உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  அரக்க குணம் படைத்தோர் அடங்குவர்!

 அரக்க குணம் படைத்தோர் அடங்குவர்!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு காலத்தில், துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரவு, 9:00 மணிக்கு ரோந்து சென்ற போலீசார், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேல் கடையை திறந்து வைத்த குற்றத்திற்காக, ஜெயராஜ் மற்றும் அவரது மகனை விசாரணை என்ற பெயரில் கொடூரமாக தாக்கியதில் இருவரும் மரணமடைந்தனர். இது, தமிழகத்தையே அதிர வைத்தது என்றே சொல்லலாம்! மாநில அரசின், சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் இருந்த இவ்வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டதுடன், தன் நேரடி கண்காணிப்பு விசாரணையில் எடுத்துக் கொண்டது, மதுரை உயர் நீதிமன்றம். தற்போது, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல் துறை அதிகாரிகள் ஒன்பது பேருக்கும், மரண தண்டனை மற்றும் 1 கோடியே, 40,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளனர், நீதிபதிகள். மதுரை உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடந்ததால் தான், குற்றவாளிகளால் தப்பிக்க முடியவில்லை. இல்லை என்றால், நீதிபதி முத்துக்குமரனின் கருத்துப்படி, உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் முன்பே, இவ்வழக்கும் குழி தோண்டி புதைக்கப் பட்டிருக்கும்! பொதுவாக, இதுபோன்ற, 'லாக்கப்' மரணங்களில், போதிய சாட்சிகள் இல்லாத நிலையில், குற்றம் செய்த போலீசார் தப்பித்துக் கொள்வர். ஏனெனில், தவறு செய்த காவல் துறை அதிகாரியை, முடிந்த வரை காவல் துறை காப்பாற்றவே முயற்சி செய்யும். ஆனால், சாத்தான்குளம் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவரே பெண் காவலர் ரேவதி தான். இவர், கடைசி வரை உண்மையை மறைக்காமல், உறுதியாக நின்று சாட்சி அளித்ததால் தான், இன்று குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப் பட்டுள்ளது. மேலும், இருவரின் உடல் முழுதும் இருந்த காயங்கள், அவர்கள் மீது எந்தளவு கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்கு சாட்சியாக இருந்துள்ளது. காவல் நிலைய விசாரணைக்கு அழைத்து வரப்படுவோர், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து, உச்ச, உயர் நீதிமன்றங்கள் பல விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், அவை சாத்தான்குளம் வழக்கில் மட்டுமல்ல; 2025ல் சிவகங்கை மாவட்டம் மடப்புறம் காளி கோவில் காவலாளி அஜித்குமார், காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கிலும் பின்பற்றவில்லை. சாத்தான்குளம் வழக்கை பொறுத்தவரை, கொலை செய்யப்பட்ட இருவரும் வணிகர்கள். அவர்கள் செய்ததும் சிறு குற்றம் தான். அதற்காக, நீதிமன்றத்தில் சில நுாறு ரூபாய் அபராதம் செலுத்தினாலே போதும்; ஆனால், அவர்களை கொடிய குற்றவாளிகளை போன்று, சிறிதும் மனிதாபிமானம் இல்லாமல் அடித்துக் கொன்றுள்ளனர் என்றால், இவர்கள் மீது எக் காரணம் கொண்டும் இரக்கம் காட்டக் கூடாது. அப்போது தான், எளிய மக்கள் மீது தங்கள் அதிகாரத்தை பிரயோகிக்க நினைக்கும், இதுபோன்ற அரக்க குணம் படைத்த காவலர்கள் அடங்குவர்!

நேரத்தை வீணடிக்க வேண்டாம்!

க.சத்தியமூர்த்தி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ., வெற்றி பெறுவதற்கான வியூகத்தை, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் முன்னெடுத்து வருகிறது. தமிழக மக்களின் அரசியல் நிலைப்பாடு வேறு; வடமாநில மக்களின் அரசியல் நிலைப்பாடு வேறு. வட மாநிலங்களில், கடவுள் ராமரை பெயரைச் சொல்லி ஓட்டு வாங்கி விடலாம்; ஆனால், தமிழகத்தில் முடியாது. கடந்த பார்லிமென்ட் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., 11 சதவீதம் ஓட்டு வாங்கியதற்கு காரணமே, அண்ணாமலையின் திராவிட பாணியிலான அதிரடி அரசியலால் தான். ஏற்கனவே, கூட்டணி தொகுதி பங்கீட்டில் பலவீனமான தொகுதிகளை பெற்றதால், கட்சி தொண்டர்களே அவநம்பிக்கையில் உள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் பெரியண்ணன் பாணியில் வகுப்பு நடத்திக்கொண்டிருக்கிறது . ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் தேசப்பற்றுள்ள, அப்பழுக்கற்ற இயக்கம் என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரம், அவர்கள் தற்போதைய தமிழக பா.ஜ.,வின் கட்டமைப்பை அறியாமல், தேர்தல் வியூகம் என்ற பெயரில், தெருவில் உள்ளவர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து ஓட்டு கேளுங்கள் என்றும், சக்திகேந்திர பொறுப்பாளர்கள் பூத்தில் உள்ள வாக்காளர்களை கூப்பிட்டு ஓட்டு போட சொல்லுங்கள் என்றும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இன்று, பா.ஜ.,வில் உள்ள மேல்மட்ட நிர்வாகிகள் முதல், கீழ்மட்ட நிர்வாகிகள் வரை, 60 - 70 சதவீதம் பேர் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள். குறிப்பாக, இரு திராவிட கட்சிகளில் இருந்து வந்தவர்கள். அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அவர்களுக்கு தெரியாத தேர்தல் பணிகளையா, இவர்கள் சொல்லிக் கொடுத்து விடப் போகின்றனர்? இன்னும் சில நாட்கள் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் இப்படி ஆலோசனை கூட்டம் நடத்தினால், தேர்தல் வேலை செய்ய ஒரு பா.ஜ.,வினர் கூட இருக்க மாட்டார்கள்; அத்தனை பேரும் ஓடி ஒளிந்து கொள்வர். ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் உருப்படியாக ஏதாவது செய்வது என்றால், ஹிந்துத்துவா பற்றுள்ள மக்களை அணுகி, அவர்களை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடச்சொல்லலாம்; அதை விடுத்து தேர்தல் நிலவரம் தெரியாமல் பா.ஜ., தொண்டர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்!

நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா?

ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்: திண்டுக்கல் மாவட்டம் ஆர்.எம்., காலனியில் உள்ள நாடக மேடையில், தனியார் தொலைக்காட்சி சார்பில், சமீபத்தில் தேர்தல் விவாத நிகழ்ச்சி நடந்தது. அதில், வேட்பாளர்கள் இடையே ஏற்பட்ட விவாதம் கலவரமாக வெடிக்க, தி.மு.க.,வி னர் நடத்திய வன்முறையால், நெறியாளருக்கு மண்டை உடைந்தது. நெறியாளருக்கே இந்த நிலை என்றால், எதிர்த்து கேள்வி கேட்கும் மக்களின் நிலை என்னவாகும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 'மரங்கள் ஓய்வெடுக்க நினைத்தாலும், காற்று விடுவதில்லை' என்பது போல், தி.மு.க.,வின் முக்கியப்புள்ளிகள் அமைதியாக இருந்தாலும், தொண்டர்கள் போர்வையில் உலா வரும் அக்கட்சி குண்டர்கள், தங்கள் அதீத விசுவாசத்தை காட்டுவதாக எண்ணி, இதுபோன்ற கலவரங்களில் ஈடுபட்டு, பொதுமக்களிடையே ஓர் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். வேட்பாளர்களுக்கான விவாதத்தில், தொகுதியின் வளர்ச்சி குறித்தும், எதிர்கால திட்டங்கள் சார்ந்தும் விவாதிக்க வேண்டுமே தவிர, அங்கே தனிமனித துதியும், அநாகரிகமான எதிர்மறை விமர்சனங்களும் இடம்பெறக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் இப்படித்தானே நடந்து கொள்வர்? இவர்களிடம் நியாய த்தை எதிர்பார்க்க முடியுமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஏப் 11, 2026 18:56

சாத்தான்குளம் காவலர்களின் அப்பீல் மனுக்களை உச்சநீதிமன்றம் இரக்கம் காட்டாமல் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்.


D.Ambujavalli
ஏப் 11, 2026 06:54

‘சும்மா இருந்த சங்கை ….’ என்பது போல் பாஜவுக்கு வரும் ஓரிரு வெற்றிக்கும் வேட்டு வைக்கத்தான் RSS தலையீடு என்று தோன்றுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை