உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இஸ்லாமியர் ஓட்டுக்காக பாசம் காட்டும் தி.மு.க.,

இஸ்லாமியர் ஓட்டுக்காக பாசம் காட்டும் தி.மு.க.,

எஸ்.ராதிகா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 41- பேர் பலி... இப்படி பல பிரச்னைகள் இருக்கும்போது, தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் திடீரென்று, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போரில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கூட்டம் நடத்தினர். இந்த போருக்கு பிள்ளையார் சுழி போட்டதே, பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதிகள் தான். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள், 2023ல் இஸ்ரேலில் புகுந்து, பண்டிகை கொண்டாட்டத்தில் இருந்த, 1,500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்று குவித்து, பலரை பிணை கைதிகளாக பிடித்துச் சென்றது தான் போருக்குக் காரணம். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் புகுந்து பஹல்காமில், 26 பேரை கொன்று குவித்தபோது, பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததைப் போன்று தான், இஸ்ரேல், பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் மீது தாக்குதல் தொடுத்த விவகாரம். இப்போரில் இந்தியா தலையிடவும் இல்லை; இரு நாடுகளுடனுமான நம் நட்புறவையும் விடவில்லை. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது மட்டுமல்லாமல், அந்நாட்டிற்கு பல விதங்களிலும் உதவி வருகிறது, இந்தியா. போரில் காயமடைந்த மக்களுக்கு, இஸ்லாமிய நாடுகளை காட்டிலும் மோடி அரசு தான், 65,000 கோடி ரூபாய்க்கான மருந்துகளை பாலஸ்தீனத்திற்கு அனுப்பி வைத்தது. கடந்த 11 ஆண்டுகளில், 2,400 கோடி ரூபாய் அந்நாட்டின் உட்கட்டமைப்பிற்காக செலவு செய்துள்ளது. இந்திய பிரதமர்களிலேயே பாலஸ்தீனத்திற்கு சென்ற முதல் பிரதமர் மோடி தான். இருநாடுகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்தபோது, ரமலான் மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்கள் இறை வழிபாட்டை அமைதியாக நடத்தவும், நோன்பை கடைப்பிடிக்கவும், பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என, இஸ்ரேலிடம் கேட்டுக் கொண்டார். அதனால் தான், இஸ்லாமிய நாடுகள், மோடிக்கு தங்கள் நாட்டின் உயரிய விருதைக் கொடுத்து கவுரவிக்கின்றன. ஆனால், நம் மாநில தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், இரண்டு ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்த சில தினங்களுக்கு முன்பாக, இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கூட்டம் நடத்தின. பாலஸ்தீனத்தின் மீதான இந்த திடீர் பாசத்திற்கு காரணம், வரவிருக்கும் சட்டசபை தேர்தல் தான்! இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு தாங்கள் மட்டுமே ஆதரவான கட்சி என்று காட்டிக் கொள்ளவும், நடிகர் விஜயின் வருகை, சிறுபான்மை ஓட்டை பிரித்துவிடுமோ என்ற பயத்தாலும் எழுந்த பாசம் இது! உண்மையிலேயே இவர்களுக்கு இஸ்லாமியர் மீது அக்கறை இருந்தால், சீனாவில் பல காலமாக தாக்கப்பட்டு வரும் உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாமே? இவர்களது அக்கறை, இஸ்லாமியர்கள் மீது அல்ல; இஸ்லாமியர்களின் ஓட்டுகள் மீது மட்டுமே! பாலஸ்தீன ஆதரவு பிரசாரம் என்ப தெல்லாம் ஒரு திசைதிருப்பலே! lll எது நிலையானது? த.யாபேத்தாசன், பேய்க்குளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: தேர்தல் வந்தாலே ஓட்டுக்கு பணமும், இலவசத் திட்டங்களும் சேர்ந்தே வந்துவிடுகின்றன. பெரும்பான்மை மக்கள், ஓட்டுக்கு பணம் எதிர்பார்க்கின்றனர் என்பது தான் நிதர்சனம். 