலின் உக்கிரம் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெயில் இல்லாத மாதங்களே கிடையாது. அப்படியிருந்தும், சோலார் பேனல்கள் அமைப்பதில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. மின் கட்டண உயர்வு குறித்து புலம்புவோர் இதுகுறித்து யோசிக்க வேண்டும். எனவே, அரசு இதை செயல்படுத்த தீவிரம் காட்ட வேண்டும். மக்களுடன் நெருக்கமான தொடர்புடைய துறைகள் வாயிலாக, மாதாந்திர இலக்குகள் நிர்ணயித்து, செயல்படுத்தலாம். உதாரணமாக, ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள யூனியன் இன்ஜினியர்கள் வாயிலாகவோ அல்லது ஒவ்வொரு யூனியனுக்கும் இதற்கென தனி அலுவலர்களை நியமித்து, சூரிய மின்சார திட்டத்தை செயல்படுத்தினால், நம் நாடு மின்சாரத் துறையில் மிகப்பெரிய அளவில் சாதனை செய்ய முடியும்! அரசு கவனத்தில் கொள்ளுமா?

ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை!

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் யூனியன் துவக்கப்பள்ளியில், வகுப்பறை கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்ததில், நாற்காலிகள் சேதமடைந்துள்ளன. இந்த கான்கிரீட் கூரை,ஒன்பது மாதங்களுக்கு முன்புதான் கட்டப்பட்டுள்ளது. ஞாயிறு விடுமுறை என்பதால், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதேபோன்று, மயிலாடுதுறை ரேஷன் கடை கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்து, விற்பனை உதவியாளர் படுகாயமடைந்துள்ளார். இக்கட்டடம் கட்டி ஏழு ஆண்டுகளே ஆனதாக கூறப்படுகிறது. மேற்கூரைகள் மட்டுமல்ல, அரசு அமைக்கும் மேம்பாலங்களும் விரிசல் ஏற்பட்டு சேத மடைகின்றன. சென்னையை அடுத்த படப்பையில், 26.64 கோடியில் அமைக்கப்பட்ட மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறந்த மூன்றே மாதங்களில், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், பள்ளங்கள் விழுந்து சேதமடைந்து, இப்போது சீரமைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒரு கட்டடம் கட்ட, 1,000 ரூபாய் செலவாகும் என்றால், அதில், 400 ரூபாய் லஞ்சமாக அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்டு, 'எப்படியாவது கட்டிக் கொள்' என்பது போல் விட்டு விடுகின்றனர். விளைவு இதுபோன்ற தரமற்ற கட்டடங்கள்! ஆட்சிகள் மாறினாலும் இந்த அவலங்கள் மட்டும் மாறுவதாக தெரியவில்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை