ஆர்.பரதன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டு, அவர் அமைச்சராக பொறுப்பேற்றவுடன், இந்த வழக்கில் தொடர்புடைய பலரது நடவடிக்கைகள் மாறியுள்ளன. அவர்கள் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே, அவரது ஜாமினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என, அமலாக்கத்துறை, உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. 'செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் அதிதீவிரமானது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்தபோதே, அதிருப்தியை வெளிப்படுத்தினோம்... இனியும், அவர் அமைச்சராக தொடர வேண்டுமா என்பதை அவரே பதிலளிக்கட்டும். ஒருவேளை, 'அமைச்சராகத்தான் தொடருவேன்' என்றால், வழக்கை மீண்டும் பட்டியலிட்டு, விசாரணை நடத்த தயாராக உள்ளோம்' என, நீதிபதிகள் கூறியுள்ளனர்.ஆக, இந்த நுாற்றாண்டில், செந்தில் பாலாஜி வழக்கு முடிந்து, தீர்ப்பு வெளியாகாது என்பது தெரிந்து விட்டது.அப்புறம் எதற்காக விசாரணை, வாய்தா என்று அரசு வரிப்பணத்தை விரயமாக்கி கொண்டு இருக்கிறீர்கள்?பேசாமல் செந்தில் பாலஜி மீதுள்ள வழக்கை தள்ளுபடி செய்து, 'அவர் நிரபராதி, பரிசுத்தமானவர், அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது பொய் புகார்' என்று அறிவித்து விடுங்களேன்! ரயில்வே துறை சிந்திக்குமா?
பா.பாலசுப்ரமணியன்,
லாஸ்பேட்டை, புதுச்சேரியில் இருந்து எழுதுகிறார்: மத்திய பட்ஜெட்டில்
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6,626 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த ஒதுக்கீடு
மிகவும் குறைவு என்ற போதிலும், தேவைப்படும் நிலம் இதுவரை 25 சதவீதம்
மட்டுமே கையகப்படுத்தி உள்ள மாநில அரசின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம்
என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இவ்விஷயத்தில் தமிழக அரசு
விரைந்து செயல்பட வேண்டும்; மேலும் நிதி நெருக்கடி இருப்பதால், புதிய
பாதைகளை கண்டறிவதில் தொலைநோக்கு பார்வையுடன் அணுக வேண்டும்.உதாரணமாக,
சென்னை மக்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய செங்கல்பட்டு - மாமல்லபுரம்
புதிய பாதை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதில், மதுராந்தகத்தில்
துவங்கி கல்பாக்கம், மாமல்லபுரம் மற்றும் சோழிங்கநல்லுார் வழியாக
பெருங்குடி வரை புதிய பாதை அமைத்தால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
அடிப்பது போல் சென்னை மற்றும் தென்மாவட்ட மக்களுக்கு பயன்படும்!ரயில்வே
அமைச்சர் மற்றொரு கருத்தையும் கூறியுள்ளார்... அதாவது பயணியர் கூட்டம்
அதிகம் உள்ள வழித்தடங்களில், கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று
தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும்
ரயில்களை மட்டுமே கணக்கில் வைத்து முடிவெடுக்கக் கூடாது. கூட்டம் அதிகம்
வரும் புதிய பாதைகளையும் கண்டறிய வேண்டும்.உதாரணமாக, தென்சென்னை
மக்கள் பெங்களூரு செல்ல சென்ட்ரல் வரை பயணிக்க வேண்டியுள்ளது. இவர்கள்
வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்
அரக்கோணம் வழியாக பெங்களுருக்கு ரயில் இயக்கினால் சரியான கூட்டம் வரும். அதேபோல்
சுற்றுலா நகரங்களான புதுச்சேரி, மைசூரு இரண்டையும் இணைக்கும் வகையில்,
தற்போது ஓடிக் கொண்டிருக்கும் புதுச்சேரி - யஷ்வந்த்பூர் வாராந்திர ரயிலை
மைசூரு வரை நீட்டித்து, வாரம் மூன்று முறை என இயக்கினால், அதிக அளவில்
கூட்டம் வரும். இதனால், மக்களும் பயனடைவர்; ரயில்வே நிர்வாகத்திற்கும் வருவாய் அதிகரிக்கும்!இதுகுறித்து ரயில்வே துறை சிந்திக்குமா? மனதில் கொள்ள வேண்டும்!
ரெ.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: எட்டாம் வகுப்பு மாணவர்களால், இரண்டாம் வகுப்பு பாடத்தைக் கூட
சரியாகப் படிக்க முடியவில்லையென, 'ஏசெர்' ஆய்வு முடிவுகள் தெரிவிப் பதாக
அங்கலாய்க்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.இதைத்தானே பல காலமாக சொல்லி வருகிறோம்... கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?எப்போது, ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' நடைமுறைக்கு வந்ததோ, அன்றிலிருந்து ஆரம்பித்தது, மாணவர்களின் கல்வித் திறன் மீதான ஆபத்து!இன்று, பள்ளிகளில் காலை உணவிலிருந்து அத்தனையும் கிடைக்கிறது; ஆனால், தரமான கல்வி மட்டும் கிடைப்பது இல்லை.ஜனநாயகம் என்ற பெயரில், மாணவர்களின் கல்வியில் கூட அரசியல் செய்யப்படுவதே, இதற்கு காரணம்!அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பல நல்ல திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன; சில திட்டங்கள் மூடுவிழா காண்கின்றன. இந்நிலை மாற, கல்விக்கண் திறந்த காமராஜர் போல், மாணவர்கள் கல்வி குறித்து உண்மையாகவே அக்கறைப்படும் அரசு அமைய வேண்டும். அத்துடன், நீதிமன்றங்கள் தாமாகவே முன்வந்து, இது போன்ற திட்டங்களில் தலையிட்டு, மாணவர் சமுதாயத்தைக் காக்க முன்வர வேண்டும்!'கல்வி
நிலையங்களில் பிரம்பின் பயன்பாடு குறைந்ததால், காவல் நிலையங்களில் அதன்
ஆதிக்கம் அதிகரித்து விட்டது!' என்பது, எவ்வளவு பொருள் பொதிந்த சொற்றொடர்!'இதுவும் கடந்து போகும்!' என்று ஏனோதானோவென்று விட்டால், இந்த இழிநிலையே தொடரும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்! முதல்வர் செய்வாரா?
ச.கந்தசாமி,
சிந்தலக்கரை, துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்:
அடித்தட்டு மக்களுள் கடைக்கோடி இனத்தில் ஒருவனான நான், தமிழக முதல்வருக்கு
விடுக்கும் வேண்டுகோள்...தனியார் கல்வி நிறுவனங்கள், தங்கள் பள்ளி
மாணவர்களுக்கு கட்டணத்துடன் பேருந்துகளை இயக்குகின்றன. அரசு பள்ளி
மாணவர்களுக்கு, பொதுமக்கள் பயணிக்கும் அரசு பேருந்துகளில் இலவச கட்டண
சலுகையை அரசு வழங்கியுள்ளது என்றாலும், ஜன நெருக்கடிகளுக்கிடையே, புத்தக
சுமைகளுடன் மாணவ சிறார்கள் முண்டியடித்து ஏறுவதும், இறங்குவதும் பார்ப்பவர்
மனதை பிசைகிறது. கூட்டத்தில் புத்தகப் பையுடன் நிற்கக் கூட முடியாமல், அவர்கள் படும் அவதியை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. இப்படி நெரிசலில் சிக்கி, தவித்து பள்ளி செல்லும் இம்மாணவர்கள் எப்படி மனம் ஒருமித்து கல்வி கற்பதில் கவனம் செலுத்துவர்? எனவே,
ஏழெட்டு கிராமங்கள் உள்ளடக்கிய மாணவர்களுக்கு ஒரு பேருந்து என, பள்ளி
சென்று திரும்பும் காலை - மாலைகளில் அரசே தனி பேருந்துகளை ஏற்பாடு
செய்யலாம். கல்வி கற்கும் சிறார்களுக்காக காலை உணவு திட்டம் எனும்
பெயரில், தினமும் வகை வகையான உணவு, பள்ளி செல்ல இலவச பயண சலுகை என
மாணவர்களுக்காக பார்த்து பார்த்து செய்யும் முதல்வர், இந்த விஷயத்தையும்
கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொண்டால், மாணவ - மாணவியர் மட்டுமின்றி,
அவர்களுடைய பெற்றோரும் மகிழ்ச்சி அடைவர்.முதல்வர் இதை செய்வாரா?