உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இதற்கு மட்டும் நிதி இருக்கிறதா?

இதற்கு மட்டும் நிதி இருக்கிறதா?

ஆர்.எஸ்.கனகவேல், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'குடிப்பது கூழ்; கொப்பளிப்பது பன்னீராம்' என்பது போல், தமிழகம், 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. இந்தியாவிலேயே கடன் வாங்கும் மாநிலங்களில் முதலிடத்தில் இருக்கிறது. இதில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் முஸ்லிம் மாணவியருக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின். ஹிந்து, கிறிஸ்துவர் மற்றும் முஸ்லிம் என அனைவரும் சேர்ந்து பயிலும் இடத்தில், முஸ்லிம் மாணவியருக்கு மட்டும் மாதம், 1,000 ரூபாய் கொடுத்தால், பிற மத மாணவியர் வேதனைப்பட மாட்டரா அல்லது அவர்கள் பெற்றோர் தான் அரசின் செயலை பெருந்தன்மையுடன் பாராட்டுவரா? முதலில் எதற்கு சிறு குழந்தைகளுக்கு, 1,000 ரூபாய்? மிட்டாய் வாங்கி சாப்பிடவா? அரசின் அனைத்து நலத் திட்டங்களும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக இருக்கும்போது, இஸ்லாமிய சிறுமியருக்கு மட்டும் தனிச் சலுகை ஏன்? சிறு குழந்தைகளிடம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தவா? நிரந்தரமாக பணிபுரியும் நர்ஸ்களுக்கு இணையாக, ஒப்பந்த முறையில் பணிபுரியும் நர்ஸ்களுக்கும் தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை உதாசீனப்படுத்திய தமிழக அரசுக்கு, 'இலவச திட்டங்களுக்கு பணம் இருக்கிறது; நர்ஸ்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா?' என, உச்ச நீதிமன்றம் குட்டு வைத்தது. ஆனாலும், ஆட்சியாளர்கள் திருந்துவதாக இல்லை. இதோ, இஸ்லாமியரின் ஓட்டுக்காக பள்ளிச் சிறுமியருக்கு பண உதவி அளிக்க முன்வந்துள்ளது. அதேநேரம், அரசு மாதிரி பள்ளிகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளர், நுாலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், துாய்மை பணியாளர், இரவு காவலாளி, தோட்டக்காரர் ஆகியோருக்கு மூன்று மாதங்களாக சம்பளமே கொடுக்கவில்லை. இவர்களது மாத சம்பளம் ஒன்றும் லட்சக்கணக்கில் இல்லை. நைட் வாட்ச்மேன், தோட்டக்காரர் ஆகியோருக்கு தொகுப்பு ஊதியமாக மாதம், 10,000 ரூபாய். மற்றவர்களுக்கு, 12,000 ரூபாய் தான் சம்பளம். இதையே கொடுக்க முடியாத திராவிட மாடல் அரசுக்கு, முஸ்லிம் சிறுமியருக்கு, மாதம், 1,000 ரூபாய் கொடுக்க மட்டும் பணம் இருக்கிறதா என்ன? அள்ளி முடிய கூந்தல் இல்லாவிட்டால் என்ன... கூடைப் பூவை தலையில் சூடுவேன் என்றாளாம் ஒருத்தி... அதுபோல் உள்ளது திராவிட மாடல் அரசின் நிர்வாக லட்சணம்!  அரசு யோசிக்குமா? சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: தமிழகம் முழுதும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில், இதுவரை, 7.23 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது நல்ல விஷயம் தான் என்றாலும், பெரும்பாலும் இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தி.மு.க.,வினர் தான் செய்கின்றனர். அரசு நிகழ்ச்சியை கட்சியி னர் முன்னின்று நடத்துவது ஏன்? மேலும், அனைத்து அரசுத் துறைகளிலும், இ - சேவை மையம் வாயிலாகவும், திங்கள் கிழமைதோறும் கலெக்டர் அலுவலகங்களில் குறை தீர்க்கும் நாள் என்ற பெயரிலும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் எதற்கு இந்த புது திட்டம்? ஏற்கனவே, நடைமுறையில் உள்ள பழைய விஷயத்திற்கு முலாம் பூசுவது தேவையா? அடுத்து வரும் ஆட்சியாளர்களும் இதையே தொடர்ந்தால், இதுபோன்ற முகாம்களில் மட்டுமே தங்கள் குறைகளுக்கு தீர்வு காண முடியும் என்று மக்கள் எண்ணும் நிலை வந்துவிடுமே! அவ்வாறு ஏற்பட்டால் அரசு அலுவலர்கள் எதற்கு இருக்கின்றனர்? அத்துடன், தங்கள் பணியின் செயல்பாடுகளை இதுபோன்று ஆளுங்கட்சியினர் தீர்மானித்து, அவர்கள் சொல்வதை மட்டுமே தாங்கள் கேட்க முடியும் என்ற நிலையில், அரசு ஊழியர்களுக்கு தங்கள் பணியின் மீது எப்படி பற்று ஏற்படும்? இதனால், கட்சி சாராத மக்கள், அரசு அலுவலகங்கள் செல்வதற்கு பதில், அந்தந்த வார்டு செயலர்களை நோக்கி செல்லும் நிலை ஏற்படுமே! உண்மையில் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமென்றால், அதை அரசு ஊழியர்களே செய்யட்டுமே! கட்சி பெயரை வைத்து எதற்கு இந்த இரட்டை செலவு?  சிதம்பரம் வெளியிடுவாரா? எஸ்.எஸ்அபிநவ், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் 2026 சட்டசபை பொதுத்தேர்தலில் முதன் முறையாக ஓட்டளிக்க இருக்கும் 20 வயது வாக்காளன் நான். நாடு விடுதலை அடைந்து, 79 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு சுதந்திர போராட்டங்களும் தெரியாது; விடுதலைக்கு பின், 50 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி என்னென்ன செய்தது என்பதும் தெரியாது. இந்நிலையில், பிரதமர் மோடி சமீபத்தில் மணிப்பூர் சென்று, அந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக திட்டங்களையும், அதற்கான நிதி ஆதாரத்தையும் அறிவித்து விட்டு திரும்பிஉள்ளார். அது குறித்து, 'இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை, பிரதமர் மோடி இரண்டு ஆண்டு களாக கண்டுகொள்ளாத நிலையில் , சில நாட்களுக்கு முன் அங்கு சென்றவர், அம்மாநில மக்களிடம் வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லை. மாறாக, பல திட்டங்களை அறிவித்து விட்டு வந்துள்ளார். 7,300 கோடி, 1,250 கோடி ரூபாய் திட்டங்களால் அம்மக்களை விலைக்கு வாங்கி விட முடியுமா?' என விமர்சித்துள்ளார், முன்னாள் நிதியமைச்சரும், காங்., - எம்.பி.,யுமான சிதம்பரம். எனக்கு தெரிந்து வாஜ் பாய் ஆட்சிக்கு பின், மத்தியில், பா.ஜ., அரசு கடந்த 11 ஆண்டுகளாகத்தான் ஆட்சியில் அமர்ந்துள்ளது. அதற்கு முன், 50 ஆண்டு கள் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்துள்ளது. மணிப்பூர் இனக்கலவரம் நேற்றோ அதற்கு முந்தைய தினமோ துவங்கப்பட்டதல்ல; 50 ஆண்டு களுக்கும் மேலாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் பிரச்னை. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையினரான மெய்டி இனத்தினருக்கும், சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் கூகி பழங்குடி மக்களுக்கும் இடையில் வெடித்த வன்முறையே கலவரத்திற்கு காரணம். பா.ஜ., ஆட்சிக்கு வரும் முன் நேரு, இந்திரா, ராஜிவ், நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் என, பலர் பிரதமராக இருந்துள்ளனர். அவர்களில் எத்தனை பேர் மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான மெய்டி - கூகி மக்களை நேரில் சென்று பார்த்து, ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை முடுக்கி விட்டிருக்கின்றனர் என்ற பட்டியலை சிதம்பரம் வெளியிட்டால், 2026 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்க, என்னை போன்ற வரலாறு அறியாத அப்பாவி வாக் காளர்களுக்கு பேருதவியா க இருக்கும். சிதம்பரம் பட்டியலை வெளியிடுவாரா? 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை