ஏளனத்திற்கு ஆளாகாதீர்கள் சிதம்பரம்!
எம்.தர்மதுரை, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதிகளை மறந்த ஒரு நிதியமைச்சரால் தயாரிக்கப்பட்ட, மறக்கப்பட வேண்டிய பட்ஜெட் இது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாத சூழலில், மூலதன செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன. விவசாயம், கிராமப்புற வளர் ச்சிக்கான நிதியில், 60,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது' என்று, மத்திய அரசின் பட்ஜெட் மீது குற்றஞ்சாட்டியுள்ளார், முன்னாள் நிதியமைச்சர் சிதம் பரம். எதிர்க்கட்சியினர் என்றாலே, ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி பூரித்து மகிழ்வது தானே அவர்களது பிரதான வேலை. இதில் சிதம்பரம் மட்டும் விதிவிலக்கா என்ன! இன்றுவரை காங்., கட்சியை கூட்டணியில் வைத்து சுமந்து கொண்டிருக்கும் தி.மு.க., 2021 சட்டசபை தேர்தலின் போது வாரி வழங்கிய வாக்குறுதிகளில், எத்தனை அமலுக்கு வந்துள்ளது என்று சிதம்பரம் கூறுவாரா அல்லது கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று, ஸ்டாலினை கேட்கும் துணிவு தான் சிதம்பரத்திற்கு இருக்கிறதா? இதே சிதம்பரம், 2007ல் நிதியமைச்சராக இருந்த போது, தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து, ஸ்டார் 'டிவி'யின் முன்னாள் சி.இ.ஓ., பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜி நடத்தி வந்த ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திற்கு, மொரிசியஸ் நாட்டின் மூன்று நிறுவனங்களிடம் இருந்து, 305 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு வழங்கப்பட்டதில் ஊழல் செய்தவர்; அதற்காக, 2017 ல் சிறைத்தண்டனை அனுபவித்து, தற்போது ஜாமினில் உள்ளார். அதேபோன்று, 2011ல் மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்தபோது, இவரது புதல்வரும் இன்றைய காங்., - எம்.பி.,யுமான கார்த்தி, தன் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி, 250 சீனர்களுக்கு விசா வழங்க கையூட்டு பெற்று, சிறை சென்றார். இதையெல்லாம் மறந்து விட்டு, இன்று ஏதோ நாட்டு நலனில் அக்கறை உள்ளவர் போல், பட்ஜெட் குறித்து பரிதவிக்கிறார். விமர்சனங்களை முன்னிறுத்தும் முன், அதற்கு தனக்கு சிறிதளவேனும் தகுதி இருக்கிறதா என்று சீர்துாக்கிப் பார்த்து விட்டு சிதம்பரம் கூறினால், அது, ஏளனத்திற்கு ஆளாகாது! பா.ஜ., அரசின் திட்டத்தை அறியாத உதயநிதி! எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,விற்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், கூடுதல் இலவசங் களைக் கொடுத்து, மக்களின் வாயை அடைப்பது எப்படி என்று ஆலோசிக்கத் துவங்கி விட்டது. கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. 'நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும்' என்று வாய்ச்சவடால் விட்ட இப்போதைய அமைச்சர் உதயநிதி, நீட் தேர்வை ரத்து செய்யமுடியாமல் போனதற்கு, மத்திய அரசின் சதிதான் காரணம் என்று கூறி, தந்திரமாக தப்பித்துவிட்டார். தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை பெருகி வருவதைக் கண்டு, வேதனையில் துடித்துப்போன, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தே மதுவிலக்குக்கு தான்' என்று உறுதியளித்தார். ஆட்சிக்கு வந்த பின்போ, 'நாங்கள் அப்படி எந்த உறுதியும் அளிக்கவில்லையே...' என்று கூறி, கொஞசம்கூட கூச்சமே இல்லாமல் நழுவிவிட்டார். 'கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், தேர்தலுக்கு முன் போராட்டம் வெடிக்கும்' என்று பம்மாத்து காட்டிய அரசு ஊழியர் சங்கமோ, தி.மு.க., வாசித்த மகுடிக்கு மயங்கி, பெட்டிப் பாம்பாய் அடங்கி விட்டது. ஆனாலும், தமிழகத்தில் எங்காவது, 'விசில்' சத்தம் கேட்டாலே, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நினைவுக்கு வந்து, தி.மு.க.,வினரின் துாக்கம் கெடுகிறது. இதனால், 'பொது இடங்களில் விசிலடிப்பது குற்றம்' என்று சட்டசபையில் சட்டம் இயற்றினாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு தோல்வி பயம், தி.மு.க.,வினரை தொற்றிக்கொண்டுள் ளது. அதனால், அரசு ஊழியர்கள், தி.மு.க., வுக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்றும், சிறுபான்மையினர் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் கெஞ்சத் துவங்கியுள்ளனர். இன்னும் ஒருபடி மேலே சென்று, 'தி.மு.க., தான் முஸ்லிம்களை பாதுகாக்கும் கட்சி; எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு, ஸ்டாலின்தான் உதவித்தொகை வழங்கி வருகிறார்; சிறுபான்மையின மாணவர்கள் படிக்கக்கூடாது என்று, பா.ஜ., நினைக்கிறது' என்று வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியுள்ளார், துணை முதல்வர் உதயநிதி. பூனை கண்ணை மூடிக் கொண்டு, 'உலகம் இருண்டு விட்டது' என்று கூறுவது போல் உள்ளது, உதயநிதியின் பேச்சு! மத்திய அரசின், 'ப்ரி மெட்ரிக்' திட்டத்தில், பள்ளி - கல்லுாரி மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றன. 'பேகம் ஹஸ்ரத் மஹால்' எனும் பெயரில், ஒன்பதாம் வகுப்பு முதல், 12ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுமியருக்கு நிதியுதவி வழங்குகிறது, மத்திய அரசு. 'மவுலானா ஆசாத்' தேசிய உதவித்தொகை திட்டத்தில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிதி உதவியும், 'நயா சவேரா' என்ற திட்டத்தின் வாயிலாக, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளுக்கு இலவச பயிற்சியும் வழங்குகிறது. 'பி.எம்.விகாஸ்' என்ற திட்டத்தின் மூலம் சுயதொழில் துவங்க நிதி உதவியும், 'பி.எம்.ஜே.வி.கே' என்ற திட்டத்தின் வாயிலாக, சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளுக்கு என, மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இது எதையும் அறியாமல், 'சிறுபான்மை மக்கள் படிக்க கூடாது என்று பா.ஜ., நினைப்பதாக' விஷத்தை கக்கிஉள்ளார், உதயநிதி. கடந்த 2025 -26 ல் சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்திற்கு மட்டும் 3,350 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, மோடியின் பா.ஜ., அரசு. அதில், கல்வி வளர்ச்சிக்கு மட்டும் ஒதுக்கியுள்ள தொகை, 678 கோடி ரூபாய். ஆனாலும், எந்த இடத்திலும் நாங்கள் தான் உங்களுக்கு இவ்வளவு செய்கிறோம்; எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று, சிறுபான்மை மக்களிடம் மோடி கேட்கவில்லை; அனைத்து மக்களையும் சமமாக மதித்து, அவர்களுக்கான கடமையாக இதைச் செய்கிறார், பிரதமர். ஆனால், தி.மு.க.,வோ, பிச்சை போடுவது போல் ஒரு சில இலவச திட்டங்களை அறிவித்து விட்டு, அதைக் கூறியே ஓட்டுப் பிச்சை எடுத்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, பெரும்பான்மை மக்களோ, சிறுபான்மை மக்களோ எவராக இருந்தாலும், மக்களுக்கான கடமையை செய்வது அவர்களது பொறுப்பே தவிர, அதில் பெருமைப்பட எதுவும் இல்லை!