உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இழிவுபடுத்துவது சரியா?

இழிவுபடுத்துவது சரியா?

ஸ்ரீ.பூவராகவன், காங்கேயத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்குத் திரண்டிருக்கும் ஆதரவு, அக்கட்சியினரே சொல்வது போல் எதிர்பாராத அளவில் தான் உள்ளது. காரணம், எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் எப்போதுமே அரசியல் இருந்திருக்கிறது. நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களிலும் ஏதோ ஒரு வடிவத்தில் அரசியல் இருந்துள்ளது. கமல்ஹாசனும் தன் திரைப்படங்களில் அரசியல் பேசி வந்துள்ளார், வருகிறார். அதனால், அவர்களுக்கு ஓர் அரசியல் நோக்கம் இருந்தது என்று சொல்லலாம். ஆனால், விஜயின் திரைப்படங்களில் சர்க்கார் தவிர வேறு எதிலும் அரசியல் பேசியதாக நினைவில் இல்லை. தி.மு.க.,வின் சன் பிக்சர்ஸ் தான், 2018ல் சர்க்கார் திரைப்படத்தை தயாரித்தது. அப்படத்தின் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினர். அதில், தி.மு.க., தலைமையின் குடும்பத்தினர் சிலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். அப்படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின், அரசியலுக்கு வந்துள்ளார் விஜய். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறார் என்பதற்கான திட்டங்கள் எதுவும் அவரிடம் இல்லை. ஆனாலும், குறிப்பிட்ட சதவீத மக்கள் இவரை நோக்கி ஈர்க்கப்பட்டு, அவரது கூட்டங்களுக்கு சாரை சாரையாக வருகின்றனர். இவர்களை, சமூக வலை தளங்களில், 'தற்குறிகள், அறிவிலிகள்' என்று அடையாளப்படுத்துகின்றனர்,ஆளுங்கட்சியினர். அதேநேரம், சில நாட்களுக்கு முன், 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்று விழா எடுத்து, இம்மக்களை அடையாளப்படுத்தி கொண்டாடினர், தி.மு.க.,வினர். இந்த, 'அறிவுள்ள' அல்லது அவர்கள் கூறுவது போல், 'அறிவற்ற' மக்கள், விஜய்க்கு தங்கள் ஆதரவை தருவது ஏன்? ஆளும் கட்சி, ஆண்ட கட்சி என்ற இரண்டையும் தவிர்த்து, எத்தனையோ பிற கட்சிகள் இருக்கின்றனவே, அக்கட்சிகள் மீது அவர்களுக்கு ஏன் நம்பிக்கை வராமல் போனது? காரணம், கூட்டணி என்ற பெயரில் அக்கட்சிகள் செய்யும் சந்தர்ப்பவாத அரசியல்! அதனால் தான், மிகைப்படுத்தப்பட்ட வல்லமை பொருந்தியவராக திரையில் தோன்றும் நடிகர்கள், நிதர்சனத்திலும் அதுபோன்று வல்லமை மிக்க தலைவராக இருந்து விட மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு, நடிகர்களின் பின் மக்களை நகர வைக்கிறது. அத்தகைய மக்களை, 'தற்குறி கூட்டம்' என்று அடையாளப்படுத்தி, இழிவு செய்வது, ஜனநாயக அணுகுமுறை அல்ல! lll பிராய்லர் கோழியா விஜய்? க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ---- கரூர், வேலுசாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரசாரம் நடக்க இருந்த இடத்திற்கு, ஆறு மணி நேரம் தாமதமாக வந்த நடிகர் விஜய், தான் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு செய்யவிருக்கும் நலத்திட்டங்கள் குறித்து எதுவும் பேசவில்லை. மாறாக, பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு, 'பாட்டிலுக்கு, 10 ரூபாய்' என பாட்டு பாடி அவர் பாணியில் நடித்துக் கொண்டிருந்தார். கூட்ட நெரிசலும், காலையில் இருந்து தண்ணீர் கூட இல்லாமல் பல மணி நேரமாக நின்று இருந்ததிலும் சிலர் மயங்கி விழ, அடுத்த சில நிமிடங்களில் பலரின் அழுகை, மரண ஓலம்... அக்கட்சி தலைவர் விஜயோ, பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி கார் வாயிலாக திருச்சி வந்து, தனி விமானத்தில் சென்னை வந்து அவரது பண்ணை வீட்டுக்குள் புகுந்து கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல, செய்தியாளர்களை கூட திரும்பிப்பார்க்கவி ல்லை. எத்தகைய மனிதாபிமானமும், வீரமும் நிறைந்த ஒப்பற்ற தலைவர் இவர்! இவரை தமிழக மக்கள் தவற விடலாமா? சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலர் பலவிதமான கண்டனம் தெரிவித்துள்ளனர் இவர் பண்ணை வீட்டு கதவை தாள் போட்டுக் கொண்டவர் தான், பேச்சும் காணோம்; மூச்சும் காணோம்! இவரைப் போன்று தான், நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். அவருக்கும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. ஆனால், அவர் மேடைகளில் கட்சிக்கொள்கை முழக்கங்கள், திட்டங்கள் குறித்து பேசுகிறாரோ இல்லையோ, கூடியிருக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்து தான் பாதி நேரம் பேசுவார். 'ஏய்... அங்க பொம்பளையாளுங்க பக்கம் போகாத...' என்றும், 'மின் கம்பத்திலிருந்து கீழ இறங்கு...' என்றும் அதட்டுவார். கட்டுப்பாடின்றி மக்கள் முண்டியடித்தால், நாக்கை துருத்தி, சுட்டெரிப்பது போல் கண்களை உருட்டுவார். அப்போதும் கூட்டம் கேட்கவில்லை என்றால், அவரே கீழே இறங்கி விலக்கப் பார்ப்பார். சிலசமயம், கட்சிக்காரர்கள் என்று கூட பார்க்காமல் கையோங்கிவிடுவார். அதேநேரம், அவர்களை அன்பாக ஒரு பேப்பர் விசிறியால் விசிறியும் விடுவார். உடல்நிலை தளர்ந்துபோன நிலையிலும், பொதுக்கூட்டங்களில் இவற்றை செய்து கொண்டிருந்தார். அதைத்தான் ஊடகங்கள் மேடையில் அவர் குழந்தைபோல நடந்துகொள்கிறார், குடித்து விட்டு இப்படி செய்கிறார் என பகடி செய்தன. அவரின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் முடியும் போது, 'தி.மு.க., ஆட்சியை அகற்றுவோம்; நமது கட்சிக்காக உழையுங்கள்' என வேண்டுகோள் வைக்க மாட்டார். 'எல்லாரும் பத்திரமாக அவங்கவங்க வீட்டுக்கு போகணும்; நான் துாங்கமாட்டேன். 'நீங்க எல்லாம் நல்லபடியா வீட்டுக்கு போய்ச்சேர்ந்தாச்சான்னு கேட்டுட்டே இருப்பேன்...' என்று கண்டிப்போடு வேண்டுகோள் வைப்பார். அவருக்கு மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியபோதும், எந்த ஓர் அசம்பாவிதமோ, உயிரிழப்புகளோ நிகழ்ந்ததில்லை; நிகழவும் அவர் விட்டதில்லை. ஒருவேளை விஜய் கூட்டத்தில் நடந்தது போன்று விஜயகாந்த் கூட்டத்தில் அசம்பாவிதம் நடந்திருந்தால், அவர் அவ்விடத்தை விட்டு ஓடியிருக்க மாட்டார். நிச்சயம், அவரே கூட்டத்தை கட்டுப்படுத்த களத்தில் இறங்கியிருப்பார். ஏனெனில், நடிகர் சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்திற்கு மத்தியில் வேட்டியை மடித்துக்கட்டி இறங்கி வேலை செய்தவர் அவர்! சினிமாவில் மட்டுமல்ல; நிஜத்திலும் கதாநாயகனாக, தன் கட்சியினருக்கு நல்ல தலைவனாக திகழ்ந்தார். சினிமா நடிகர் என்பதை தாண்டி, இதுபோன்று எந்த தகுதியும் விஜய்க்கு இல்லை! எனவே, பாதுகாப்பாக கூண்டுக்குள் வளரும் பிராய்லர் கோழி போன்ற நடிகர் விஜய், அரசியலில் அரிதாரம் பூச ஆசைப்படுவதை விட, சினிமாவிலேயே அதைத் தொடரலாம்! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை