உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  மடைமாற்றும் தி.மு.க.,!

 மடைமாற்றும் தி.மு.க.,!

சென்.ஜெயக்குமார், வழக்கறிஞர், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மக்களை ஏமாற்றி மடைமாற்றம் செய்வதில் தி.மு.க.,வை எந்த கட்சியாலும் மிஞ்ச முடியாது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு மூன்று மொழிகளை கற்க வாய்ப்பு இருப்பது போல், அரசு பள்ளி மாணவர்களுக்கும் அவ்வாய்ப்பை ஏற்படுத்தி, மூன்றாவது மொழியாக ஏதேனும் ஓர் இந்திய மொழியை கற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியபோது, 'புதிய கல்வி கொள்கையில் மத்திய அரசு ஹிந்தியை திணிக்கிறது' என்று மடைமாற்றம் செய்தனர், தி.மு.க.,வினர். நாடு முழுதும் உள்ள பள்ளிகளில், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தால், அந்த திட்டத்தை அமல்படுத்த மாட்டோம்; ஆனால், அதற்கான நிதி மட்டும் வேண்டும்' என்பர். அமல்படுத்தாத திட்டத்திற்கு நிதி வழங்க முடியாது என மத்திய அரசு மறுத்தால், 'தமிழக மாணவர்களின் கல்விக்கு பணம் தர மத்திய அரசு மறுக்கிறது' என்று பிரசாரம் செய்வர். இப்படி வறட்டு நிலத்தில் குறட்டு உழவு செய்து, அரசியல் லாபம் காண துடிக்கும் தி.மு.க., தற்போது, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முறையான வழிமுறைகளை தெரிவிக்கவில்லை என்றும், அதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், 'ஐயோ... மத்திய பா.ஜ., அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது' என ஒப்பாரி வைக்கின்றனர். மதுரை எய்ம்ஸ் வைத்து இனி அரசியல் செய்ய முடியாது என்பதால், தங்கள் அரசின் தவறுகளை மறைக்க மெட்ரோவை கையில் எடுத்து விட்டனர் போலும்! மாடு ஏன் வாலை துாக்குகிறது, தி.மு.க., ஏன் ஒரு விஷயத்தை மடைமாற்றம் செய்கிறது என்பதை தமிழக மக்கள் அறிய மாட்டார்களா என்ன! lll குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவரா தமிழக மக்கள்! அ.சேகர், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு குடும்பத்தின் பிடியில் ஒரு கட்சி சிக்கினால், அதன் நிலை கடைசியில் என்னவாகும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி! குடும்ப ஆட்சி என்பது ஊழலுக்கும், சர்வாதிகாரத்திற்கும் தான் வழி வகுக்கும். லாலு மற்றும் அவரது மனைவியின், 14 ஆண்டுகால ஆட்சியில் எங்கும், எதிலும் ஊழல் தான். மாட்டு தீவன ஊழல் வழக்கில், லாலு தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்ததும், தற்போது ஜாமினில் உள்ளதும் அனைவரும் அறிந்த விஷயம். அவர் குடும்பத்தினர் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. அதுமட்டுமா... லாலுவின் குடும்ப ஆட்சிக்காலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு, வன்முறைகளும், அராஜகங்களும் அரங்கேறின. துப்பாக்கி கலாசாரம் விஸ்வரூபம் எடுத்தது. போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்துவது, தேர்தல்களில் ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றுவது, வன்முறையில் ஈடுபடுவது, பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் என்று ஒரு காட்டாட்சியே நடந்தது. கூடவே, ஜாதி வன்முறைகளும் கட்டவிழ்க்கப்பட்டன. அமைச்சர்கள் மட்டுமல்ல, எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்கு பின், ஒரு ரவுடி கூட்டத்தை வைத்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டனர். அதையெல்லாம், இத்தேர்தலின் போது நினைத்துப் பார்த்த பீஹார் மக்கள், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பவில்லை. அதேநேரம், 2020ல், 'நான் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவேன்' என்று கூறி, அதன்படி நடந்து கொண்ட நிதிஷ்குமாரின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் முழுமையாக நம்பினர். கூடவே, அவரது ஊழலற்ற ஆட்சியும், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், பெண்கள் சுயதொழில் துவங்க, அவர்கள் வங்கிக் கணக்கில், 10,000 ரூபாய் செலுத்தப்பட்டதும், லாலுவின் குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வைத்து விட்டன. கடந்த காலங்களில் பெற்ற கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்ற பீஹார் மக்கள், இலவசங்களுக்கு மயங்காமல், போலி வாக்குறுதிகளை நம்பாமல், குடும்ப அரசியலுக்கும், ஊழலுக்கும் முடிவுரை எழுதிவிட்டனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு தமிழக மக்களுக்கு ஏற்படுமா குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவரா? lll நாடகம் ஏன்? கோ.பாண்டியன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இது குறித்து விரிவான விளக்கம் அளிக்க, என் குழுவுடன் தங்களை சந்திக்க தயாராக இருக்கிறேன்' என, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார், முதல்வர் ஸ்டாலின். கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை குறிப்பிட்டு, திட்ட அறிக்கையில் உள்ள முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது மத்திய அரசு. ஆனால், முரண்பாடுகளை களைவது குறித்து விளக்கம் அளிக்காமல், மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக ஒரு பொய்யை பரப்பிய முதல்வர், இப்போது, யாரை ஏமாற்ற பிரதமரை சந்திக்க உள்ளதாக நாடகம் போடுகிறார்? கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியம் இல்லை என்பதற்கான கடிதம், நவ., 14ல் பெறப்பட்ட நிலையில், நவ., 19ல் பிரதமர் தமிழகம் வந்த போது, அவரை சந்தித்து அதுகுறித்து விளக்கம் அளிக்காமல், அதை வைத்து அற்பத்தனமாக அரசியல் செய்து விட்டு, இப்போது பிரதமரை சந்திக்க தயாராக இருப்பதாக கூறுவது, தமிழக மக்களை முட்டாள்களாக்க முதல்வர் ஆடும் கபட நாடகம் அன்றி வேறென்ன! சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் என்பது மாநில அரசின் திட்டம். ஆனால், மாநில அரசிடம் அதற்கான நிதி இல்லை என்ற காரணத்தால், ௭,௪00 கோடி ரூபாயை தமிழகத்திற்கு ஒதுக்கியது, மத்திய அரசு. வேறு எந்த மாநிலத்திற்கும் இதுபோன்று நிதி ஒதுக்கியது இல்லை. ஆனாலும், சிறிதும் மனசாட்சி இல்லாமல், 'கோவை, மதுரை ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டிருப்பது மத்திய அரசின் பாகுபாட்டையே காட்டுகிறது' என்றும், 'மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது' என்றும் வெறுப்பு அரசியல் செய்கிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின். பேசும் வார்த்தைகளில் துளி அளவாவது உண்மை, நேர்மை இருக்க வேண்டாமா? lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 28, 2025 06:40

ஆட்சியின் குறைகளை மக்கள் பேசும்போது மத்திய அரசை வம்புக்கிழுப்பதுதானே இவர்களின் வழக்கமாக இருக்கிறது பி. எம். ஸ்ரீயிலு, மெட்ரோ விஷயத்திலும் இதே ஒப்பாரிதான்


முக்கிய வீடியோ