'அரசியல்வாதிகள் கொள்ளையடிக்காமல் இருக்கப் போவதில்லை; அப்படியென்றால், நமக்கு தந்தால் என்ன...' என்ற கேள்வி மக்களிடம் இயல்பாகவே எழுகிறது. அப்படியென்றால், அரசியல்வாதிகள் நேர்மையானவர்களாக இருந்தால், மக்கள் பணம் வாங்க மாட்டார்கள் என்பது தெளிவாகிறது. அவ்வகையில், நேர்மையான அரசியல்வாதிகளால் மட்டும் தான் ஓட்டுக்கு பணம் என்ற மோசமான கலாசாரத்திலிருந்து மக்களை விடுவிக்க முடியும். மற்றபடி மக்களிடம் புரையோடிப் போயுள்ள இந்த இழிநிலை எக்காலத்திலும் தவிர்க்கப்படாது. இலவச திட்டங்களை செயல்படுத்தும் அரசு, அதனால், கிடைக்கக்கூடிய நன்மைகளை பட்டியலிடுகின்றனர். அதேநேரம், ஓர் அரசு தங்கள் நலனுக்காக இலவசங்களை அறிவித்துக் கொண்டு காலம் தள்ள முடியுமா என்பதும் கேள்விக்குறி தான். இலவச திட்டங்களால் நிதி நெருக்கடி என்று அரசு கூறினால், 'மக்கள் தொகையில் மிக குறைவாக இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏன் மிக அதிகமாக செலவிட வேண்டும்?' என்று வாதிடுவோரும் இருக்கின்றனர். இலவசங்களால் மக்கள் அடையும் நன்மைகளை விட, அரசியல்வாதிகள் அடையும் சுயலாபம் மிக அதிகம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அரசு தேவையானவர்களுக்கு மட்டும் இலவசங்கள் அறிவித்தால் போதுமானது. அனைவருக்கும் இலவசம் என்பது நகைப்புக்கிடமாய் உள்ளது. இலவச பேருந்துகளில், அன்றாட கூலி வேலை செய்யும் பெண்களை ஏற்றிச் சென்றால் போதுமானது. அரசு ஊழியர்களாகிய பெண்களும், ஆசிரியைகளும் இலவச பேருந்தில் சென்றால், அது கேலியாகத் தான் பார்க்கப்படும். மேலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதின் வாயிலாக தான், வறுமை ஒழிப்பு சாத்தியமாகும்; மக்கள் கவுரவமாக வாழ முடியும். இலவச திட்டங்களால் வறுமை ஒழியப் போவதும் இல்லை. மக்களின் வாழ்க்கை தரம் உயரப் போவதும் இல்லை. எனவே, மாநிலத்தின் நீடித்த வளர்ச்சிக்கு கல்வி, மருத்துவம் மட்டுமே இலவசமாக இருக்க வேண்டும். அப்போதுதான், பொருளாதாரம் தன்நிறைவை அடையும். இல்லையெனில், கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் எப்போதும் முதல் இடத்திலேயே நிலைத்து விடும்! lll இலங்கை செல்ல விரும்புவோரை அரசே அனுப்பி வைக்கலாமே! கே.சேது, ராமநாதபுரத்தில் இருந்து எழுதுகிறார்: பல ஆண்டுகளுக்கு முன், இலங்கையில் இனக்கலவரம் நடந்தபோது ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் தமிழகத்தில் அனேக நகரங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, வாழ்ந்து வருகின்றனர். தற்போது, இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்ற பின், நிலைமை சீரடைந்து, நாடு இயல்பு நிலைக்கு திரும்புவதால், இங்கு அகதிகளாக தங்கி இருப்போரில் பலர் மீண்டும் இலங்கைக்கு செல்ல விரும்புகின்றனர். இலங்கை செல்ல பணம் இல்லாதவர்கள் கள்ளத் தோணியில் செல்லும் போது, அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். சமீபத்தில், ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு படகில் கள்ளத்தனமாக சென்ற இலங்கை தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எனவே, இங்கிருக்கும் இலங்கை தமிழர்களிடம், எவருக்கெல்லாம் இலங்கை செல்ல விருப்பம் இருக்கிறது என்று கேட்டு, அவர்களை சட்ட பூர்வமாக தமிழக அரசே அனுப்பி வைக்கலாம். இதனால், தேவையற்ற கைது நடவடிக்கையில் அவர்கள் கஷ்டப்பட மாட்டார்கள். நமக்கும், சுமை குறையும். அரசு ஆலோசிக்குமா? lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
அக் 15, 2025 07:37

இன்று, இது உங்கள் இடம் பகுதியில் கடிதம் எழுதியுள்ள மூன்று பேருமே மிகவும் நல்ல கருத்துக்களையே பதிவு செய்துள்ளார்கள். இவைகள் தற்போதுள்ள ஆளும் கட்சிக்கும், பிற தமிழக அரசியல்வாதிகளுக்கும், ஒரு மிகச் சிறந்த அறிவுரை என்றே கூறலாம். ஆனால், ஊழல் திமுகாவைப் பொறுத்தமட்டில், இந்த அறிவுரைகள் செவித்திறன் அற்றவர்களின் காதில் ஊதிய சங்கு போலத்தான் இருக்கும். அவர்களின் எண்ணமெல்லாம் பொது மக்களிடமிருந்து எப்படிக் கொள்ளை அடிப்பது என்பதைப்பற்றித்தான் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை